Published : 24 Aug 2022 06:32 PM
Last Updated : 24 Aug 2022 06:32 PM

தமிழகத்தில் 15,000 டன் திடக்கழிவுகளை தரமான உரமாக தயாரிக்கலாம்: வேளாண் விஞ்ஞானிகள் யோசனை

மதுரை: “தமிழகத்தில் 15 ஆயிரம் டன் திடக்கழிவுகள் உருவாகிறது. இந்த கழிவுகளை அறிவியல் பூர்வமாக அணுகும்போது தரமான இயற்கை உரம் தயாரிக்கலாம்” என்று இன்று மதுரை வேளாண்மை கல்லூரியில் நடந்த இயற்கை உரம் உற்பத்தி மற்றும் மண் வள மேம்பாடு பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்ட வேளாண் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்தனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், மதுரை வேளாண் கல்லூரி மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து ஊட்டமேற்றிய திடக்கழிவு இயற்கை உரம் உற்பத்தி பற்றிய மண் வள மேம்பாடு பயிற்சி கருத்தரங்கு இன்று நடந்தது. 18 மாவட்டங்களை சேர்ந்த பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், வேளாண் ஆராயச்சி நிலையங்களின் பிரதிநதிகள் மற்றும் வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள் இதில் கலந்து கொண்டனர். கோவை வேளாண் பல்கலைக்கழக இயற்கை வள மேலாண்மை இயக்குனரகத்தின் இயக்குநர் பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர், இயற்கை உரம், பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார். அவர் பேசுகையில், ''வீட்டு சமையலறையில் உற்பத்தியாகும் காய்கறி கழிவுகள் முதல் தொழிற்சாலை மற்றும் பிற இடங்களில் இருந்து வரக்கூடிய திடக்கழிவுகளை சரியான முறையில் கையாண்டு மக்கக்கூடிய கழிவுகளை பயன்தரக்கூடிய இயற்கை உரமாக மாற்ற தொழில்நுட்பங்கள் வந்துள்ளன'' என்றார்.

தாம்பரம் மாநகராட்சி செயற்பொறியாளர் முருகேசன் பேசுகையில், ''மாநகராட்சிக் கழிவுகளை கையாள நுண் உரமாக்கல் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மதுரை மாநகராட்சியில் ஒரு நாளைக்கு 548 மெட்ரிக் டன் கழிவுகள் உற்பத்தியாகிறது. இதில், 64 சதவீதம் வீட்டு உபயோக கழிவுகளாக அமைந்துள்ளது. நுண்ணுயிர் கலவைகளை சரியான விகிதத்தில் பயன்படுத்தி குப்பைகளை மக்க வைக்கும்போது தரமான இயற்கை உரம் கிடைக்கும். இந்த உரங்களை வீட்டு தோட்டங்களுக்கும், பூந்தொட்டிகளுக்கும் இடுவதின் மூலம் தரமா காய்கறிகளை பெறலாம். குறைந்த விலையில் விவசாயிகளுக்கு அளிப்பதின் மூலம் மண் வளமும் மேம்படுகிறது,'' என்றார்.

வேளாண் கல்லூரி முதல்வர் மகேந்திரன் பேசுகையில், ''மாறிவரக்கூடிய பொதுமக்களின் நுகரும் வாழ்வியல் முறை கழிவுகள் உற்பத்தியாகும் அளவினை தீர்மானிக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஆண்டிற்கு 15 ஆயிரம் டன் திடக்கழிவுகள் ஒரு நாள் உற்பத்தியாகிறது. இந்த கழிவுகளை அறிவியல் பூர்வமாக அணுகும்போது தரமான இயற்கை உரம் தயாரிக்கலாம். மதுரை மாநகராட்சியில் உற்பத்தியாகும் 548 மெட்ரிக் டன் கழிவுகளில் 60-65 சதவீதம் மக்கக்கூடிய கழிவுகளாக உள்ளன. இந்த குப்பைகளை வீட்டளவில் இயற்கை உரமாக மாற்றக்கூடிய எளிய தொழில் நுட்பங்களை பற்றி செயல்முறை விளக்கங்கள் இந்த பயிற்சியில் வழங்கப்பட்டுள்ளன,'' என்றார்.

சென்னை மாநகராட்சி நிதியுதவியால் தொடங்கப்பட்ட திடக்கிழவு மேலாண்மைத் திட்டத்தின் முதன்மை விஞ்ஞானி பாக்கியத்து சாலிகா பேசுகையில், ''குறைந்த அளவில் அதிகமான கழிவுகளை மக்கக்கூடிய நுண்ணுயிர் கலவையினை கண்டுபிடித்து தரமான இயற்கை உரத்தை உற்பத்தி செய்து அந்த உரங்களுக்கு தரகுறியீடு(லோகோ) வடிவமைத்து கொடுக்கிறோம்,'' என்றார்.

முன்னாள் வேளாண் கல்லூரி முதல்வர் பால்பாண்டி, உழவியல் துறை பேராசிரியர் மற்றும் துறைத் தலவர் துரை சிங், மண் மற்றும் சூழலியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் சரவண பாண்டியன் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x