Published : 13 Jul 2022 09:05 AM
Last Updated : 13 Jul 2022 09:05 AM
செயற்கை (பிளாஸ்டிக்) மலர்கள் பயன்பாட்டால், தமிழக அளவில் கொய்மலர்கள், உதிரி மலர்கள் சாகுபடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1,500 கோடி இழப்பு ஏற்படுகிறது என தேசிய தோட்டக்கலைத்துறை வாரிய இயக்குநர் பால சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, பேரிகை, சூளகிரி, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக 475 ஹெக்டேர் பரப்பளவில் பசுமைக்குடில் அமைத்து விவசாயிகள் ரோஜா மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இதேபோல, ரோஜா, ஜெர்புரா, கார்னேசன், கிரசாந்திமம் போன்ற கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில் சிங்கப்பூர், மலேசியா,துபாய் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ரோஜா, கிரசாந்திமம் மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், செயற்கை (பிளாஸ்டிக்) மலர்களின் பயன்பாடு காரணமாக விவசாயிகள் தொடர் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
செயற்கை மலருக்கு தடை
இது தொடர்பாக தேசிய தோட்டக் கலைத்துறை வாரிய இயக்குநர் பால சிவபிரசாத் கூறியதாவது:
செயற்கை மலர்களால் நாடு முழுவதும் விவசாயிகள் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக அளவில் கொய்மலர்கள், உதிரி மலர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வரையும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.400 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.
மத்திய, மாநில அரசுகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்து உள்ளது.
அந்த பட்டியலில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் அலங்காரத்துக்காக பிளாஸ்டிக், தெர்மாகோல் உள்ளிட்டவைகளை பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறினால் வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து திருமண மண்டப உரிமையாளர்கள், அலங்காரம் செய்பவர்கள், மணமக்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கவும், சிறை தண்டனை பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
1 லட்சம் மலர்களை பொதுமக்களுக்குஇலவசமாக வழங்கி விழிப்புணர்வு
செயற்கை (பிளாஸ்டிக்) மலர்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும், மலர் விவசாயிகளை காக்க வலியுறுத்தியும், நேற்று முன்தினம் ஓசூரில் மலர் விவசாயிகள், வியாபாரிகள், அகில இந்திய மலர் உற்பத்தியாளர்கள் சபை, தனியார் பயோடெக் நிறுவனங்களுடன் இணைந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 1 லட்சம் மலர்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT