Published : 17 Sep 2022 05:52 PM Last Updated : 17 Sep 2022 05:52 PM
முரணாக, முழுமையின்றி சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை: காரணங்களை அடுக்கும் பூவுலகின் நண்பர்கள்
சென்னை: சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை சில இடங்களில் முரணாகவும், பல தகவல்கள் முழுமை பெறாமலும் உள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. சென்னை கால நிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
அறிக்கை கொடுக்கப்பட்டுள்ள பல தகவல்கள் முழுமை பெறாமலும், சில இடங்களில் ஒன்றுக்கொன்று முரணாகவும், தரவுகள் சரிவர விளக்கப்படாமலும் உள்ளன.
இத்திட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள எதிர்கால ஆபத்துகள் குறித்த சில தகவல்கள் போதிய அறிவியல் ஆதாரங்களுடன் இல்லாமல் இருக்கிறது.
அனல் மின் துறையினால் 2% பசுமை இல்ல வாயு மட்டுமே வெளியேறும் என்பது எந்த வகையில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்கான விவரங்கள் இல்லை.
மக்களின் வீடுகள் 31% பசுமை இல்ல வாயுக்களுக்கு காரணமாக உள்ளதாக கூறுவது மக்களை குறைச்சொல்லி அனல்மின் நிறுவனத்தை காப்பாற்றும் தன்மையாகவே தெரிகிறது.
சென்னைக்கான விரிவான காலநிலை மாற்ற பாதிப்பு ஆய்வுகளையும் செயல் திட்டங்களையும் நம் அரசுதான் முன்னெடுக்க வேண்டும்.
இப்படியான தனித்துவ ஆய்வுகள் அறிக்கையில் இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது
காலநிலை மாற்ற தணிப்பு நடவடிக்கைகளுக்கு புதிய திட்டங்களை வகுக்காமல் ஏற்கனவே உள்ள திட்டங்கள் நடவடிக்கைகளாக கணக்குக் காட்டப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தினால் தமிழகத்தில் ஏற்படப் போகும் பெரும் பிரச்சினைகளான வேலையின்மை, இடம்பெயர்தல் உள்ளிட்ட சமூக பொருளாதார பிரச்சினைகளை பற்றி போதுமான அளவு பேசப்படவில்லை.
உணவு பாதுகாப்பு, தற்சார்பு நகரங்கள், மக்கள்தொகை, திட்டமிடாத நகர வளர்ச்சி ஆகிய பிரச்சினைகளை குறித்து பேசப்படவில்லை.
பெண்கள், குழந்தைகளுக்கான பிரத்யேக செயல்திட்டங்கள் எதுவும் இல்லை.
வெப்ப அலைகள் பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் செயல்திட்டங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதற்கான செயல்திட்டம் இல்லை.
இந்த அறிக்கையானது காலநிலை மாற்றத்தின் அபாயங்கள் குறித்த பல்வேறு தரவுகளைக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
விளிம்பு நிலை மக்களும்,சூழலியல் அமைப்புகளும் கூறிவந்த விஷயங்கள் அனைத்தையும் அரசே இந்த அறிக்கையில் தெரிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவது விளிம்பு நிலை மக்கள்தான்.
ஆனால் இந்த வரைவு செயல்திட்ட அறிக்கையானது ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வறிக்கை தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டு அனைத்துத் தரப்பு மக்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கும் வகையில் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்.
WRITE A COMMENT