Published : 27 Jul 2022 03:03 AM
Last Updated : 27 Jul 2022 03:03 AM
புதுடெல்லி: கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 329 புலிகள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் புலிகள் இழப்புக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மக்களவையில் இந்த தகவலை வெளியிட்டார். அவர் வெளியிட்ட தகவல்படி, "2019-ல் 96 புலிகள், 2020-ல் 106 புலிகள், 2021-ல் 127 புலிகள் என மொத்தம் 329 புலிகள் உயிரிழக்க நேரிட்டுள்ளது. இதில் 68 புலிகள் இயற்கையான காரணங்களால் உயிரிழந்துள்ளன.
அதேநேரம் 5 இயற்கைக்கு மாறான மரணங்களும் நிகழ்ந்துள்ளன. வேட்டையாடுதல் காரணமாக 29 புலிகளும், சிறை பிடிக்கப்பட்டதன் காரணமாக 30 புலிகளும் உயிரிழக்க நேர்ந்துள்ளன. சரியான கண்காணிப்பு இல்லாதன் காரணமாக 197 புலிகள் இறந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.
இதனிடையே, புலி தாக்கியதில் உயிரிழந்த மனிதர்கள் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 61 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 25 பேரும் புலிகளின் தாக்குதலால் உயிரை இழந்துள்ளனர்.
இந்த தரவுகளில் சொல்லப்பட்டுள்ள ஒரு நல்ல விஷயம் வேட்டையாடுதல் குறைந்துள்ளது என்பதுதான். 2017லிருந்து 2021 வரையிலான காலகட்டத்தில் வேட்டையாடுதல் வழக்கு எண்ணிக்கை நான்கு மடங்காகக் குறைந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.
மத்திய இணையமைச்சர் யானைகள் இறப்பு குறித்த தரவுகளையும் வெளியிட்டுள்ளார். அதன்படி, 307 யானைகள் இந்தக் காலகட்டத்தில் இறக்க நேரிட்டுள்ளன. யானைகள் இறப்புக்கு வேட்டையாடுதல், மின்கசிவு, விஷம் மற்றும் ரயில் விபத்துகள் என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. என்றாலும், மின்சாரம் தாக்கியதிலேயே அதிக யானைகள் உயிரிழந்துள்ளன என்பது அறியமுடிகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 222 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT