Published : 17 Aug 2022 09:10 AM
Last Updated : 17 Aug 2022 09:10 AM
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தைத் தவிர்க்கவும் ஜப்பான் சுற்றுச்சூழல் ஆர்வலர் அறிமுகப்படுத்திய ‘மியாவாக்கி காடுகள்’ எனப்படும் குறுங்காடுகளை உருவாக்கி திண்டுக்கல் மாவட்டம் முன்மாதிரியாக திகழ்கிறது.
காலநிலை மாற்றத்தால் உலகில் அதிக பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இதனால் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும், அதிக மரங்களை வளர்க்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் வனப்பரப்பு தற்போது 22.71 சதவீதமாக உள்ளது. இதை 33 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சுற்றுச்சூழல் துறை சார்பில் 10 ஆயிரம் குறுங்காடுகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித் துள்ளார்.
ஆனால், இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே திண்டுக்கல் நகரில் திண்டிமாவனம் அமைப்பு மூலம் 2 குறுங்காடுகள் உருவாக்கப் பட்டுள்ளன. திண்டுக்கல் எம்.வி.எம். மகளிர் கல்லூரி வளாகத்தில் ஒரு குறுங்காடும், திண்டுக்கல் புறவழிச் சாலை அருகே பொன்மாந்துரை பகுதியில் ஒரு குறுங்காடும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் குறுங்காடுகள் வளர்ப்பில் திண்டுக்கல் தமிழகத்துக்கே முன்மாதிரியாக திகழ்கிறது.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் பேராசிரியர் ராஜாராம் கூறியதாவது: தற்போது மழைக் காலம் என்பதால் மரக்கன்றுகளை அடர்த்தியாக நடவு செய்தால் பராமரிப்பு இல்லாமலேயே விரைவாக வளர்ச்சி அடையும். இதில் நெட்டையாக வளரும் மரங்கள், குட்டையாக வளரும் மரங்கள், பலன் தரும் மரங்கள் என கலந்து நட வேண்டும்.
திண்டுக்கல் புறநகர்ப் பகுதியில் பொன்மாந்துரை கிராமம் அருகே மாநகராட்சி இடத்தில் திண்டிமாவனம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் குறுங்காடு உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
காலநிலைக்கு எதிரான போராட்டத்துக்கு இந்த குறுங்காடுகள் உதவுகின்றன. நகர்ப்புற மாசை கட்டுப்படுத்தி ஆக்சிஜன்களை உற்பத்தி செய்யும் இடமாகவும் இந்த குறுங்காடுகள் திகழ்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT