Published : 02 Apr 2023 04:00 AM
Last Updated : 02 Apr 2023 04:00 AM
கோவை / உடுமலை: கோவை, உடுமலை வனப்பகுதிகளில் யானை வழித் தடங்களில் தாழ்வான மின்பாதைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தருமபுரி மற்றும் கோவை வனப்பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து யானைகள் இறந்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் தாழ்வான மின் கம்பங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டு அவற்றை மாற்றி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் வனக்கோட்டத்தில் உள்ள வனப்பகுதிகள், வன எல்லைப் பகுதிகள், விளைநிலங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்களில் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மின் இணைப்புகள் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதா? சோலார் மின் வேலிகளில் திருட்டுத் தனமாக உயரழுத்த மின்சாரம் பாய்ச்சப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்றது.
இதில் மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் க.கணேஷ்ராம் தலைமையில், உடுமலை வன அலுவலர் சிவக்குமார் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர். யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள ஜல்லிபட்டி, கொங்குரார்குட்டை பகுதிகளில் நேற்று இந்த ஆய்வு நடைபெற்றது. அப்போது தாழ்வாக செல்லும் மின் இணைப்புகளால் வன உயிரினங்கள் குறிப்பாக யானைகளுக்கு ஏற்படும் பாதிப்பு களையும், சோலார் மின் வேலிகளை சட்டப்படி முறையாக பயன்படுத்துமாறும் அப்பகுதி மக்களிடம் வலியுறுத்தப்பட்டது.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘‘வன எல்லைப்பகுதிகளில் தாழ்வாக மின் இணைப்புகள் அமைக்கப்பட்டிருந்தாலோ, சட்டத்துக்கு புறம்பாக மின்சாரத்தை பயன்படுத்தி மின் வேலி அமைக்கப்பட்டிருந்தாலோ அதுகுறித்து உடனடியாக கீழ்வரும் எண்களில் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
உடுமலைப்பேட்டை வனச்சரகம்: 9487987173, 7502289850, 9486659701, 9487787731. அமராவதி வனச்சரகம்: 9047066460, 9486587797. கொழுமம் வனச்சரகம் 8072981528, 8778725381. இவ்வாறு வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவையில் ஆய்வு: பேரூர் வட்டத்துக்குட்பட்ட கலிக்கநாயகன்பாளையம் கிராமம், ஓணாப்பாளையம், கிரீன்ஹோம் உள்ளிட்ட வனப்பகுதிக்குட்பட்ட யானை வழித்தடங்களில் பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வழுத்த மின்பாதைகள், மின்பாதைகளில் உள்ள மரங்கள் ஆகியவற்றை வருவாய்த்துறை, வனத்துறையினர் கொண்ட குழுவினர் கணக்கெடுத்துக் கொண்டனர்.
ஆய்வின் போது உதவி மின்பொறியாளர், தொண்டாமுத்தூர் காவல் ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், வனக்காவலர்கள், சர்வே துறையினர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT