Published : 29 Jan 2023 04:25 AM
Last Updated : 29 Jan 2023 04:25 AM

கழுவேலி, ஊசுடு ஏரியில் பறவைகள் கணக்கெடுப்பு

புதுச்சேரி: கழுவேலி, ஊசுடு ஏரியில் இன்று பறவைகள் கணக்கெடுப்பு நடக்கிறது. மாதிரி கணக்கெடுப்பில் கூடுதல் பறவைகள் நேற்று அடையாளம் கண்டறியப்பட்டன.

தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வனசரகத்தில், ஊசுடு பறவைகள் சரணாலயம் மற்றும் கழுவேலியில் நேற்று மாதிரி பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. வனத்துறையினர், மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் இணைந்து இப்பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து திண்டிவனம் வனசரகர் அஸ்வினி கூறுகையில், "கழுவேலி பறவைகள் சரணாலயம் 5 ஆயிரம் ஹெக்டேர் அளவுடையது. ஊசுடு பகுதி புதுச்சேரி - தமிழகம் இணைந்த பகுதியாகும். இவை பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இப்பகுதிகளில் இரவு நேரங்களில் ரோந்து பணியும் மேற்கொள்கிறோம்.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி விதிமீறல் இருந்தால் வழக்கும் பதிவு செய்கிறோம். இதற்கு இரண்டரை ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு. குற்றங்களை பொருத்து, ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. கழுவேலி, ஊசுடு ஏரி பகுதிகளில் மாதிரி பறவைகள் கணக்கெடுப்பு நேற்று நடந்தது.

12 இடங்களாகப் பிரிக்கப்பட்டு பறவைகள் கணக்கெடுப்பு இன்று நடக்கிறது. இதில் அதிகளவு மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் பங்கேற்க உள்ளனர்" என்று தெரிவித்தார். பறவைகள் மாதிரி கணக்கெடுப்பில் பங்கேற்ற மாணவி ஷோபனா கூறுகையில், "மாதிரி கணக்கெடுப்பில் கடந்த ஆண்டை விட கூடுதல் பறவைகளை அடையாளம் கண்டோம். அதிகளவு காணக்கிடைக்காத பல பறவைகளையும் பார்த்தோம்.

இன்று நடக்கும் கணக்கெடுப்பில் இன்னும் அதிக பறவைகள் இருக்க வாய்ப்புள்ளது." என்றார். இதேபோல் தனியார் பறவைகள் கணக்கெடுப்பாளர் புவனேஷ் குப்தா கூறுகையில்," திண்டிவனம் பகுதியில் நன்னீர் பகுதியிலும் கணக்கெடுப்பு நடக்கிறது. கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, அழிவின் விளிம்பின் உள்ள பறவைகளும் உள்ளன " என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x