Published : 04 Nov 2022 04:55 AM
Last Updated : 04 Nov 2022 04:55 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள ஆவணத்தான்கோட்டை மேற்கு அரசு நடுநிலைப் பள்ளிக்கு, சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
ஆவணத்தான்கோட்டை மேற்கு அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் 248 பேர் பயில்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் 7 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுடன் பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் 4 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மாணவர்கள் பள்ளி வந்து செல்ல வேன் வசதி உள்ளது. சிறுவர் பூங்கா, இறகுப் பந்து மைதானம், ஏசியுடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ், 10 கணினிகளைக் கொண்ட ஆய்வகம் உள்ளன. இவை தவிர செஸ், சிலம்பம், யோகா போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். எனவே, பள்ளியின் தர மேலாண்மை சிறப்பாக இருப்பதைப் பாராட்டி, 2020-ல் இந்தப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ(9001- 2015) தரச் சான்று வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்பட்டு, அதற்கு மாற்றாக மரம் மற்றும் இரும்பு இருக்கைகள், சில்வர் வாட்டர் பாட்டில், துணிப் பை, மர ஸ்கேல் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏராளமான மரங்களைக் கொண்ட பசுமை வளாகமும் உள்ளது. இதைப் பாராட்டி பள்ளிக்கு சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான ஐஎஸ்ஓ(14000- 2015) தரச் சான்று 2 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது.
இதன்மூலம் தமிழகத்தில் 2 ஐஎஸ்ஓ தரச் சான்றுகளைப் பெற்ற ஒரே அரசுப் பள்ளியாக ஆவணத்தான்கோட்டை அரசுப் பள்ளி விளங்குகிறது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி கூறியது: பள்ளியில் கற்றல் திறன்களுடன், விளையாட்டு மற்றும் கலை உள்ளிட்ட பிற திறன்களிலும் மாணவர்களுக்கு கூடுதல் அக்கறை செலுத்தப்படுகிறது. இதனால், மாவட்டத்தில் முன்னோடி பள்ளிகளில் ஒன்றாக இந்தப் பள்ளி விளங்குகிறது.
2 ஐஎஸ்ஓ தரச் சான்று கிடைத்திருப்பது, பள்ளியின் வளர்ச்சியை அங்கீகரிக்கும் வகையிலும், பள்ளிக்காக உழைப்போரை ஊக்கப்படுத்தும் வகையிலும் உள்ளது. தமிழகத்தில் 2 ஐஎஸ்ஓ தரச் சான்று பெற்ற ஒரே அரசுப் பள்ளியாக விளங்கும் இந்தப் பள்ளியின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தி வரும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT