Published : 07 Feb 2023 04:07 AM
Last Updated : 07 Feb 2023 04:07 AM
பொள்ளாச்சி: தருமபுரி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானை வனத்துறையால் பிடிக்கப்பட்டு, ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள வரகளியாறு வனப்பகுதியில் நேற்று விடுவிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளான சீரியம்பட்டி, ஈச்சம்பள்ளம், சோமனஹள்ளி, பாப்பாரப்பட்டி, காட்டம்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலுள்ள விளைநிலங்களுக்குள் இரண்டு காட்டு யானைகள் புகுந்து, அங்கு பயிரிடப்பட்டிருந்த கரும்பு, ராகி, சோளம், நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
இந்த இரண்டு யானைகளையும் பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாப்பாரப்பட்டி பகுதிக்கு வரவழைக்கப்பட்டது.
கும்கி யானை துணையோடு காட்டு யானைகளை பிடிக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர். அதன்படி, பாப்பாரப்பட்டி அருகே பெரியூர் ஈச்சம்பள்ளம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் சுற்றித்திரிந்த இரண்டு யானைகளில் ஒரு யானைக்கு, வன கால்நடை மருத்துவர்கள் பிரகாஷ், கலைவாணன் ஆகியோர் மயக்க ஊசி செலுத்தினர்.
இதில் மயக்கமடைந்த 20 வயதுடைய மக்னா யானையை, கும்கி யானை உதவியுடன் கிரேன் மூலமாக தூக்கி வனத்துறைக்கு சொந்தமான லாரியில் ஏற்றினர். அங்கிருந்து ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு நேற்று காலை கொண்டுவரப்பட்டது. உலாந்தி வனச்சரகத்திலுள்ள வரகளியாறு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட மக்னா யானையின் உடல்நிலையை, வன கால்நடை மருத்துவர்கள் சுகுமார், விஜயராகவன், மனோகரன் ஆகியோர் பரிசோதனை செய்தனர்.
பின்னர், மயக்கம் தெளிவதற்கான ஊசி செலுத்தப்பட்டது. இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் பார்கவ தேஜா, உதவி வனப் பாதுகாவலர் செல்வம், பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில், நேற்று காலை வனப் பகுதிக்குள் மக்னா யானை விடுவிக்கப்பட்டது.
லாரியில் இருந்து இறங்கிய மக்னா யானை, உடல் வெப்பத்தை தணிக்க தும்பிக்கையால் மண்ணை எடுத்து உடல் முழுவதும் வீசியபடி வனப்பகுதிக்குள் சென்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT