Published : 04 Apr 2023 03:15 PM
Last Updated : 04 Apr 2023 03:15 PM

“நான் இருக்கும் வரை நடக்காது” - டெல்டா பகுதி நிலக்கரி சுரங்க விவகாரத்தில் சீமான் ஆவேசம்

சீமான் | கோப்புப்படம்

சென்னை: “மத்திய அரசு அனுமதி கொடுக்கட்டும், நிலக்கரியை யார் எடுக்கிறார்கள் என்று பார்ப்போம். நான் இருக்கும்வரை அது நடக்காது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் திருவாரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் மத்திய அரசு நிலக்கரி எடுக்க அனுமதி வழங்கியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் இருக்கும்வரை அது நடக்காது. மத்திய அரசு அனுமதி கொடுக்கட்டும், நிலக்கரியை யார் எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.

திராவிடர்கள் ஆட்சி இருக்கும் வரைதான் இந்த ஆட்டம் நடக்கும். நெய்வேலியில் நிலத்தை ஆக்கிரமிப்பது, திருவாரூர் மாவட்டத்தில் மீத்தேன், ஈத்தேனுக்காக பூமியைத் தோண்டுவது, நிலக்கரி எடுப்பது போன்ற வேலைகளைச் செய்வது. இன்னும் ஒரு 4 ஆண்டுகள் பொறுங்கள், அதன்பிறகு யாராவது தொடட்டும் பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.

அப்போது அவரிடம் நிலக்கரி சுரங்கங்கள் தோண்டுவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் அறிவித்திருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "அந்தப் போராட்டத்தில் முன்னாடி நான்தான் நிற்பேன். போராட வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் உள்ளது. எங்களுடைய கோட்பாடு, என் நிலத்தை இழந்தால், நான் பலத்தை இழப்பேன். பலத்தை இழந்தால் என் இனத்தை இழப்பேன். அதனால் நான் என் தாய் நிலத்தை பேரன்பு கொண்டு காதலிக்கிறேன்.

அரசு தீர்ந்துபோகிற வளங்களையே கைவைக்கின்றன. நிலக்கரி, மீத்தேன், ஈத்தேன் இவை எல்லாவற்றையும் ஒரு குறிப்பிட்ட காலம்தான் எடுக்க முடியும். ஆனால், நான் தீராத வளங்களை அரசு தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறேன். மின் உற்பத்திக்கு சூரிய ஒளி, காற்றாலைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறேன். உலக நாடுகள் சாலை முழுக்க சூரியஒளி மின் தகடைப் பதிக்கின்றன, கடலில் மிதக்க வைத்து மின் உற்பத்தி செய்கின்றன. இதுபோல திட்டங்களை அரசு செயல்படுத்தினால் யார் கேட்கப்போகிறார்கள்.

நிலக்கரியை அரசு எவ்வளவு காலத்திற்கு எடுக்கும். ஓர் அடிப்படை அறிவற்ற கூட்டத்திற்கு இந்த நாட்டை கொடுத்துவிட்டு, அவர்கள் பூமியை தோண்டிக் கொண்டேயிருக்கின்றனர். இதுபோல எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டு, அதில் வந்து நிலக்கரி எடுப்பதா?" என்று அவர் கூறினார்.

முன்னதாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைப்பதற்கான தொடக்க கட்ட பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x