Published : 16 Mar 2023 07:06 PM
Last Updated : 16 Mar 2023 07:06 PM
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட யானைக் குட்டி ஒரு வார கால பராமரிப்புக்கு பின்னர் முதுமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரகத்தில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் வசிக்கின்றன. சில நேரங்களில் இங்குள்ள வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களிலும், விளைநிலங்களிலும் யானைகள் நுழைவதுண்டு. பென்னாகரம் அருகே நீர்க்குந்தி பகுதியில் இவ்வாறு கடந்த 11-ம் தேதி 1 வயதுடைய ஆண் யானைக் குட்டி ஒன்று வனத்தில் இருந்து வெளியே வந்தது. தாயை தவறவிட்ட இந்த யானைக் குட்டி செல்வம் என்ற விவசாயியின் விளைநிலத்தில் நுழைந்தபோது தவறுதலாக விவசாய கிணற்றில் விழுந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் தீயணைப்புத் துறை உதவியுடன் இந்த குட்டி யானையை கயிறு கட்டி மீட்டனர். இந்த யானைக் குட்டியின் தாய் யானையை கண்டு பிடிப்பதில் சிக்கல் நிலவியதால் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட யானைக் குட்டி ஒகேனக்கல் வனப்பகுதியில் வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வந்தது. வனத்துறைக்கான கால்நடை மருத்துவர்கள் இந்தக் குட்டிக்கு சிகிச்சை அளித்த பின்னர் வன ஊழியர் மகேந்திரன் யானைக் குட்டியை பராமரித்து வந்தார்.
இந்நிலையில், வனத்துறை உயர் அதிகாரிகள் வழிகாட்டுதல்படி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வழியாக முதுமலைக்கு இந்த யானைக் குட்டி கூடாரம் அமைக்கப்பட்ட சரக்கு வாகனம் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டது.
இந்த யானைக் குட்டி, சமீபத்தில் ஆஸ்கர் விருது பெற்ற இந்திய குறும்படத்தில் இடம்பெற்ற, முதுமலையைச் சேர்ந்த யானைப்பாகன் பொம்மன், அவரது மனைவி பெள்ளி ஆகியோரின் பராமரிப்பில் முதுமலை யானைகள் பராமரிப்பு மையத்தில் வளர உள்ளது.
இதற்கிடையில், மாரண்ட அள்ளி அருகே மின் வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகளின் 2 குட்டிகளை வனத்தில் யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் பணிக்காக மாரண்ட அள்ளி பகுதியில் முகாமிட்டிருந்த யானைப்பாகன் பொம்மன் தற்போது இந்த 1 வயதுடைய ஆண் யானைக் குட்டியுடன் முதுமலை நோக்கி பயணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறமிருக்க, கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட யானைக் குட்டியை ஒரு வார காலம் ஒகேனக்கல் பகுதியில் பராமரித்த வன ஊழியர் மகேந்திரன், இன்று (வியாழன்) முதுமலைக்கு அந்தக் குட்டியை வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது பிரிவைத் தாங்க முடியாமல் கதறி அழுதார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT