Published : 27 Mar 2023 06:15 AM
Last Updated : 27 Mar 2023 06:15 AM
கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ், 84 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி மானியத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
இத்தலாரை சேர்ந்த விவசாயி மூர்த்தி, அப்பகுதியில் 2.50 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அதில், 5 ஹெச்பி திறன் கொண்ட சூரிய சக்தி பம்புசெட், வேளாண்மை பொறியியல் துறை மூலமாக 70 சதவீத மானியத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "சூரிய சக்தி பம்புசெட் மொத்த தொகையான ரூ.2,73,548-ல்,எனது பங்காக ரூ.86,652 செலுத்தினேன். சூரிய சக்தி பம்புசெட்டு அமைப்பதன் மூலமாக, டீசலுக்கான செலவு மற்றும் நேர விரயம்குறைந்துள்ளது. மேலும், சூரியசக்திபம்புசெட்டுடன் தெளிப்புநீர் பாசன அமைப்பை இணைத்துள்ளதால், குறைவான தண்ணீரில் முழுமையாக பாசனம் செய்ய முடிகிறது. உற்பத்தி செலவு குறைந்து லாபம் ஈட்ட முடிகிறது" என்றார்.
வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, "சூரிய சக்தி பம்பு செட்டுகள் நிறுவுவதன் மூலமாக, விவசாயிகள் பயனடையும் வகையிலும், சரியான முறையில் பாசனம் செய்யவும், பாசன பரப்பை அதிகப்படுத்தி டீசல்செலவை சேமிக்க முடிவதுடன் நேரம் மீதமாகிறது. மேலும், விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடியை தேர்ந்தெடுத்து, உற்பத்தியை அதிகரித்து கூடுதல் வருவாய் பெறவும் வழி வகை செய்கிறது.
மேலும், வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்குதல் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 221 விவசாயிகளுக்கு தேயிலை அறுவடை இயந்திரம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. சூரிய கூடார உலர்த்திகள் அமைத்தல் திட்டத்தின் கீழ், வேளாண் விளைபொருட்களை உலர்த்த பசுமை குடில் வகையிலான 400 முதல் 1000 சதுர அடி பரப்பு கொண்ட பாலி கார்பனேட் தகடுகளை கொண்ட சூரிய கூடார உலர்த்திகள் 40 சதவீத மானியத்தில் அமைத்து கொடுக்கப்படுகிறது.
சூரிய சக்தி மின்வேலி அமைத்தல் திட்டத்தின் கீழ், வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாய விளைபொருட்களை வன விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாக்க, சூரிய சக்தி மின்வேலி (5 வரிசை, 7 வரிசை, 10 வரிசை) 40 சதவீத பின்னேற்பு மானியத்துடனும், மானியத்தில் மின் மோட்டார் பம்புசெட்டுகள் அமைத்தல் திட்டத்தின் கீழ், 10 ஆண்டுகள் பழைய மின்மோட்டார் பம்பு செட்டுகளை புதிதாக மாற்றுவதற்கு அல்லது புதிதாக அமைக்கப்படும் கிணறுகளுக்கான புதிய மின் மோட்டார் பம்புசெட்டுகள் அமைப்பதற்கு மோட்டாரின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.10,000 இவற்றில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படுகிறது.
வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்க திட்டத்தின்கீழ், பல்வேறு வேளாண் இயந்திரங்களை தனிப்பட்ட விவசாயிகள் வாங்குவதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்திலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதமானியத்துடனும் வழங்கப்படுகிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT