Published : 17 Jan 2023 05:47 PM
Last Updated : 17 Jan 2023 05:47 PM
சென்னை: போகிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து 200 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள், சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களால் பெறப்பட்டு இன்சினரேட்டர் ஆலையில் எரியூட்டப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போகி பண்டிகையின்போது பொதுமக்கள் பொருட்களை எரிப்பதால் காற்று மிகவும் மோசடைந்து மக்கள் சுவாசிக்க சிரமப்படும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, அதிகாலை எரிக்கப்படும் துணிகள், டயர், டியூப், பிளாஸ்டிக் போன்ற நச்சுப் பொருட்களால், காற்றில் நச்சு நுண் துகள்கள் அதிகளவில் படிந்து, காற்று மாசை ஏற்படுத்துகிறது. அந்தக் காற்றை சுவாசிக்கும் ஆஸ்துமா நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோயாளிகள் மூச்சுத்திணறல் போன்ற உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், புகைமூட்டத்தால் விமானப் போக்குவரத்து முதல் சாலைப் போக்குவரத்து வரை பாதிக்கப்படுகிறது.
இவற்றை தடுக்கும் வகையில், இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி முதன்முறையாக, புது முயற்சியை எடுத்தது. இதன்படி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேவையற்ற நிலையில் உள்ள டயர், டியூப், துணிகள், பிளாஸ்டிக் பொருட்களை, மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 200 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள், தூய்மைப் பணியாளர்கள் மூலம் பெறப்பட்டது.
இந்தப் பொருட்கள் மணலி மற்றும் கொடுங்கையூரில் உள்ள இன்சினரேட்டர் ஆலையில் எரியூட்டப்பட்டது. இந்த ஆலையில் பொருட்களை எரியூட்டுவதால் புகை வெளியே வராது. சாம்பாலாக மட்டுமே கிடைக்கும். அந்த சாம்பலும் பேவர் பிளாக் கற்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "போகி பண்டிகையன்று காற்று மாசை குறைக்க இந்த ஆண்டு புதிய முயற்சியாக பொதுமக்களிடம் இருந்து பழைய பொருட்களை வாங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்தியது. இதற்கு பொதுமக்களிடம் பெரிய வரவேற்பு இருந்தது. பொதுமக்கள் 200 டன் மதிப்பிலான பழைய பொருட்களை மாநகராட்சியிடம் வழங்கினர். இதன் காரணமாக இந்த ஆண்டு பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது வெகுவாக குறைந்துள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு போகிப் பண்டிகையன்று சென்னையில் காற்று தரக் குறியீடு 14 மண்டலங்களில் மிதமான அளவிலும், ஒரு மண்டலத்தில் மோசமான அளவிலும் இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது" என்று அவர்கள் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT