Published : 10 Feb 2023 07:05 PM
Last Updated : 10 Feb 2023 07:05 PM
சென்னை: காலநிலை மாற்றம் காரணமாக கடற்கரைப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் கண்டறிந்து தடுக்க "உயிரி கவச" முறையை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் 6632 கி.மீ. தொலைவுக்கு கடற்கரைப் பகுதிகள் உள்ளது. இவற்றில் 33% சதவீதம் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் 42.7 சதவீதம் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இந்நிலையில், காலநிலை மாற்றம் காரணமாக கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அதிகாரிகள் கூறுகையில், "தமிழகத்தில் 1076 கி.மீ நீளத்திற்கு கடற்கரை பகுதிகள் உள்ளது. இந்தியாவின் மொத்த கடற்கரை பகுதிகளில் 15 சதவீதம் தமிழகத்தில் உள்ளது. 14 மாவட்டங்களில் இந்த கடற்கரை பகுதிகள் உள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக கடற்கரை பகுதிகள் அதிக அளவுக்கு பாதிப்பை சந்தித்து வருகிறது. இயற்கை பேரிடர்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை தடுக்க கடற்கரைகளில் உயிரி கவச முறையை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடல் அரிப்பை தடுப்பது, பசுமை பரப்பளவு அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக, காலநிலை மாற்றம் காரணமாக தற்போது கடற்கரைகளில் எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பாக ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளை கொண்டு கடற்கரைப் பகுதிகளில் காலநிலை மாற்ற பாதிப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT