Published : 29 Jul 2022 06:05 AM
Last Updated : 29 Jul 2022 06:05 AM

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது - கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை கூறும் வன உயிரின ஆர்வலர்

மகாராஷ்டிரா தடோபா சரணாலயத்தில் காணப்படும் புலி.

மதுரை: உலக புலிகள் தினம் ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதி (இன்று) கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 200 ஆண்டுகளில் உலகில் புலிகள் 9 வகையான இனங்களாக இருந்துள்ளன.

இன்று அதில் 3 இனங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. மற்ற 3 இனங்கள் அழிவுக்கு மிக நெருக்கமாக உள்ளன. இந்த இனங்களில் இருக்கிற ஒருசில நூறு புலிகள் இறந்துவிட்டால் அந்த 3 இனங்களின் புலிகள் இல்லவே இல்லை என்றாகிவிடும். புலிகளின் ஆயுட்காலம் காடுகளில் 9 முதல் 14 ஆண்டுகளாகும்.

நமது நாட்டில் உள்ள புலிகளை ‘வங்காளப் புலி’ அல்லது `ராயல் பெங்கால் புலி’ என அழைக்கிறோம். இந்த வங்காள புலியின் எண்ணிக்கை உலகளவில் கிட்டதட்ட 4,500-ஐ நெருங்கி இருக்கும் என்கிறார்கள். இதில், 3,000 புலிகள் நமது நாட்டில் உள்ளன. 2018 கணக்கெடுப்பின்படி 2,967 புலிகள் இந்தியக் காடுகளில் உள்ளதாக கூறப்படுகிறது. கணக்கெடுப்பில் சிக்காதவற்றையும் சேர்த்தால் அவற்றின் எண்ணிக்கை 3,346 ஆக இருக்கலாம்.

புலிகள் கணக்கெடுப்பு எப்படி நடக்கிறது, அதன் நோக்கம் என்ன என்பது குறித்து, அதில் கலந்துகொண்ட மதுரையைச் சேர்ந்த வன உயிரின ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன் கூறியதாவது:

4 ஆண்டுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடக்கும். 5-வது ஆண்டில் மொத்தமாக கணக்கெடுப்பின் முடிவுகளை அறிவிப்பார்கள். இந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

இது, நம்முடைய காடுகள் கொஞ்சம் மீட்கப்படுகின்றன. காடுகளில் உள்ள உயிர்ச் சூழலும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது என்று அர்த்தமாகும். புலிகள் கணக்கெடுப்பு காடுகளில் ஒரு வாரத்துக்கு நடக்கும். முதல் 3 நாட்கள் வரையறுக்கப்படாத எல்லைப் பகுதிகளில் வன அலுவலர்கள், தன்னார்வலர்கள் பயணிப்பார்கள். இந்தப் பயணத்தில் புலிகள் நேரடிப் பார்வையில் தென்படுவது அபூர்வமாகும். புலிகளின் பாதச்சுவடுகள், எச்சங்கள், அதன் வாழ்விட எல்லைகளைக் குறிக்கும் குறியீடுகளைக் கொண்டு முதற்கட்டமாக புலிகள் கணக்கெடுக்கப்படுகிறது.

சில இடங்களில் சிறுநீர் கழித்து வைக்கும். அதன் மணத்தை வைத்துக்கூட புலிகளின் இருப்பைத் தெரிந்து கொள்ளலாம். இதற்குப் பிறகு காடுகளில் மற்ற 2-ம் கட்ட கொல்லுண்ணிகளான செந்நாய், நரி போன்றவற்றையும் கணக்கெடுப்போம். அதற்கு அடுத்த 3 நாட்களில் தாவர உண்ணிகளை பற்றிய கணக்கெடுப்பு போகும். அதன் எச்சங்கள், வாழ்விடங்கள் கணக்கெடுக்கப்படும்.

தாவர உண்ணிகளின் ஒரு கூட்டம், மதிப்பீடு செய்யப்படும். இவ்வளவு தாவர உண்ணிகள் இருந்தால் இது ஒரு புலிக்கான இரையாகும் என்று கணக்கிடப்படுகிறது. தாவரங்களை அதிகம் உண்ணும் விலங்குகளைக் கொண்டும் புலிகள் கணக்கெடுக்கப்படுகின்றன. புலிகள் கணக்கெடுப்பு ஒரு நாட்டின் உயிர் தன்மையை கணக்கெடுக்கக் கூடிய சிறப்பான செயல். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x