Published : 13 Mar 2023 06:39 AM
Last Updated : 13 Mar 2023 06:39 AM

சேலம் | அரிய வகை பாறை சுண்டாங்கோழி, குடுமிக் கழுகு உள்பட ஆத்தூர் வனக்கோட்டத்தில் 149 வகையான பறவையினங்கள் கண்டுபிடிப்பு

ஆத்தூர் வனக்கோட்டத்தில் நடத்தப்பட்ட நிலம் வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட அரிய வகை பறவைகளான பாறை சுண்டாங்கோழி, நீலத்தொண்டை பூச்சிபிடிப்பான், சாம்பல் தலை மைனா, பழுப்புமார்பு பூச்சி பிடிப்பான்.

சேலம்: நிலம் வாழ் பறவைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில், ஆத்தூர் வனக்கோட்டப் பகுதிகளில் பாறை சுண்டாங்கோழி, குடுமிக் கழுகு, வெண்வால் மாம்பழச்சிட்டு, வெண்புள்ளி விசிறிவாலி உள்ளிட்ட அரிய பறவைகள் உள்பட 149 வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நிலப்பரப்பு வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் சேலம் வனக்கோட்டத்தில் மாவட்ட வன அலுவலர் சஷாங் காஷ்யப் தலைமையில் 20 இடங்களிலும், ஆத்தூர் வனக்கோட்டத்தில் மாவட்ட வன அலுவலர் சுதாகர் தலைமை யில் 19 இடங்களிலும், நிலம் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடை பெற்றது.

ஆத்தூர் வனக்கோட்டத்தில், கரியகோவில், கிலாக்காடு, சந்துமலை, புங்கமடுவு, மண்மலை, நிணங்கரை, வலசக்கல்பட்டி, சின்ன புனல்வாசல், மணிவிழுந்தான், முட்டல், வேப்படி, மல்லூர், வீரகனூர் , வெள்ளையூர் உள்பட 19 இடங்களில், நிலப்பரப்பு வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சேலம் பறவைகள் கழகம், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 12 பேர் மற்றும் வனத்துறையினர் 40 பேர் கணக்கெடுப்புப் பணி யில் ஈடுபட்டனர். ஆத்தூர் வனக்கோட்டத்தில், 149 வகையான பறவைகள் கண்டறியப்பட்டன. குறிப்பாக, வெண்புருவ வாத்து, ஊசிவால் வாத்து, பச்சை மண்கொத்தி, பொறி மண்கொத்தி, மண்கொத்தி, பழுப்புக் கீச்சான், மரக்கதிர்க்குருவி, வேலி கதிர்க்குருவி, பச்சைக் கதிர்க்குருவி, இளம்பச்சைக் கதிர்க்குருவி, வெண்தொண்டை கதிர்க்குருவி, சூரமாறி, சாம்பல் வாலாட்டி, மஞ்சள் வாலாட்டி, உள்ளிட்ட பறவைகள் கண்டறியப்பட்டன.

மேலும், குளிர்காலத்தில் இந்தியாவின் வடக்குப் பகுதியில் இருந்து தென்னிந்தியாவுக்கு வலசை வரும் பறவைகளான சின்ன சாம்பல் குயில், நீலவால் பஞ்சுருட்டான், ஆறுமணிக்குருவி, சாம்பல் கரிச்சான், தகைவிலான், சாம்பல்தலை மைனா, நீலத்தொண்டை பூச்சிபிடிப்பான், பழுப்புமார்பு பூச்சிபிடிப்பான் உள்ளிட்ட பறவைகள் கண்டறியப் பட்டன.

இவை தவிர, ஓரிடவாழ் பறவைகளான பாறை சுண்டாங்கோழி, காட்டுக்கோழி, பொரிப்புள்ளி ஆந்தை, வெண்புள்ளி விசிறிவாலி, வெண்புருவ சிலம்பன், சாம்பல் சிலம்பன் உள்ளிட்ட பறவைகளும் கணக்கெடுப்பின்போது கண்டறியப்பட்டுள்ளன. கணக்கெடுப்பில், ஆத்தூர் வனக்கோட்டத்தில் அரிய வகை 149 வகையான பறவையினங்கள் மொத்தம் 3,347 எண்ணிக்கையில் கண்டறியப் பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x