Published : 01 Mar 2023 09:33 PM
Last Updated : 01 Mar 2023 09:33 PM

பிப்ரவரியில் 100 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்: இந்திய வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

வெப்ப அலை | கோப்புப் படம்

சென்னை: இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பம் பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மார்ச் மாதம் வெயில் தொடங்கி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே இந்தியாவில் வெயிலின் தாக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவில் கடந்த 1901-ம் ஆண்டுக்கு பிறகு பிப்ரவரி (2023) மாதத்தில் தான் அதிக வெப்பம் பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அதிகபட்சமாக 29.54 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இதற்கு முன்னதாக 2016-ம் ஆண்டு 29.48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது.

மேலும், 1901-ம் ஆண்டுக்கு பிறகு 5-வது குறைந்தபட்ச வெப்பநிலை பதிவான மாதமாக கடந்த பிப்ரவரி மாதம் உள்ளது. 2016-ம் ஆண்டு 16.82 டிகிரி செல்சியஸ், 1912-ம் ஆண்டு 16.49 டிகிரி செல்சியஸ், 1937-ம் ஆண்டு 16.45 டிகிரி செல்சியஸ், 2006-ம் ஆண்டு 16.42 டிகிரி செல்சியல், 2023-ம் 16.31 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாதம் (மார்ச்) முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அடுத்த மூன்று மாதம் இயல்பைவிட அதிக வெப்ப அலை நாடு முழுவதும் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவுரை: இதனிடையே, மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், யூனியன் பிரதேச செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மார்ச் 1-ஆம் தொடங்கி அன்றாடம் வெயில் சம்பந்தமான நோய்களைக் கண்காணிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். மாநில அரசுகள் சுகாதாரத் துறை மற்றும் சுகாதார ஊழியர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்யுமாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், அத்தியாவசிய மருந்துகள், ஐஸ் பேக், தேவையான மருந்து கருவிகளை வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x