Published : 15 Apr 2023 09:48 AM
Last Updated : 15 Apr 2023 09:48 AM

மேற்கு தொடர்ச்சி மலை காட்டுத் தீயை அணைக்க விமானப் படை உதவியை கோரிய கோவை மாவட்ட நிர்வாகம்

கோவை நாதேகவுண்டன்புதூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத் தீ மேற்கொண்டு பரவாமல் தடுக்கும் பணியில் நேற்று ஈடுபட்ட வனப் பணியாளர்கள்.

கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க விமானப் படையின் உதவியை மாவட்ட நிர்வாகம் கோரியுள்ளது. கோவை ஆலாந்துறை ஊராட்சிக்குட்பட்ட நாதேகவுண்டன்புதூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் நேற்று நான்காவது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டனர்.

தீயை கட்டுப்படுத்தும் பணியில் உடுமலை, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த வனப் பணியாளர்கள், மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை வனச்சரக பணியாளர்கள் என மொத்தம் 150 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது: தரைப்பகுதியில் உள்ள புற்கள், காய்ந்த சருகுகளில் தீ பரவி வருகிறது. பூ பூத்து காய்ந்த மூங்கில்கள் எரிந்துள்ளன. மற்ற மரங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை. குறிப்பிட்ட இடங்களில் தீ தடுப்பு கோடுகளை அமைத்து, எதிர் தீ வைத்து, தீ மேற்கொண்டு பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது. காட்டுத் தீ காரணமாக வன விலங்குகள் ஏதும் இதுவரை பாதிக்கப்படவில்லை. முதல்நாளில் யானைகள் அப்பகுதியில் தென்பட்டன. அவையும் இடம்மாறி சென்றுவிட்டன.

ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்து தீயை கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் விமானப்படைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் வந்தால் பக்கெட் மூலம் தண்ணீர் எடுத்துச்செல்ல வசதியாக அருகிலேயே ஒரு குட்டை உள்ளது.

ஒரு நீச்சல் குளமும் உள்ளது. இந்த நீச்சல் குளத்தில் நீர் நிரப்பி வைத்துள்ளோம். அனுமதி கிடைத்தால் இன்று (ஏப்.15) தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்படலாம். வன எல்லைப்பகுதியை தாண்டி தீ பரவாமல் தடுக்க தீயணைப்புத் துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x