Published : 23 Jul 2022 11:02 PM
Last Updated : 23 Jul 2022 11:02 PM

கேரளா | திமிங்கலத்தின் வாந்தியை அதிகாரிகளிடம் ஒப்படைத்த மீனவர்கள்; அதன் மதிப்பு ரூ.28 கோடி

கேரளாவை சேர்ந்த மீனவர்கள் திமிங்கலத்தின் வாந்தியை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் மதிப்பு ரூ.28 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் - விழிஞ்சம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சுமார் 28.5 கிலோகிராம் எடை கொண்ட திமிங்கலத்தின் வாந்தியை கடலில் கண்டெடுத்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.28 கோடி என சொல்லப்படுகிறது. அதனை கேரள கடலோர பாதுகாப்பு காவல்துறை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைத்துள்ளனர். பின்னதாக காவலர்கள் அதனை கேரள வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மீனவர்கள் கடலில் வலைக்கு சென்ற போது திமிங்கலத்தின் வாந்தியை கண்டெடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் வெள்ளிக்கிழமை மாலை கரைக்கு திரும்பியதும் காவலர்களிடம் அது குறித்து தெரிவித்ததோடு அதனை ஒப்படைத்துள்ளனர். மீனவர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

திமிங்கல வாந்தி? இதனை அம்பர்கிரிஸ் என சொல்வார்கள். இது இயற்கையின் விந்தையான நிகழ்வுகளில் ஒன்று என சொல்லப்படுகிறது. இதனை ஸ்பேர்ம் திமிங்கலங்கள் உற்பத்தி செய்கின்றன.

இந்த வகை திமிங்கலங்கள் கணவாய் மீன் (Squid) மற்றும் Cuttlefish வகைகளை தனது இரையாக சாப்பிடும். பெரும்பாலான நேரங்களில் அது ஜீரணம் ஆவதற்கு முன்னர் தனது இரையில் ஜீரணிக்க முடியாத சில பாகங்களை (ஓடு போன்றவை) வாந்தியாக வாய் வழியாக திடப்பொருளாக இந்த திமிங்கலங்கள் கக்கி விடுமாம். அது வெள்ளை, கருப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் இருக்கும் என தெரிகிறது. இது மெழுகு போல திடமாக இருக்குமாம்.

வாசனை திரவியம் தயாரிக்க, மருந்து மற்றும் மசாலாவாகவும் மேற்கத்திய நாடுகளில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறதாம். இதனை திமிங்கலங்கள் எப்படி வெளியேற்றுகிறது என்பது குறித்த விவாதமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது கடல் நீரின் மீது மிதக்குமாம். அதனடிப்படையில் அம்பர்கிரிஸ் ரசாயன மாற்றத்தில் கடல் நீருக்கும் பங்கு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மிகப்பெரிய பல் கொண்ட வேட்டையாடும் வகையை சேர்ந்ததாம் ஸ்பேர்ம் திமிங்கலம்.

சர்வதேச சந்தையில் இதற்குள்ள மதிப்பு மிகவும் அதிகமாம். இதன் ஒரு கிலோ இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் இந்த வகை திமிங்கலம் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக உள்ளது. அதனால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இது பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் அம்பர்கிரிஸ் விற்பனை சட்டப்படி குற்றமாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x