Published : 28 Dec 2022 04:30 AM
Last Updated : 28 Dec 2022 04:30 AM
திருப்பூர்: மகாராஷ்டிர மாநில அரசின் தமிழ் பிரிவு பாடப் புத்தகத்தில், சூழலியலாளர் கோவை சதாசிவத் தின் உரையாடல் கதை இடம்பெற்றுள்ளது.
திருப்பூர் வீரபாண்டியில் வசிப்பவர் சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம் (61). வாழும் சுற்றுச் சூழல் தொடர்பாக பல்வேறு களப் பணிகளையும், அவை தொடர்பான பல்வேறு புத்தகங்களையும் எழுதுபவர். சுற்றுச்சூழல் அக்கறையை குழந்தைகளின் மனதில் வேர்விட வைக்கும் நம்பிக்கையாளர். திருப்பூர் மாநகரில் மிதிவண்டியில் வலம் வரும் சூழலியலாளரான கோவை சதாசிவம், 5 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ’சில்லுக்கோடு’ புத்தகத்தில் இடம்பெற்ற ’கும்மாயம் கும்மாயம்’ உரையாடல் கதை, மகாராஷ்டிர மாநில அரசின் தமிழ் குழந்தைகளுக்கான பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கோவை சதாசிவம் கூறியதாவது: மகாராஷ்டிர மாநில அரசு தமிழ் குழந்தைகளுக்கான 7-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்த ’உரையாடல் கதை’ இடம்பெற வைத்து கவுரவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர்களின் மரபு விளையாட்டுகளும், அதில் உள்ள சுற்றுச்சூழல் அக்கறை மற்றும்பல்லுயிர் பெருக்கம் உள்ளிட்டவைகள் கொண்ட 25 உரையாடல் கதைகள் கொண்ட புத்தகம்தான் சில்லுக்கோடு. குறிப்பிட்ட கதையான ’கும்மாயம்- கும்மாயம்’ என்பது கொங்கு வட்டார வழக்கில் உள்ள வார்த்தை.
பருப்பு கடைய பயன்படுத்தும் மத்தை, கும்மாயம் என்றும், வரகு அரிசியும், அவரை பருப்பும் கொண்டு தயாரிக்கப்படும் கலவை சோறுக்கு கும்மாயம் என்றும் பெயர். அதாவது, ஒரு பெண் குழந்தையும், அம்மாவும் பிசைந்த ஒரு கவளச் சோற்றை, குழந்தைக்கு ‘கும்மாயம், கும்மாயம்’ என்று அழைத்து அந்த உணவை ஊட்டுவது தான் கதை.
அதாவது, நன்கு கடைந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவை உப்பு, காரம் மற்றும் சோற்றின் பதம் உள்ளிட்டவைகளை தாய் தான் முதலில் சரிபார்ப்பார். அதன்பின், அந்த குழந்தையின் அருகில் பார்க்கும் அண்ணனுக்கு ஒரு வாய் தருவாள். தொடர்ந்து நிலாவுக்கு ஒரு வாய் என்று சோற்றை வானை நோக்கி வீசுவாள். குழந்தை ஆச்சர்யத்துடன் பார்க்கும் தருணத்தில், அந்த சோறு மேலே சென்று கீழே விழும். அதனை எறும்புகள் உள்ளிட்டவை உண்டு மகிழும். அருகில் நிற்கும் நாய்க்கு ஒரு வாய் தருவாள். அதேபோல் குழந்தை சாப்பிட்டு முடித்ததும், அந்த பாத்திரத்தை கழுவி வீட்டின் மேற்கூரையில் ஊற்றுவாள். அதனை காக்கைகள் உண்டு களியும்.
இப்படி ஒரு கவளச்சோற்றின் வாயிலாக, பல உயிர்கள் பசி ஆறுவதாக கதை முடிந்திருக்கும். குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்திய வேண்டிய தேவை உள்ளது. பலரும்அலைபேசியை காண்பித்து குழந்தைகளுக்கு சோறுட்டுகிறார்கள். ஆனால், அதைவிட அவர்கள் உரையாடலுடன் ஊட்டும்போது, அந்த உணவும், குழந்தையும், கதையும் இந்த மண்ணில் தொடர்ந்து மீட்டெடுக்கப்படுகிறது.
குழந்தைகள் வானத்தை பார்த்து அண்ணாந்து சாப்பிடும்போது, உணவுக் குழல் விரிவடையும். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் காரணங்கள் உண்டு. தமிழர்களின் பண்பாடு மற்றும் மரபுசார்ந்த கதைகளை மீட்டெடுக்கும் நோக்கில், இந்த கதையை ஆசிரியர் ’கலகல’ வகுப்பறை சிவா கொண்டு போய் சேர்த்ததன் விளைவாக, அந்த மாநிலத்தின் பாடப்புத்தகத்தில் இந்த கதை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT