Published : 15 Aug 2022 08:26 PM
Last Updated : 15 Aug 2022 08:26 PM

இந்தியாவில் ராம்சர் தலங்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வு: தமிழகத்தில் 14 தலங்கள்

சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தில் வலம் வரும் வரித்தலை வாத்துகள்.

ராமேசுவரம்: 75-வது இந்திய சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடப்படும் இந்த தருணத்தில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற தலங்களின் எண்ணிக்கையும் 75 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக தமிழகத்தில் 14 தலங்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 தலங்களும் இதில் அடக்கம்.

1971-ம் ஆண்டில் ஈரான் நாட்டில் உள்ள ராம்சர் நகரில் சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை கையெழுத்தானது. இந்த உடன்படிக்கையின்படி, உலகெங்கும் உள்ள சதுப்பு நிலங்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து ராம்சர் தலங்கள் என அடையாளப்படுத்தி, சர்வதேச முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்தியாவில் 49 சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட்ட ராம்சர் தலங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் கோடியக்கரையும் இதில் அடக்கம்.

இந்நிலையில், 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய அரசு சார்பாக இந்தியாவில் உள்ள 26 சதுப்பு நிலப்பகுதிகளுக்கு ராம்சர் அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

கடந்த ஜூலை 26 அன்று முதற்கட்டமாக இந்தியாவின் 5 சதுப்பு நிலங்கள் "ராம்சர்" தலங்களாக அறிவிக்கப்பட்டன. இதில் தமிழகத்தின் கரிக்கிளி பறவைகள் சரணாலயம், பள்ளிக்கரனை சதுப்பு நிலக்காடு, பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு, மிசோரமில் பாலா சதுப்பு நிலம், மத்தியப் பிரதேசத்தில் சாக்கிய சாகர் சதுப்பு நிலம் ஆகியவை அடங்கும்.

இரண்டாம் கட்டமாக கடந்த வாரம் இந்தியாவில் மேலும் 10 சதுப்பு நிலங்கள் ராம்சர் தலங்களாக அறிவிக்கப்பட்டன. இதில் தமிழகத்தில் மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம், கூந்தன்குளம், வேம்பனூர் சதுப்பு நிலம், வெள்ளோடை, வேடந்தாங்கல், உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம் ஆகிய 6 இடங்களும், ஒடிசாவில் உள்ள சட்கோசியா பள்ளத்தாக்கு, கோவாவில் உள்ள நந்தா ஏரி, கர்நாடகாவின் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிர்பூர் சதுப்பு நிலம் ஆகும்.

இந்நிலையில், மூன்றாவது கட்டமாக இந்தியாவில் மேலும் 11 சதுப்பு நிலங்கள் ராம்சர் அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது. இதில் தமிழகத்தில் 260.47 ஹெக்டர் பரப்பளவு கொண்ட சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், 112.64 ஹெக்டர் பரப்பளவு கொண்ட காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம், 94.3 ஹெக்டர் பரப்பளவு கொண்ட சுசீந்திரம் தேரூர் சதுப்பு நில வளாகம், 94.23 ஹெக்டர் பரப்பளவு கொண்ட வடுவூர் பறவைகள் சரணாலயம் என 4 இடங்களும், ஒடிசாவில் உள்ள தம்பாரா ஏரி, ஹிராகுட் நீர்த்தேக்கம், அன்சுபா ஏரி, மத்தியப் பிரதேசத்தில் யஷ்வந்த் சாகர் ஏரி, மகாராஷ்டிராவில் தானே க்ரீக் பறவைகள் சரணாலயம், ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஹைகம் சதுப்பு நிலம், மற்றும் ஷால்பக் சதுப்பு நிலம்.

இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற தலங்களின் எண்ணிக்கை 3 ஆகவும், தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற ஸ்தலங்களின் எண்ணிக்கை 14 ஆகவும், இந்தியாவில் அங்கீகாரம் பெற்ற ஸ்தலங்களின் எண்ணிக்கை 75 ஆகவும் உயர்ந்துள்ளது.

75-வது இந்திய சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடப்படும் இந்த தருணத்தில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற ஸ்தலங்களின் எண்ணிக்கையும் 75 ஆக உயர்ந்துள்ளது சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. சரி, இந்த அங்கீகாரத்தைக் கொண்டாடக்கூடிய அளவுக்கு சதுப்புநிலங்கள் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன? - வாசிக்க > சதுப்புநிலங்கள் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை? - ஒரு பார்வை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x