Published : 07 Jan 2023 07:44 AM
Last Updated : 07 Jan 2023 07:44 AM
கிருஷ்ணகிரி: பிளாஸ்டிக் கழிவுகளை புகையில்லா எரிபொருளாக மாற்றும் திட்டத்தை, கிருஷ்ணகிரி நகராட்சியில் முன்னோட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நகராட்சியில் உள்ள வீடு, கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், காய்கறி மார்க்கெட்டுகளில் இருந்து நாள்தோறும் 28 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என வீடுகளில் தரம் பிரித்து வாங்கப்படுகிறது. ஆனால், சாலையோரங்களில் உள்ள குப்பை தொட்டிகளில், பிளாஸ்டிக் பொருட்களை குப்பைகளுடன் கலந்து வீசுவதால், தரம் பிரிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
இந்நிலையில், பிளாஸ்டிக் கழிவுகளை புகையில்லா எரிபொருளாக மாற்றும் திட்டத்தை, நகராட்சி நிர்வாகம், தனியார் நிறுவனத்தின் உதவியுடன் முன்னோட்டமாக செயல்படுத்தி உள்ளது.
12 டன் பிளாஸ்டிக் கழிவுகள்
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினர் கூறும்போது, கிருஷ்ணகிரியில் தினமும் சேகரிக்கப்படும் 28 டன் குப்பைகளில், 12 டன் பிளாஸ்டிக் குப்பைகள். இதனை 3 குப்பை கிடங்குகளிலும் தரம் பிரிப்பதில் ஏற்படும் காலதாமதம் காரணமாக அதிகளவில் தேங்கி உள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் கழிவுகளை புகையில்லாத எரிபொருளாக மாற்றி தருவதாக, பரமகுடியை சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் முன்வந்தனர். தற்போது சோதனை ஓட்டமாக, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குப்பை கிடங்கில் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு 3 மாதம் முன்னோட்டம் தொடங்கி உள்ளது என்றனர்.
விறகு வடியில்...
இப்பணிகள் மேற்கொண்டுள்ள தனியார் பிளாஸ்டிக் ஒழிப்பு நிறுவனத்தினர் கூறும்போது, பொதுவாக பிளாஸ்டிக் கழிவுகள் மறுசூழற்சி செய்து, தார் சாலை அமைக்க பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியவில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில், பிளாஸ்டிக் கழிவுகளை புகையில்லா எரிபொருளாக மாற்றும் இயந்திரத்தை கண்டறிந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம்.
தமிழகத்தில் முதன்முறையாக கிருஷ்ணகிரி நகராட்சி குப்பை கிடங்கில் எங்களது இயந்திரங்களை பொருத்தி, பிளாஸ்டிக் கழிவுகளை முதலில் துகளாக மாற்றி, அந்த துகள்கள் எக்ஸ்டிரூட் கம்ப்ரசர் இயந்திரம் மூலம் உருளையாக இறுக்கி விறகு வடியில் கொடுத்துவிடுகிறோம்.
சுற்றுச்சூழல்
இதனை அரிசி ஆலை உள்ளிட்ட எரிபொருள்கள் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் விறகு, நிலக்கரிக்கு மாற்றாக பயன்படுத்தலாம். இதன் மூலம் மரங்கள் வெட்டப்படுவதும், சுற்றுச்சூழல் மாசுபடுவது முற்றிலும் தடுக்கப்படும். மேலும், பிளாஸ்டிக் கழிவுகள் முற்றிலும் ஒழிக்க முடியும். கிருஷ்ணகிரியை தொடர்ந்து, கடலூர் நகராட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். அரசு அனுமதியளிக்கும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT