Published : 07 Nov 2022 11:28 PM
Last Updated : 07 Nov 2022 11:28 PM

15 ஆண்டுகளில் புயல்களால் ஏற்படும் உயிரிழப்பு 90 சதவீதம் குறைப்பு - ஐநா கூட்டத்தில் மத்திய அமைச்சர் பேச்சு

எகிப்து: ஐநா தலைமைச் செயலாளரின் உயர்நிலை வட்டமேசை கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உரையாற்றினார்.

எகிப்து நாட்டின் ஷார்ம் எல்- ஷேக் நகரில் நடைபெற்ற இந்த சிஓபி-27 உலகத்தலைவர்கள் உச்சிமாநாட்டில் பேசிய அமைச்சர் பூபேந்தர் யாதவ், "அனைத்துக்குமான முன்னெச்சரிக்கைகளை அடைவதற்கான தலைமைச்செயலாளரின் திட்டத்திற்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கிறது. பருவ நிலை மாற்ற விகிதத்தை குறைப்பதற்கு உலகளாவிய பருவ நிலை தணிப்புக்கான வேகம் போதுமானதாக இல்லை. உலகை சுற்றிலும், கணிசமான அளவு சேதங்களுக்கு காரணமாக இருக்கும். இயற்கை சீற்றங்களை எதிர்கொள்வதற்கான திட்டம் உலகிற்கு உடனடியாக தேவைப்படுகிறது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "இந்த பிரச்சனைகள் மீதான கவனம் குறைவான நேரம் மட்டுமே மனதில் இருக்கின்றன. குறைவான பாதிப்பை உடைய நாடுகளின் கவனம் விரைவிலேயே மறைந்துவிடுகின்றன. இது பருவ நிலை மாற்றத்தில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும். பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி அளவு இன்னமும் குறைவாக உள்ள நிலையில், உயிர்களையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதற்கு முன்கூட்டிய எச்சரிக்கை முக்கியமானதாக உள்ளது. அனைத்துக்குமான முன்கூட்டிய எச்சரிக்கை என்பது, உடனடியாக சொத்துக்கள் மீதான தாக்கங்களை குறைப்பதில் பங்கு வகிக்கிறது என்பது மட்டுமின்றி, நீண்ட கால சமூக பொருளாதார தாக்கங்களையும் குறைக்கிறது.

முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு இந்தியா பணியாற்றி வருகிறது. இது நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் புயல்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு 90 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கடலோர பகுதிகளில் 100 சதவீதத்தையும் உள்ளடக்கும் வகையில் புயல் குறித்த முன்னெச்சரிக்கை அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் அனல் காற்று போன்ற இதர இயற்கை சீற்றங்களை தணிப்பதிலும் இந்தியா விரைவான முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இது இந்திய சமூகத்தில் மாபெரும் உறுதிப்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, தாக்கத்தை ஏற்படுத்தும் முன்கூட்டிய எச்சரிக்கை செய்வதை நோக்கிய மற்றும் மக்களால் மிகவும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையிலும், செயல்படும் வகையிலும் கூட்டு முயற்சிகளை இந்தியா எடுத்து வருகிறது. முன்கூட்டிய எச்சரிக்கை மீதான செயல்பாடு விரைவாக இருக்கும் வகையில் ஒருங்கிணைந்த வெப்-டிசிஆர்ஏ என்ற தகவல் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

வடக்கு இந்திய பெருங்கடல் பகுதி (உலகின் ஆறு மையங்களில் ஒன்று), வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பிராந்தியத்தில் உள்ள 13 நாடுகள் ஆகியவற்றில் புயல் பற்றிய எச்சரிக்கை பணிகளை செய்வதற்கும், கண்காணிப்பதற்கும், தகவல் தெரிவிப்பதற்கும் புதுதில்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தில் புயல் எச்சரிக்கை பிரிவு ஒன்று செயல்படுகிறது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதி நாடுகளுக்கு வானிலை ஆய்வு தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கான கூட்டணியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இந்த கூட்டணியில் பருவநிலை குறித்த முன்னறிவிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் அடிப்படை கட்டமைப்பு சேதங்களையும், அடிப்படை சேவைகளின் இடையூறுகளையும் குறைப்பதற்கு உதவுகின்றன. பேரிடரை தாங்கவல்ல அடிப்படை கட்டமைப்புக்கான (சிடிஆர்ஐ) கூட்டணியை உருவாக்கிய இந்தியா அதனை மேம்படுத்தி வருகிறது. அடிப்படை கட்டமைப்பில் புதிய கண்டுபிடிப்பையும், உறுதியையும் மேம்படுத்த, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களை ஈடுபடுத்துவதில் கூட்டு முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. தற்போது சிடிஆர்ஐ-யின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 31- ஆக அதிகரித்துள்ளது. இதன் வளர்ச்சி ஆப்பிரிக்க பிராந்தியத்திலும் கூடுதலாகி வருகிறது. அண்மையில் இதன் சாசனத்தை தெற்கு சூடானும், ஐரோப்பிய முதலீட்டு வங்கியும் அங்கீகரித்துள்ளன" என்று கூறினார்.

மேலும், "பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி குறைவாக இருந்தாலும், அனைத்திற்குமான முன்கூட்டிய நடவடிக்கைகள் போன்ற தீவிரமான செயல்பாடுகள், பாதிப்புகளை குறைக்கவும், முன்னேற்பாடுகளை உறுதிப்படுத்தவும், இயற்கை சீற்றங்களை விரைவாகவும், உரிய காலத்திலும் எதிர்கொள்ளவும் உதவுகின்றன" என்று அமைச்சர் பூபேந்திர யாதவ் தனது உரையில் குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x