Published : 29 Nov 2022 04:05 AM
Last Updated : 29 Nov 2022 04:05 AM
உதகை: நீலகிரி மாவட்டத்தில் குளிர் மற்றும் பனி தொடங்கும் நேரத்தில் பறவைகளின் உள்ளூர் வலசையும் தொடங்கும். அந்த வகையில், தற்போது பனி தொடங்கி இருப்பதால், பறவைகளின் உள்ளூர் வலசையும் தொடங்கியுள்ளது.
அதன்படி, சமவெளி பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் வெப்பம், குளிர் காரணமாக பறவைகள் இடம்பெயர்கின்றன. அதில், தற்போது ‘மலபார் விசிலிங் தரஷ்' பறவை அதிகளவு இடம் பெயர்வை தொடங்கியுள்ளது. இந்த பறவை, மனிதர்களைபோல விசில் அடிக்கும் தன்மை கொண்டது.
மேற்குத் தொடர்ச்சி மலை, மத்திய இந்தியா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் சில பகுதிகளில், இந்த இன பறவை அதிக அளவு காணப்படுகிறது. அடர்ந்த ஆற்றங்கரை காடுகளிலும், இருண்ட மரத்தின் அடியிலும், பாறை நீரோடைகள் மற்றும் காடுகள் உள்ள ஆறுகளின் விளிம்புகளிலும் அதிக அளவு காணப்படுகின்றன. கடல் மட்டத்திலிருந்து 220 மீட்டர் உயரத்தில் உள்ள மலையடி ஓரத்தில் அதிக அளவு காணப்படுகிறது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் தொட்டபெட்டா, கோடநாடு, பர்லியாறு ஆகிய பகுதியில் அதிகமாக காணப்படுகின்றன.
இதுகுறித்து பறவை ஆர்வலர்கள் கூறும்போது, "இந்த பறவை கருநீல நிற கழுத்து, நீல நிற இறகுகள், தலைமேல் வீ போன்ற வடிவைக் கொண்டு அழகாக காணப்படும். காலை நேரங்களில் விசில் அடிப்பது ரம்மியமாக இருக்கும். இந்த விசிலின் சத்தத்தை கேட்பதற்காகவே ஏராளமான பறவை ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் பார்க்க செல்கின்றனர்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT