Published : 14 Jan 2023 06:42 PM
Last Updated : 14 Jan 2023 06:42 PM
கூடலூர்: தேனி மாவட்டம் குமுளி மலைச் சாலையில் குரங்களுக்கு இரை தருவதாக நினைத்து சுற்றுலாப் பயணிகள் பலரும் உணவளித்து வருகின்றனர். இவற்றை உண்ணும் மும்முரத்தில் வாகனங்களில் சிக்கி பல குரங்குகள் இறந்துவிடுகின்றன.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் இருந்து 6 கிலோ மீட்டர் தூர மலைப்பாதையில் குமுளி அமைந்துள்ளது. இங்குள்ள மலைப்பகுதிகளில் யானை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. இருப்பினும் வாகன இரைச்சல், பொதுமக்கள் நடமாட்டம் காரணமாக இந்த விலங்குகள் குமுளி மலைச்சாலைக்கு வருவதில்லை. பெரும்பாலும் குரங்குகள், மான் போன்ற விலங்குகளே இச்சாலை அருகே வசிக்கின்றன.
இப்பகுதி வழியே செல்லும் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் பலரும் தாங்கள் கொண்டு செல்லும் உணவுகள், சிற்றுண்டிகள், குளிர்பானம் போன்றவற்றை குரங்குகளுக்கு தருகின்றனர். சிலர் சாலையோரங்களில் வீசி விட்டும் செல்கின்றனர். இதனை உண்ண வரும் குரங்குகள் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் நிலை உள்ளது.
ஆகவே வனவிலங்குகளுக்கு எந்தவகையான உணவுகளையும் அளிக்கக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இது குறித்த அறிவிப்புகளையும் ஆங்காங்கே வைத்துள்ளனர். இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் பலரும் தங்கள் போக்கை மாற்றிக் கொள்வதில்லை. உதவுவதாக நினைத்து வனவிலங்குகளின் இறப்பிற்கு காரணமாகி விடுகின்றனர்.
இதுகுறித்து கம்பம் மேற்கு வனச்சரக அதிகாரிகள் கூறுகையில், ''வனவிலங்குகள் தங்களுக்கான இரையை தேடிச் சென்றுதான் உண்ண வேண்டும். ஆனால் பலரும் குரங்குகளுக்கு உணவுகளை அளிப்பதால் அதன் வாழ்வியலில் மாறுபாடு ஏற்படுகிறது. கீழேகிடக்கும் உணவுகளை உண்ணும் மும்முரத்தில் இருப்பதால் வளைவுகளில் வேகமாக வரும் வாகனங்கள் இதன் மீது மோதி விடுகின்றன இதனால் குரங்களின் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT