Published : 07 Apr 2023 06:08 AM
Last Updated : 07 Apr 2023 06:08 AM

விலங்குகள் உயிரிழப்பை தடுக்க கிருஷ்ணகிரி வனப்பகுதியில் மின் கம்பிகளை உயர்த்தும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி அருகே ஏக்கல் நத்தம் வனப்பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளின் உயரத்தை உயர்த்தும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய மற்றும் வனத்துறை ஊழியர்கள்.

கிருஷ்ணகிரி: வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பதைத் தடுக்க, கிருஷ்ணகிரி அருகே ஏக்கல்நத்தம் மலைக் கிராம வனப்பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளின் உயரத்தை உயர்த்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மின்வேலி மற்றும் தாழ்வான உயரத்தில் செல்லும் மின் கம்பிகளில் உரசி உயிரிழப்பதைத் தடுக்க வனப்பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளின் உயரத்தை உயர்த்தியும், பழுதான மின் கம்பங்களை மாற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி அருகே ஏக்கல்நத்தம் மலைக் கிராம வனப்பகுதியில் கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி, கோட்ட செயற்பொறியாளர் பவுன்ராஜ்,நகர உதவிச் செயற்பொறியாளர் கந்தசாமி, மேகலசின்னம்பள்ளி உதவிப் பொறியாளர் லட்சுமணன், வனத்துறை வனவர் சம்பத்குமார், வனக் காப்பாளர் செந்தில் ஆகியோர் கொண்ட குழுவினர் வனப்பகுதியில் கூட்டுக் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தாழ்வாகச் சென்ற மின்கம்பிகளின் உயரத்தை உயர்த்தி அமைத்தனர். மேலும், பழுதான மின்கம்பங்களை அகற்றி, புதிய மின் கம்பங்கள் நிறுவப்பட்டன.

இதுதொடர்பாக வனத்துறை மற்றும் மின்வாரிய அலுவலர்கள் கூறியதாவது: மின் விபத்துகளிலிருந்து விலங்குகளைப் பாதுகாக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இப்பணிகள் விரைந்து முடிக்கப்படும். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திருட்டுத் தனமாக மின்வேலிகள் அமைப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே, சட்ட விரோத மின்வேலி அமைப்பதைத் தடுக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x