Published : 13 Apr 2023 05:10 PM Last Updated : 13 Apr 2023 05:10 PM
100 ஏக்கர் பரப்பளவில் ‘தமிழ்' என்ற வார்த்தை அமைப்பில் மாதிரி காடு: அரசின் புதிய அறிவிப்புகள்
சென்னை: தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு அமைக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.13) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், நிலவில் இருந்து பார்க்கும் போதும் தெரியும் வகையில், 100 ஏக்கர் பரப்பளவில் ‘தமிழ்' என்ற வார்த்தை அமைப்பில் மாதிரி காடு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் புதிய அறிப்புகளை வெளியிட்டார். அவற்றின் முக்கிய அம்சங்கள்:
காலநிலை மாற்றம் தொடர்பாக பள்ளிகளில் செயல்படும் சுற்றுச்சூழல் மன்றங்கள் கால நிலை மாற்ற மன்றங்களாக புதுப்பித்து மாற்றியமைக்கப்படும்.
உள்ளாட்சி நிறுவனங்களுக்கு இடையில் காலநிலை மாற்றத் தழுவல் மற்றும் தணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள ரூ.10 கோடியில் பசுமை சவால் நிதி உருவாக்கப்படும்.
பொதுமக்கள் அதிக அளவு கூடும் மையங்களில் சூழலுக்கு உகந்த பழக்கவழக்கங்களை ஊக்குவிக்க ரூ.50 லட்சத்தில் சூழலுக்கு உகந்த வாழ்வியல் சான்றிதழ் வழங்கப்படும்.
கால நிலை மாற்றத்திற்கு ஏற்ப வாழும் வகையில் அதிக அளவு இளம் மாணவர்கள் தயார்படுத்த 50 பள்ளிகளில் ரூ.3.7 கோடியில் பசுமைப் பள்ளிகள் திட்டத்தை விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நீர் நிலை பாதுகாப்பில் சிறந்த பணியாற்றும் 100 நபர்களுக்கு நீர் நிலை பாதுகாவலர் விருது வழங்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
WRITE A COMMENT