Published : 18 Nov 2022 08:11 PM
Last Updated : 18 Nov 2022 08:11 PM
உர்ஜெல்: பேரண்டம் மிகவும் விந்தையானது. அரிய வகை உயிரினங்கள் கடந்த காலங்களில் வாழ்ந்துள்ளன. இப்போது வாழ்ந்தும் வருகின்றன. ஒவ்வொரு படைப்புமே ஒவ்வொரு அதிசயத்தை தாங்கி நிற்கிறது. அந்த வகையில் டைனோசர் காலத்தில் மினி கூப்பர் காரின் அளவிலான ஆமை உயிரினம் கடலில் வலம் வந்துள்ளது. அதன் எச்சங்களை அடையாளம் கண்ட ஆராய்ச்சியாளர்கள் இதை தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள அல்ட் உர்ஜெல் பகுதியில் இந்த ஆமையின் எச்சம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சுமார் 83 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தீவுக் கூட்டம் உருவாவதற்கு முன்னர் இந்த ஆமைகள் அந்தப் பகுதியில் இருந்த கடலில் வலம் வந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். அதாவது, பூமியில் டைனோசர்கள் கடைசியாக வாழ்ந்ததாக சொல்லப்படும் கிரீத்தேசியக் காலத்தில் இந்த ஊர்வன உயிரினம் வாழ்ந்து வந்துள்ளது.
Leviathanochelys aenigmatica எனப்படும் இந்த ஆமை இனம் 3.7 மீட்டர் நீளம் (சுமார் 12 அடி) இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் எடை 2 டன்களுக்குள் இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாம். மொத்ததில் கடலில் ஒரு மினி கூப்பர் காரை போல இந்த ஆமை வலம் வந்திருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது உலகின் மிகப்பெரிய ஆமையாக அறியப்படும் லெதர்பேக்கை காட்டிலும் இது பெரியது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். லெதர்பேக் ஆமை 7 அடி நீளம் வரை வளரும். அதோடு பூமியின் மிகப்பெரிய ஆமை இனமான ஆர்கெலோன் ஆமை இனத்தை இந்த மினி கூப்பர் சைஸ் ஆமை இனம் கிட்டத்தட்ட பொருந்தி போகிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆமையின் எச்சத்தை அல்ட் உர்ஜெல் பகுதியில் ஒரு கிராமத்தில் இருந்து ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT