Published : 09 Nov 2022 06:14 PM
Last Updated : 09 Nov 2022 06:14 PM
புதுச்சேரி: கடலரிப்பில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ள புதுச்சேரியின் தற்போதைய சூழலால் மக்கள் தவித்து வரும் நிலையில், கடற்கரை மேலாண்மை திட்டத்தை உருவாக்கும் பணியில் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் இறங்கியுள்ளது.
புதுச்சேரியில் அழகான கடற்கரையை பல பகுதிகளில் காண முடியும். ஆனால் தற்போதைய சூழலில், கடல் அரிப்பு மக்களை கடும் துக்கத்துக்கு ஆளாக்கியுள்ளது. புதுச்சேரியில் பிள்ளைச்சாவடி, காலாப்பட்டு, சோலைநகர், வீராம்பட்டினம் மற்றும் காரைக்கால் என பல பகுதிகளில் கடல் அரிப்பு பிரச்சினை அதிகரித்துள்ளது. இதனால்கடற்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. ‘நீலக்கொடி’ அங்கீகாரம் பெற்ற சின்ன வீராம்பட்டினம் பகுதியில், கடல் அரிப்பு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடற்கரை பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரங்கள், குடில் போன்ற நிழற்குடைகள் உள்ளிட்டவை சாய்ந்து மணற்பரப்பில் விழுந்து கிடக்கின்றன. இந்த கடலரிப்பால் கரையோர கடல் மணல் பரப்பும் குறைந்து வருகிறது. பல கடலோர கிராமங்களில் குடியிருப்புகள், கட்டிடங்கள் இடியும் நிலையில் உள்ளன. தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் (என்சிசிஆர்) அறிக்கையின் படி, நாட்டிலேயே மேற்குவங்கத்துக்கு (63.5 சதவீதம்) அடுத்து 57 சதவீத கடலரிப்புடன் புதுச்சேரி இரண்டாவது இடத்தில் உள்ளது.
1990-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலத்தில் புதுவை கடற்கரையில் கடல்அரிப்பு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் 35% கடலோர பகுதிநிலையாக இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. செயற்கை கட்டமைப்புகளே கரையோரங்களில் கடலரிப்பு அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகிறது. கரையோரங்களில் கடலரிப்பை ஊக்குவிப்பதில் செயற்கை கட்டமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. என்சிசிஆர் அதிகாரிகள் தரப்பில் இதுபற்றி விசாரித்தபோது, "புதுச்சேரியில் கடற்கரை பகுதிகளைச் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பாதுகாக்க விரிவான கடற்கரை மேலாண்மை திட்டத்தை தயாரிக்க புதுச்சேரி அரசு கோரியுள்ளது. அதன்படி, விரிவான ஆய்வு மேற்கொள்கிறோம்.
வடக்கே மரக்காணம், தெற்கேகடலூர் மற்றும் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் வரையிலான முழு கடற்கரையையும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் ஆய்வு செய்யும். புதுச்சேரி கடற்கரையை பாதுகாப்பதற்கான உத்திகளை உருவாக்க, ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. தேங்காய்திட்டில் 1989-ம் ஆண்டு மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டதில் இருந்து புதுச்சேரியின் கடற்கரையோரம் 100 மீட்டர் தூரம் வரை சீராக கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இருப்பினும், என்சிசிஆர் மையத்தால் பரிந்துரைக்கப்பட்ட செயற்கை கடற்கரை மணல் பரப்பு திட்டத்தால் இப்போது கடற்கரையோரம் விரிவடைந்துள்ளது.
புவி அறிவியல் அமைச் சகத்தால் நிதியளிக்கப்பட்டு, தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு, 2018-ம்ஆண்டில் தலைமை செயலகத்திற்கு எதிரே உள்ள கடலில் புதியதொழில்நுட்பம் மூலம் ராட்சத இரும்பு மிதவை கடலில் அமிழ்த்தப்பட்டது. இது நீரில் மூழ்கி அலைகளின் செயல்பாட்டை குறைக்க உதவியது. மேலும், கடற்கரையோரத்தில் அரிப்பைத் தடுத்து, மணல் சுதந்திரமாக வடக்கு நோக்கி செல்ல அனுமதித்தது.
இத்திட்டத்தால் கடற்கரை இப்போது தெற்குப் பக்கம் திரும்பியுள்ள நிலையில், புதுச்சேரியின் பக்கத்து கிராமங்களான தமிழகப் பகுதியில் கடல் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டதால், கடற்கரையின் சமநிலை சீர்குலைந்து, புதுச்சேரியின் பிள்ளைச்சாவடி, காலாப்பட்டு, வீராம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கடலரிப்பு அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பல பகுதிகளில் காலநிலை மாற்றம் காரணமாக கடலரிப்பு உருவாகிறது. மணலை தக்க வைத்து, கடற்கரையின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளை மீட்டெடுக்க, கடற்கரை மணல் பரப்புடன் சுற்றுச்சூழலை பாதிக்காத மென்மையான பொறியியல் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.
கடற்கரைகளில் ஏற்பட்ட கடல் அரிப்புகளின் தாக்கத்தையும் முழுமையாக ஆய்வு செய்து, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் எதிர்கால தீர்வுகளுடன் கூடிய கடற்கரை பாதுகாப்பு மேலாண்மை திட்டத்தை தயாரித்து புதுவை அரசிடம் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் வழங்கும்” என்று தெரிவித்தனர். இந்தியாவின் பல பகுதிகளில் காலநிலை மாற்றம் காரணமாக கடலரிப்பு உருவாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT