Published : 24 Mar 2023 06:23 AM
Last Updated : 24 Mar 2023 06:23 AM
திருப்பூர்: குடிநீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட நூலிழையில் உருவாக்கப்பட்ட ஆடைக்கு திருப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச கண்காட்சியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
புவி வெப்பமயமாதலை மேலும் தடுக்க, மறுசுழற்சியை கையில் எடுக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாள்தோறும் கடைகளில் விற்கப்படும் பாலித்தீன் பாட்டில் குடிநீரை வாங்கி குடிக்கும் பலர், அதனை சாலையோரம் அல்லது சாப்பிடும் உணவகங்களில் வீசி செல்வதை காணலாம். ’மஞ்சள் பை’ திட்டத்தை பயன்படுத்தினாலும், அதில் வாங்கும் பொருட்கள் அனைத்தும் பாலித்தீன் பேக் என்ற உண்மையை மறுக்க இயலாது.
இந்நிலையில், காலி பாலித்தீன் குடிநீர் பாட்டில்கள் மூலமாக நூல் தயாரிக்கும் முயற்சியை கையில் எடுத்து, அதில் தற்போது அசாத்திய சாதனையை நிகழ்த்தி உள்ளது திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனம். இந்த சாதனையை, திருப்பூரை சேர்ந்த சுலோச்சனா காட்டன் குழுமத்தினர் எட்டியுள்ளனர். இது, திருப்பூர் பழங்கரையில் நடைபெற்றுவரும் சர்வதேச பின்னலாடை கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பருத்தி தேவை ஜவுளித்தொழிலில் அதிகரித்துள்ள சூழலில், பஞ்சு மற்றும் நூல் போன்ற மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
விலை குறைவாக உள்ள செயற்கை நூல் இழை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் குடிநீர் பாட்டில்களில் இருந்து நூல் எடுத்து, அதன் மூலமாக ஆடைகளை உருவாக்கி வருகின்றனர்.
தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து காலி குடிநீர் பாட்டில்களை கொண்டுவந்து, இந்த பணியை செய்து வருகின்றனர். இதுகுறித்து குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநர் ப்ரீத்வி கிருஷ்ணகுமார் கூறும்போது, "இன்றைக்கு அதிகபட்சமாக நாள்தோறும் 70 லட்சம் பாட்டில்களில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கிலோ நூலிழை உற்பத்தி செய்கிறோம். செயற்கை நூல் இழை தயாரிக்கும்போது, 96 சதவீதம் அளவுக்கு கார்பன்-டை-ஆக்சைடு உருவாவது குறைந்துள்ளது. மின் திறனில் 78 சதவீதம் சேமிக்கப்பட்டு, தண்ணீர் பயன்பாட்டில் 96 சதவீதமும் குறைந்துள்ளது" என்றார்.
இங்கு தயாரிக்கப்படும் நூல் இழைகள் மற்றும் ஆடைகள் உள்நாடு மற்றும் அமெரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும், இந்நிறுவனத்துக்கு தேவையான மின்சாரத்தை சூரிய மின் சக்தி மற்றும் காற்றாலை மூலமாக இவர்களே உற்பத்தி செய்து பயன்படுத்துவதால், கார்பன் வெளியேற்றம் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது என்கின்றனர். இந்த நிறுவனத்தின் முயற்சியை, கண்காட்சியில் கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT