Published : 07 Sep 2022 04:35 PM
Last Updated : 07 Sep 2022 04:35 PM
சென்னை: சென்னை புழுதி மாசுவைக் கட்டுப்படுத்த பசுமைத் தாயகம் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பசுமைத் தாயகம் வெளியிட்ட தகவல்: ''சென்னை காற்று மாசுவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் வேண்டும்' என செப்டம்பர் 7: நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாளை (International Day of Clean Air for blue skies) முன்னிட்டு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை விடுத்தார் (06.09.2022). அதைத் தொடர்ந்து பசுமைத் தாயகம் அமைப்பினர் இன்று (07.09.2022).சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
கோரிக்கைகளை கவனமாகக் கேட்டுக்கொண்ட ஆணையர், சென்னை மாநகரின் புழுதி மாசுபாட்டைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பசுமைத் தாயகம் அமைப்பின் மாநிலச் செயலாளர் இர.அருள், இணைச் செயலாளர்கள் ச.க.சங்கர், வி. இராதாகிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர் விநோபாபூபதி உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
மாநகராட்சி ஆணையரிடம் அளிக்கப்பட்ட மனுவில், ''இந்திய அரசின் தேசியத் தூய காற்றுத் திட்டம் (National Clean Air Programme - NCAP) 2019ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டின் காற்று மாசுபாட்டு அளவுக்குக் கீழாக, பிஎம் 10 மற்றும் பிஎம் 2.5 துகள்மங்கள் அடர்த்தியில் 20% முதல் 30% குறைப்பை 2024ஆம் ஆண்டில் எட்ட வேண்டும் என்பது இத்திட்டத்தின் இலக்காகும். 15ஆவது நிதிக்குழுப் பரிந்துரையின் கீழ் இத்திட்டத்தில் சென்னை மாநகரம் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும், சென்னை மாநகரில் காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்பதை தங்களது கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.
சென்னையில் புழுதி மாசு: நகர்ப்புறக் காற்று மாசுபாட்டிற்குக் கட்டிட இடிபாடுகள் ஒரு காரணமாக உள்ளது. பழைய கட்டடங்களை இடித்தல், புதிய கட்டுமானங்கள் ஆகியவற்றால் உருவாகும் மண் புழுதி சாலையோரங்களிலும் வீடுகளுக்கு முன்பாகவும் கொட்டப்படுகிறது. இவை வாகனப் போக்குவரத்தின் காரணமாக மேலெழும்பிக் காற்று மாசுபாட்டுக்குக் காரணமாகின்றன.
சென்னை மாநகரின் மழைநீர் வடிகால் பணிகள் (stormwater drain projects), மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் உள்ளிட்ட எதிலும் சாலைப் புழுதியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முறையாக செயலாக்கப்படவில்லை. இந்திய அரசின் கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் கழிவு மேலாண்மை விதிகள் 2016 (Construction and Demolition Waste Management Rules 2016) எனும் சட்டவிதிகள் சென்னை மாநகரில் முறையாக பின்பற்றப்படவில்லை. அதனால் சென்னையில் பெரும் புழுதி மாசு (dust pollution) ஏற்படுகிறது என்பதை தங்களது கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.
எடுத்துக்காட்டாக, சென்னை கலங்கரை விளக்கம் & பூவிருந்தவல்லி இடையிலான Corridor 4 மெட்ரோ ரயில் திட்டத்தில் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக மட்டும் ரூ.22.79 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கான தன்னிச்சையான கண்காணிப்பு நிறுவனத்தை (External Monitoring Agency) இன்னமும் கூட தேர்வு செய்யவில்லை. அதாவது, சுற்றுச்சூழல் விதிகள் செயலாக்கப்படுவதை கண்காணிப்பதற்கான கட்டமைப்பு இல்லாமலேயே மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடக்கின்றன.
மீறப்படும் சட்டவிதிகள்: இந்திய அரசின் கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் கழிவு மேலாண்மை விதிகள் 2016 (Construction and Demolition Waste Management Rules 2016) படி திறந்தவெளியில் குவிக்கப்படும் கட்டிடக் கழிவுகள், இடிபாடுகள், மண் உள்ளிட்டவை தார்ப்பாய் போன்றவற்றைக் கொண்டு மூடப்பட வேண்டும். ஆனால், சென்னை மாநகரின் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் உள்ளிட்ட எதிலும் இந்த விதி முறையாகச் செயலாக்கப்படவில்லை.
மேற்படி சட்டவிதிகளின் படி, கட்டுமானப் பணிகள் நடைபெறும் சாலைகள் தரமாகவும் தூய்மையாகவும் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால், சென்னை மாநகரின் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் உள்ளிட்ட எதிலும் இந்த விதி முறையாகச் செயலாக்கப்படவில்லை.
மேற்படி சட்டவிதிகளின் படி, கட்டுமானப் பணிகள் நடைபெறும் - சாலைகளில் புழுதி பறப்பதை தடுக்கும் வகையில் தண்ணீர் தெளிக்கப்பட வேண்டும். ஆனால், சென்னை மாநகரின் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் உள்ளிட்ட எதிலும் இந்த விதி முறையாகச் செயலாக்கப்படவில்லை.
மேற்படி சட்டவிதிகளின் படி, கட்டுமானப் பணிகள் நடைபெறும் சாலைகளில் புழுதி படிவதை தடுக்கும் வகையில் புழுதி/தூசு அகற்றும் பணிகள் (mechanical sweeping/ Vacuum sweeping) நடைபெற வேண்டும். ஆனால், சென்னை மாநகரின் மழைநீர் வடிகால் பணிகள் & மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் உள்ளிட்ட எதிலும் இந்த விதி முறையாகச் செயலாக்கப்படவில்லை.
மேற்படி சட்டவிதிகளின் படி, கட்டுமானக் கழிவுகளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் தார்ப்பாய் போன்றவற்றைக் கொண்டு முடப்பட வேண்டும். ஆனால், சென்னை மாநகரின் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் உள்ளிட்ட எதிலும் இந்த விதி முறையாகச் செயலாக்கப்படவில்லை.
இந்திய அரசின் கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் கழிவு மேலாண்மை விதிகள் 2016 (Construction and Demolition Waste Management Rules 2016) சட்டவிதிகளின் கீழான, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களின் படி (Guidelines on DUST mitigation measures in handling Construction material and C&D wastes 2017) கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்களில் புழுதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் (All contractors associated in construction works and C&D waste handling need to display a board at the site indicating dust control measures being adopted) என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், சென்னை மாநகரின் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் உள்ளிட்ட எதிலும் இந்த விதி முறையாகச் செயலாக்கப்படவில்லை.
இவ்வாறாக, இந்திய அரசின் கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் கழிவு மேலாண்மை விதிகள் 2016 (Construction and Demolition Waste Management Rules 2016) சட்டவிதிகள், சென்னை மாநகரில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் உள்ளிட்ட எதிலும் பின்பற்றப்படவில்லை.
கோரிக்கை: சென்னை மாநகரில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளால் எழும்பும் புழுதி மக்களின் உடல்நலத்தை பாதிப்பதாக இருப்பதாலும், அரசின் சட்டவிதிகளை மீறும் செயலாக இருப்பதாலும், சென்னை மாநகரின் அனைத்து வகை புழுதி மாசுபாட்டையும் (dust pollution) முற்றிலுமாக தடுத்து நிறுத்துமாறு தங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இந்திய அரசின் கட்டுமானம் மற்றும் கட்டடக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 (Construction & Demolition Waste Management Rules 2016) சென்னைப் பெருநகரில் முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT