Published : 17 Feb 2023 04:13 PM
Last Updated : 17 Feb 2023 04:13 PM

சென்னையின் நிலத்தடி நீரில் நிக்கல், கேட்மியம் முதலான கன உலோகங்கள்: ஆய்வில் தகவல்

நிலத்தடி நீர் | கோப்புப் படம்

சென்னை: சென்னையின் நிலத்தடி நீரில் கன உலோகங்கள் அதிக அளவு இருப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

சென்னையில் தற்போது 1 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். 12 லட்சத்திற்கு அதிகமான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் வழங்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்தில் 9 லட்சத்து 91 ஆயிரம் நுகர்வோர் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றுள்ளனர்.

இவர்களிடம் இருந்து ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முதல் அரையாண்டு கட்டணமும், அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை 2-வது அரையாண்டு கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன்படி சென்னை குடிநீர் வாரியத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம் மூலம் ரூ.480 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இவ்வளவு வருவாய் கிடைத்தும் சென்னையில் உள்ள பெரும்பாலான மக்கள் குடிநீர் தேவைக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் நீரை பயன்படுத்துவது இல்லை. இதற்கு முக்கிய காரணம், சென்னைக் குடிநீர் வாரியம் அளிக்கும் தண்ணீர் தூய்மையாக இருப்பது இல்லை என்பதுதான். இதனால்தான் மக்கள் அதிக அளவு கேன் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். தனியார் தண்ணீர் கேன் விற்பனை நிறுவனங்கள் நிலத்தடி நீரை எடுத்து, அதை ஆர்ஓ முறையில் சுத்தகரிப்பு செய்து விற்பனை செய்து வருகின்றன.

இந்நிலையில், சென்னையின் நிலத்தடி நீரில் அளவிற்கு அதிகமாக கன உலோகங்கள் இருப்பதாக ‘சயின்ஸ் டைரக்ட்’ (Science direct) இதழில் வெளியாகி உள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்படி, சென்னையில் 45 இடங்களில் 90 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் நாகல் கேனியில் கேட்மியம் நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட 15 மடங்கு அதிகமாகவும், பம்மலில் நிக்கல் 7 மடங்கு அதிகமாகவும் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், 25 இடங்களில் ஈயம், 13 இடங்களில் நிக்கல், 3 இடங்களில் குரோமியம், ஒரு இடத்தில் கேட்மியம் நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. ஆய்வு அறிக்கையை படிக்க

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x