Published : 07 Feb 2023 04:10 AM
Last Updated : 07 Feb 2023 04:10 AM
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி மக்னா யானை பிடித்துச் செல்லப்பட்ட நிலையில் தற்போது பாலக்கோடு பகுதியில் 5 யானைகள் நீர்நிலைகளில் முகாமிட்டுள்ளன.
பாலக்கோடு வனச்சரகத்தையொட்டிய கிராமங்களில் நுழைந்து அச்சுறுத்தி வந்த மக்னா யானையை கடந்த 5-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்து ஆனைமலை யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், நேற்று பாலக்கோடு வனச்சரக பகுதியில் இருந்து வெளியேறிய 5 யானைகள் மணியக்காரன் கொட்டாய் பகுதியில் உள்ள பெரிய ஏரியில் முகாமிட்டு குளித்தும், நடமாடியும் வருகின்றன.
இந்த குழுவில் 3 குட்டி யானைகளும் இடம்பெற்றுள்ளன. யானைகள் குளித்து மகிழ்வது அவ்வழியே செல்வோருக்கு பொழுதுபோக்கு காட்சியாக உள்ளது. ஆனால், அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் யானைகளால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும், விளைநிலங்களில் அவை நுழைந்து பயிர்களை சேதப்படுத்தலாம் என்றும் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, யானைகளை அடர் வனப்பகுதிக்கு இடம் பெயரச் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT