Published : 28 May 2022 06:52 PM
Last Updated : 28 May 2022 06:52 PM
காலநிலை மாற்றத்திற்கு முக்கியக் காரணியாக இருப்பது கிரீன் ஹவுஸ் கேஸ் என்று அழைக்கப்படும் பசுமை இல்ல வாயுக்கள் தான். இதில் முக்கிய காரணியாக உள்ள கார்பனின் உமிழ்வை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு அறிக்கையில் (ஐபிசிசி) கூறப்பட்டுள்ளது. முடிந்தவரையில் விரைவாக கார்பன் உமிழ்வை பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காலநிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, பல நாடுகள் 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ஜிய நிலைக்கு வரும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கார்பன் உமிழ்வில் முதல் மூன்று இடங்களில் உள்ள நாடுகளில் ஒன்றான “இந்தியா 2070-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய நிலை அடையும்” பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதன்படி மத்திய மாநில, அரசுகள் இது தொடர்பான திட்டங்களை செயல்படுத்த தொடங்கி உள்ளது. கார்பன் உமிழ்வை குறைப்பதின் ஒரு பகுதியாக ‘கார்பன் கிரெடிட்’ திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. இந்த 'கார்பன் கிரெடிட்' தொடர்பான முழுமையான தகவல் இங்கே...
'கார்பன் கிரெடிட்' என்றால் என்ன?
கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து அதிகளவு கார்பனை உறிஞ்சு திறன் இருந்தால் அதனடிப்படையில் 'கார்பன் கிரெடிட்' கணக்கிடப்படும். எடுத்துக்காட்டாக மரங்கள் அதிக அளவு கார்பனை உறிஞ்சும். இதன்படி சென்னை மாநகராட்சி வசம் எத்தனை மரங்கள் உள்ளது. இந்த மரங்களால் எவ்வளவு கார்பனை உறிஞ்ச முடியும் என்பதை வைத்து இது கணக்கீடு செய்யப்படும். ஒரு டன் கார்பனை உமிழும் திட்டங்களைச் செயல்படுத்தி இருந்தால் உங்களுக்கு ஒரு 'கார்பன் கிரெடிட்' வழங்கப்படும்.
மாநகராட்சி என்ன செய்யும்?
சென்னை மாநகராட்சியை பசுமையாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மியாவாகி காடுகள், மரம் நடுதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கார்பன் உமிழ்வை குறைக்கவும், கார்பன் பயன்பாட்டை குறைக்கும் திட்டங்களை ஆய்வு செய்து சென்னை மாநகராட்சியின் எத்தனை 'கார்பன் கிரெடிட்' உள்ளது என்பது கணக்கீடு செய்யப்படும். சென்னை மாநகராட்சியின் சென்னை திட்டங்கள் மூலம் 10 ஆயிரம் கார்பனை உறிஞ்சம் திறன் உள்ளது என்றால் சென்னை மாநகராட்சியிடம் 10 ஆயிரம் 'கார்பன் கிரெடிட்' உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம்.
எப்படி வருகிறது வருவாய்?
சென்னை மாநகராட்சியிடம் 10 ஆயிரம் 'கார்பன் கிரெடிட்' உள்ளது. ஆனால் சென்னை மாநகராட்சி மொத்தம் 5 ஆயிரம் டன் கார்பனை மட்டுமே வெளியிடுகிறது. எனவே தன்னிடம் உள்ள 10 ஆயிரம் கிரெடிட்டில் 5 ஆயிரம் கிரெடிட் சென்னை மாநகராட்சி பயன்படுத்தி கொள்ளும். மீதம் உள்ள 5 ஆயிரம் 'கார்பன் கிரெடிட்'டை விற்பனை செய்து கொள்ளலாம். இதன் மூலம் வருவாய் கிடைக்கும். இதற்கான விலையை மாநகராட்சிதான் நிர்ணயம் செய்யும்.
யார் வாங்குவார்கள்?
மாசு கட்டுப்பாட்டு விதிகளின்படி குறிப்பிட்ட அளவுதான் கார்பனை வெளியேற்ற முடியும். இதைவிட அதிக அளவு கார்பனை வெளியேற்றினால் அதை உறிஞ்சுவதற்கான திட்டங்களை செயல்படுத்தி இருக்க வேண்டும். அப்படி செயல்படுத்தவில்லை என்றால் இதுபோன்ற கார்பன் கிரெடிட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். இதன்படி சென்னை மாநகராட்சியிடம் கார்பன் கிரெடிட்டை வாங்கி அதற்கு ஈடான கார்பனை வெளியேற்றிக் கொள்ளலாம்.
எதற்காக இந்த திட்டம்?
ஒரு நிறுவனம் விதிகளை விட அதிக அளவு கார்பனை வெளியேற்ற அதிக அளவு கிரெடிட் வைத்து இருக்க வேண்டும். அதற்காக வெளியில் இருந்து வாங்க வேண்டும். அப்படி வாங்கினால் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். அப்படி வாங்குவதற்கு பதிலாக குறைந்த அளவு கார்பனை வெளியேற்றும் வகையிலான திட்டங்களை அந்த நிறுவனங்களே செயல்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் செயல்படுத்தபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
2-வது நகரம்
இந்தியாவில் இந்தூர் மாநகரம் இந்த 'கார்பன் கிரெடிட்' முறையைச் செயல்படுத்தி உள்ளது. இதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறது. இதற்கு அடுத்தப்படியாக சென்னைதான் இந்த திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. அதிக கார்பனை வெளியேற்றும் மேற்குலக நாடுகள் இப்போது ஆப்பிரிக்க நாடுகளிடமிருந்து அந்த கார்பன் கிரெடிட்டை வாங்கி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT