Published : 13 Feb 2023 04:42 PM
Last Updated : 13 Feb 2023 04:42 PM

டிரவுட் மீன்களை பாதுகாக்கும் வகையில் அவலாஞ்சி மீன் பண்ணையை நவீனப்படுத்தும் பணி தீவிரம்

அவலாஞ்சி மீன் பண்ணையிலுள்ள குஞ்சு பொரிப்பகம்.

மஞ்சூர்: டிரவுட் மீன்களை பாதுகாக்கும் வகையில், அவலாஞ்சி மீன் பண்ணையை நவீனப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் நைனிடால் ஆகிய பனி பிரதேசங்களில் வாழும் ‘டிரவுட்’ வகை மீன்கள், தென்னிந்தியாவில் நீலகிரிமாவட்டத்தில் மட்டுமே காணப்படுகின்றன. 5 டிகிரி செல்சியஸ் முதல் 20 டிகிரி செல்சியஸ் வெப்பம் மட்டுமே உள்ள பகுதிகளில் வாழும் இவ்வகை மீன்கள், நீலகிரி மாவட்டத்தில் அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நீரோடைகளில் மட்டுமே வசிக்கின்றன. இவ்வகை மீன்கள்தான் பொரிக்கும் முட்டை மற்றும் குஞ்சுகளையே தின்றுவிடும் குணாதிசயம் கொண்டது. இதனால், இவ்வகை மீன் இனம் அழியும் தருவாயில் உள்ளன.

ரெயின்போ வகை டிரவுட் வகை மீன்களே, நீலகிரி மாவட்டத்தில் அதிகளவு உள்ளன. இந்த மீன்கள்அக்டோபர் மாதத்தில் முட்டையிடும். முட்டையிடும் காலத்தில், ஓடும் நீரின் எதிர்புறத்தை நோக்கி செல்லும் தன்மை கொண்டவை. இதனால், பின்னால் வரும் மீன்கள் முட்டைகளை தின்றுவிடும். இதை தடுப்பதற்காக, முட்டையிடும் காலத்தில் உதகையிலுள்ள மீன் வளத்துறை அதிகாரிகள், பெண் மீன்களை பிடித்து அதன் முட்டைகளை எடுத்துவிடுகின்றனர்.

பின்னர் ஆண் மீன்களை பிடித்து அதன் விந்தணுக்களை எடுத்து பெண் முட்டைகள் மீது போட்டு விடுகின்றனர். 60 நாட்களுக்கு பின் இந்த முட்டைகளில் இருந்து சுமார் 3 லட்சம் மீன் குஞ்சுகள் வந்துவிடும். அவற்றை, மீண்டும் இதே பகுதியில் விட்டு விடுகின்றனர். அழியும் தருவாயில் உள்ள இந்த மீன் இனத்தை பாதுகாக்க,உதகை அருகே அவலாஞ்சி பகுதியில் குஞ்சு பொரிப்பகமும் செயல்படுகிறது.

ரெயின்போ டிரவுட் மீன்.

இதுதொடர்பாக மீன் வளத்துறை உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் கூறும்போது, "தமிழக அரசின் மீன்வளத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மீன் பண்ணையில், டிரவுட் மீன்களிலிருந்து முட்டைகளை எடுத்தல், அந்த முட்டைகளிலிருந்து மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்தல், மீன்குஞ்சுகளை வளர்த்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு தோராயமாக 60,000 முதல் 70,000 வரையிலான எண்ணிக்கையில், டிரவுட் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

இந்நிலையில், 2019-ம் ஆண்டு அவலாஞ்சி பகுதியில் பெய்த கனமழையில் சேதமடைந்த இந்த மீன் பண்ணை, தற்போது ரூ.2.50 கோடி மதிப்பில் நவீனப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அழிவின் விளிம்பில் உள்ள இந்த டிரவுட் மீன்களை பாதுகாக்க கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம், கோக்கர்நாக் அரசு டிரவுட் மீன் பண்ணையிலிருந்து 20,000 எண்ணிக்கையிலான டிரவுட் மீன்குஞ்சு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு அவலாஞ்சி டிரவுட் மீன்குஞ்சு பொரிப்பகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் கூறும்போது, "2019-ம் ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அவலாஞ்சி டிரவுட் மீன்குஞ்சு பொரிப்பகம் சேதமடைந்தது. தேசிய வேளாண் அபிவிருத்தி-ஆர்.கே.வி.ஒய். திட்டத்தின் கீழ் நீர்வழிப் பாதை பழுது பணிகளுக்காகரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ்இணைப்பு பாலம் ரூ.17.22 லட்சம்,செக்டேம் ரூ.32.04 லட்சம், வடிகால்ரூ.43.03 லட்சம், தடுப்புச்சுவர் ரூ.34.93லட்சம், 5 மீன் வளர்ப்பு குளம் ரூ.18.79 லட்சம் என மொத்தம்ரூ.2.50 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவலாஞ்சி டிரவுட் மீன் பண்ணையை நவீனமயமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x