Published : 03 Feb 2023 04:17 AM
Last Updated : 03 Feb 2023 04:17 AM

மங்கோலிய நாட்டின் கழுத்துப் பட்டையுடன் கூந்தன்குளத்துக்கு வந்த வரித்தலை வாத்து

திருநெல்வேலி: மங்கோலிய நாட்டில் கழுத்துப் பட்டை அணிவிக்கப்பட்ட வரித் தலை வாத்து கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் காணப்பட்டது.

இது குறித்து பறவைகள் ஆராய்ச்சியாளரும், மணி முத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான மு.மதிவாணன் கூறியதாவது:

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்துக்கு குளிர்காலத்தில் இடம் பெயர்ந்து வரும் பறவை இனங்களில் வரித்தலை வாத்தும் ஒன்றாகும். சாம்பல் நிற உடலைக் கொண்ட இதன் தலையில், தனித்த கருப்புநிற பட்டைகள் மற்றும் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற அலகு மற்றும் கால்களும் காணப்படும்.

கிழக்கு மற்றும் தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த வாத்து வலசை போவதில் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த வாத்து இனங்கள் ஒரு நாளில் 1,600 கி.மீ.-க்கு அதிகமான தூரத்தை கடப்பதாகவும், 29,500 அடி உயரமுள்ள இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை வலசையின் போது 2 முறை கடப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தின் காடன்குளம் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு பணிக்கு சென்றபோது கூட்டமாக நின்ற வரித்தலை வாத்து இனங்கள் தென்பட்டன. அதில் ஒரு வாத்தின் கழுத்தில் பச்சைநிறப்பட்டை இருந்தது புகைப்படம் எடுத்தபோது தெரியவந்தது. அப்பட்டையில் எப்-60 என்று குறிக்கப்பட்டிருந்தது.

பச்சை நிறப்பட்டைகளை மங்கோலிய நாட்டு பறவையியல் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்து வார்கள். எனவே அந்நாட்டு வனஉயிரின அறிவியல் மற்றும் பாதுகாப்பு மையத்தை மின்னஞ்சலில் தொடர்புகொண்டு தகவல்களைக் கேட்டோம். அப்போது அங்குள்ள பறவையியல் ஆராய்ச்சியாளர் செவீன்மியாதாக் என்பவர் சில தகவல்களை அனுப்பியிருந்தார்.

எப்-60 என்ற பச்சை நிறப்பட்டை பொருத்திய ‘நியம்பேயர்’ என்று பெயரிடப்பட்ட வரித்தலை வாத்து 2014-ம் ஆண்டு மத்திய மங்கோலியாவில் அர்காங்காய் மாகாணத்தில் டெர்க்கின் சாகன் ஏரியில் வடமேற்கு பகுதியில் பிடிக்கப்பட்டு கழுத்துப்பட்டை மாட்டப்பட்டிருந்தது. இப்பறவை ஏற்கெனவே இருமுறை இந்தியா வில் பார்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று அந்த தகவலில் தெரிவித்திருந்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு குறைவாக இருந்த போதிலும் வலசை பறவைகள் அதிகளவில் வந்துள்ளன. அவற்றை காப்பதற்கு அரசுத்துறைகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x