Published : 30 Aug 2022 09:43 PM
Last Updated : 30 Aug 2022 09:43 PM
புதுடெல்லி: இந்தியாவில் உள்ள நிலக்கரி நிறுவனங்களில் 50 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு வைத்து நிலக்கரி வயல்கள் அதனை சுற்றியுள்ள பகுதிகளை பசுமைத் திட்டத்தின்கீழ் கொண்டு வர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியாவில் உள்ள நிலக்கரி நிறுவனங்கள் 2022-23-ம் ஆண்டில், 50 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு நிலக்கரி வயல்கள், அதனை சுற்றியுள்ள 2,400 ஹெக்டேர் பரப்பளவை பசுமைத் திட்டத்தின்கீழ் கொண்டு வருவதற்கான இலக்கை நிலக்கரி அமைச்சகம் நிர்ணயித்துள்ளது. இதற்காக கண்டறியப்பட்ட பகுதிகளில், நிலக்கரி நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்ட மற்றும் வெளியே குத்தகைக்கு விடப்பட்ட பகுதிகளும் அடங்கும்.
தற்போதைய நிலவரப்படி நிலக்கரிச் சுரங்கப் பகுதிகளை பசுமையாக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மரக்கன்றுகள் நடுதல், புல்வெளிகள் உருவாக்குதல், மூங்கில் தோட்டம் அமைத்தல், உயர் தொழில்நுட்ப சாகுபடி பணிகள் போன்றவற்றின் மூலம் ஏற்கனவே ஆகஸ்ட் 15, 2022-க்குள், 1,000 ஹெக்டேர் பரப்பளவு நிலங்கள் பசுமையாக்கப்பட்டுள்ளன. இந்த சாதனைகளுடன், நிலக்கரி நிறுவனங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பசுமையாக்கும் இலக்கை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக மரங்கள் நடுதல் மற்றும் காடுகள் வளர்ப்பு போன்ற நிலக்கரித் துறையின் இந்த முன்னெடுப்புகளால், வரும் 2030ஆம் ஆண்டுக்குள், 2.5 முதல் 3 பில்லியன் டன்கள் அளவுக்கு கார்பன் வாயுவை குறைப்பதற்கு உறுதி பூண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT