Published : 26 Apr 2023 06:28 PM
Last Updated : 26 Apr 2023 06:28 PM

புதிய பறவையினம் ‘அனுமான் உப்புக்கொத்தி’ இனப்பெருக்க இடம் கண்டுபிடிப்பு: தமிழக ஆய்வாளர்கள் முயற்சிக்கு பலன்

அனுமான் உப்புக்கொத்தி

மதுரை: சமீபத்தில் புதிய பறவையினமாக அறிவிக்கப்பட்ட ‘அனுமான் உப்புக்கொத்தி’, இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்வதை தமிழக பறவை ஆய்வாளர்கள் தங்கள் 10 ஆண்டு தொடர் ஆய்வின் மூலம் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளனர்.

மதுரை ‘இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை’யை சேர்ந்த பறவை ஆய்வாளர் என்.ரவீந்திரன் நடராஜன், கோவையை சேர்ந்த பறவை ஆய்வாளர் எச்.பைஜு ஆகியோர் இந்தியாவின் மன்னார் வளைகுடா பகுதியின் தென்கிழக்கு கடற்கரையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கரையோரப் பறவைகள் பற்றிய ஆய்வுப் பணிகளை செய்து வருகின்றனர். தற்போது இவர்கள் இப்பகுதியில் வலசை மற்றும் வாழ்விட பறவைகள் பற்றிய ஆய்வுகளை தமிழக வனத்துறையுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வில், சமீபத்தில் உலகளவில் புதிய பறவை இனமாக அறிவிக்கப்பட்ட அனுமான் உப்புக்கொத்தி (சரத்ரியஸ் சீபோஹ்மி) பறவைகள், தென்னிந்திய கிழக்கு கடற்கரையில் இனப்பெருக்கம் செய்வதை கண்டறிந்துள்ளனர். இதை தகுந்த ஆதாரங்களுடன் பறவை ஆய்வாளர்கள் மதுரையைச் சேர்ந்த என். ரவீந்திரன், (இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை) மற்றும் எச்.பைஜு, எஸ். ரவிச்சந்திரன் (கடல் உயிரியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), ஆவணப்படுத்தியுள்ளனர்.

இவர்களுடைய இந்த ஆய்வுக் கட்டுரையை சர்வதேச மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழான “ஜர்னல் ஆஃப் த்ரட்டன்ட் டாக்ஸா’வில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய பறவையின் நான்கு புதிய இனப்பெருக்கத் பகுதிகளை இவர்கள் தங்களுடைய நீண்ட தொடர் கள ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து பறவை ஆய்வாளர் ரவீந்திரன் நடராஜன் கூறும்போது, “இந்தப் பறவை முன்பு "கென்டிஷ் உப்புகொத்தி"யின் கிளையினமாகக் கருதப்பட்டது. இந்த பறவையினம் ஆங்கிலேயர்களால் கென்டிஷ் ப்ளவர் என்று முன்பு அறியப்பட்டது. இதன் உள்ளினமான பறவைகள் நமது தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியிலும், இலங்கையின் மேற்கு கடற்கரையோர பகுதியான மன்னார் வளைகுடா பகுதியில் காணப்பட்டது. சென்ற ஏப்ரல் 20ம் தேதி இலங்கை விஞ்சானிகள் இது கேன்டிஷ் உப்புக்கொத்தி அல்ல, இது ஒரு தனிப்பட்ட இனம் என உலக அளவில் அவற்றின் மரபணுவை வைத்து ஆய்வு செய்து இப்பறவைகளுக்கு அனுமன் உப்புக்கொத்தி என பெயர் இட்டு உள்ளார்கள்.

இந்த நேரத்தில் தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரங்களில் இதன் இனப்பெருக்க தளங்கள் கண்டறியப்பட்டுள்ளது, பறவை ஆய்வுகளில் மிக முக்கியமாக கருதப்படுகிறது. இப்போது தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் மட்டும் இனப்பெருக்கம் செய்து வசிக்கும் பறவையாக அனுமான் உப்புக்கொத்தி கண்டறியப்பட்டுள்ளது.

அனுமான் உப்புக்கொத்தி பறவைகள் நமது கடற்கரையோர கழிமுக பகுதிகள், ஈர நிலப்பகுதிகள், உப்பளங்களின் வரப்புகளில் குழி பறித்து இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடுகின்றன. முட்டையினை ஆண் மற்றும் பெண் பறவைகள் மாறி மாறி முட்டைகளை அடைகாக்கின்றன. நான்கு வாரங்களில் முட்டையில் இருந்து வெளி வரும் குஞ்சுகள் தாமாகவே தாய், மற்றும் தந்தையுடன் தாமாக இரையை தேடி உண்கின்றன. தாய், தந்தை பறவைகள் குஞ்சுகளுக்கு மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு துணையாக பாதுகாக்கின்றன. சுமார், ஒரு மாத காலத்திற்கு பிறகு குஞ்சுகளுக்கு பறக்கும் வகையில் சிறகுகள் முளைத்து தம் இனம் சார்ந்த மற்ற பறவைகளுடன் சேர்ந்து வாழத் தொடங்குகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x