Last Updated : 08 Feb, 2023 03:25 PM

 

Published : 08 Feb 2023 03:25 PM
Last Updated : 08 Feb 2023 03:25 PM

விருதுநகர் மாவட்டத்தில் நீர்ப் பறவைகள் வருகை உயர்வு: கணக்கெடுப்பில் தகவல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நீர்ப் பறவைகள் வருகை அதிரித்துள்ளதாக பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

ஆண்டுதோறும் ஜனவரி இறுதியில் நீர் வகைப் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதபோன்று, கடந்த ஜனவரி 29ம் தேதியன்று விருதுநகர் மாவட்டத்தில் நீர் வகைப் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம், கல்லூரி மாணவர்கள், பறவைகள் ஆர்வலர்கள், வனத்துறையினர் கலந்துகொண்டனர். மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார் இக்கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கிவைத்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அணைகள், குளங்கள், கண்மாய்கள், குட்டைகள், நீர்வழிப் பகுதிகள் ஆறுகள் உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்றன.

இந்த ஆண்டு போதிய மழைப்பொழிவு காரணமாக அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, சாத்தூர், இருக்கன்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அணைகள், கண்மாய்கள், குளங்களில் நீர் நிரம்பி காணப்பட்டதால் இப்பகுதியில் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து பறவைகள் ஆர்வலர்கள் கூறுகையில், ''இந்த ஆண்டு மாவட்டத்தில் பரவலான மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் நீர் நிறைந்து காணப்பட்டது. இதனால், பறவைகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக கூழைக்கிடா, செங்கால்நாரை போன்றவை அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. அதோடு, நீர் நிலைகளிலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் வகையான 61 வகையான பறவையினங்கள் கண்டறியப்பட்டன. குறிப்பாக இவை செங்கல்பட்டு, கோடியக்கரை, வேதாரண்யம் போன்ற பகுதிகளிலிருந்து வந்துள்ளன.

பறவைகள் வருகை அதிகரித்துள்ளபோதும் ஒரு சில நீர் நிலைகளில் பறவைகளைக் காணமுடியவில்லை. காரணம், மாசு கலந்த தண்ணீர். நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பது, ஆகாய தாமரை போன்றவை படர்ந்து காணப்படுவது, மீன் பிடிப்பதற்காகவும், மீன் வளைகளை பறவைகளே சேதப்படுத்தும் என்பதால் வெடி போட்டு பறவைகளை விரட்டுவது, நீர் நிலைகளில் குப்பைகளைக் கொட்டுவது போன்ற காரணங்களால் பறவைகள் ஒரு சில இடங்களில் உள்ள நீர் நிலைகளுக்கு வரவில்லை'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x