Published : 08 Jul 2022 09:25 PM
Last Updated : 08 Jul 2022 09:25 PM

பிரேசில் | படம் எடுத்தவரை தண்ணீரில் இருந்து சீறி வந்து கடித்த அனகோண்டா

கோயஸ்: வீடியோ படம் எடுத்த நபரை தண்ணீரில் இருந்து சீறி எழுந்து கடித்துள்ளது அனகோண்டா பாம்பு ஒன்று. இருந்தும் அந்தப் பாம்பின் விஷம் அவரது உடலில் ஊடுருவாத காரணத்தால் அவர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். இந்தச் சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.

கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான அனகோண்டா திரைப்படம் உலகம் முழுவதும் 13.68 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டி இருந்தது. அதன்பிறகு 2004, 2008, 2009 மற்றும் 2015-களில் அனகோண்டா திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்துள்ளன. அதன்மூலம் உலக மக்கள் பலருக்கும் அனகோண்டா மீது கவனம் அதிகரித்தது.

இந்நிலையில், தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் சுற்றுலா பயணிகளுடன் அங்குள்ள அரகுவாயா ஆற்றில் படகில் சென்ற வழிகாட்டியான ஜாவோ செவெரினோ என்பவரை அனகோண்டா பாம்பு கடித்துள்ளது. அவர் பயணிகளுடன் பேசிக்கொண்டே தனது செல்போன் கேமராவை ஆற்றில் இருந்த மரக்கட்டை ஒன்றின் மீது ஃபோக்கஸ் செய்துள்ளார். அதில் அனகோண்டா பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டு இருப்பதை அவர் ரெக்கார்ட் செய்துள்ளார். அப்போது அந்தப் பாம்பு திடீரென அவரைக் கடிக்க தண்ணீரில் இருந்து சீறி பாய்ந்துள்ளது. கடித்த பின்னர் மீண்டும் நீருக்குள் செல்கிறது. தனது போனில் பதிவானவற்றை பகிர்ந்துள்ளார் அவர்.

இந்தச் சம்பவம் கடந்த ஜூன் 30-ஆம் தேதி அன்று நடைபெற்றுள்ளது. அனகோண்டா சீறி எழுந்ததை பார்த்து படகில் இருந்தவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். பாம்பு தாக்க முயல்வதை கண்டு அவரும் கொஞ்சம் பதற்றம் அடைந்துள்ளார். இது அவரது சிரிப்பில் தெரிந்தது.

அவரை கடித்தது பச்சை நிற அனகோண்டா என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பாம்பு 30 அடி நீளம் வரை வளருமாம். 550 பவுண்ட் எடை கொண்டிருக்குமாம். தென் அமெரிக்காவின் பச்சை நிற அனகோண்டா தான் உலகின் மிகப்பெரிய பாம்பு வகை எனவும் சொல்லப்படுகிறது.

அமேசான் பரப்பின் மழைக்காடுகளில் வாழும் தன்மை கொண்டது அனகோண்டா. நிலத்தை காட்டிலும் நீரில் இதன் நகர்வுகள் வேகமாக இருக்குமாம். காட்டுப்பன்றி, மான், ஆமை போன்றவற்றை வேட்டையாடுமாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x