Published : 21 Apr 2023 06:00 AM
Last Updated : 21 Apr 2023 06:00 AM
கொடைக்கானல்: உணவு, தண்ணீருக்காக வனப்பகுதியிலிருந்து கொடைக்கானல் நகருக்குள் காட்டு மாடுகள் கூட்டம் கூட்டமாக புகுவதால், சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக பகலில் கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால், வனப்பகுதியில் தண்ணீர் வற்றி பசுமை குறைந்து, மரங்கள், செடிகள், புற்கள் காய்ந்து வருகின்றன. எனவே, உணவு மற்றும் தண்ணீருக்காக கடந்த சில நாட்களாக கொடைக்கானல் நகர் பகுதிக்குள் காட்டுமாடுகள் கூட்டம் கூட்டமாக நுழைந்து வருகின்றன.
நேற்று, மூஞ்சிக்கல் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டுமாடுகள் சாலையின் குறுக்கே இங்கும் அங்குமாக ஓடின. சில இடங்களில் சாலையின் குறுக்கே நீண்ட நேரமாக நின்றுகொண்டு, வாகன ஓட்டிகளுக்கு வழிவிடாமல் அச்சுறுத்தின. இதனால், வாகனங்களிலோ, நடந்தோ செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். தகவலறிந்து வந்த வனத் துறையினர் காட்டுமாடுகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
அடிக்கடி நகருக்குள் கூட்டம் கூட்டமாக நுழையும் காட்டுமாடுகளால் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் அச்சம் அடைகின்றனர். எனவே, வனப்பகுதியிலிருந்து காட்டுமாடுகள் நகர் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை வனத் துறையினர் தடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT