Published : 07 May 2022 06:35 AM
Last Updated : 07 May 2022 06:35 AM

ராமேசுவரத்தில் பிளாஸ்டிக்கால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து: பிளாஸ்டிக் தடை தீவிரப்படுத்தப்படுமா?

ராமேசுவரம்: ராமேசுவரத்துக்கு புனித பயணமாகவும், இங்குள்ள பாம்பன் பாலம், தனுஷ்கோடி கடற்கரை, அப்துல் கலாம் நினைவிடம் உள்ளிட்ட இடங்களை காணவும் ஆண்டுதோறும் 2 கோடி பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர்.

இதற்கேற்ப அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ராமேசுவரம் தீவில் விட்டுச் செல்லப்படுகிறது.

கடல்வாழ் உயிர்களைக் கொல்லும் பிளாஸ்டிக் ராமேசுவரம் தீவைச் சுற்றிலும் உள்ள மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக கடல் பரப்பில் பவளப்பாறைகள் அதிகம் உள்ளன. இந்தப் பவளப் பாறைகள் பல அரியவகை கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடமாகவும் உள்ளன. ராமேசுவரத்துக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளால் விட்டுச் செல்லப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் இந்த பவளப் பாறைகளில் தேங்கி, கடலில் வாழும் நுண்ணுயிரிகள் முதல் மிகப்பெரிய திமிங்கலம் வரை உட்கொள்ளப்படுகின்றன.

ராமேசுவரத்தைச் சுற்றி உள்ள மன்னார் வளைகுடா கடல் பிரதேசத்தைப் பாதுகாக்க 2009-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த ஹரிஹரன் ராமேசுவரம் தீவில் பாம்பனில் ஆரம்பித்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த கடுமையான தடைகளை விதித்தார். மேலும் மாவட்ட அரசிதழில் ஆணையாகவும் வெளியிட நடவடிக்கை எடுத்தார்.

பிளாஸ்டிக் பை மற்றும் குவளைகளுக்கு மாற்றுப் பொருட்களையும் ஆட்சியர் ஹரிஹரன் ராமேசுவரத்தில் அப்போது அறிமுகப்படுத்தினார். இதனால் 1.1.2019-ல் தமிழக அரசு பிளாஸ்டிக் தடை விதிப்பதற்கு முன்பே, ராமேசுவரம் தீவில் பிளாஸ்டிக் பைகள், குவளைகளை பயன்படுத்துவதில்லை.

அதே சமயம், ராமேசுவரம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முயன்றாலும், ராமேசுவரத்துக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால் ராமேசுவரத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், வனத்துறை சார்பாக ராமேசுவரத்தின் கடற்கரைப் பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை விட்டுச் செல்வதைத் தவிர்க்கும் வகையில் வனத்துறையினர் வாகனச் சோதனையைத் தொடங்கி உள்ளனர்.

இந்தச் சோதனையின்போது வாகனங்களில்hh சுற்றுலாப் பயணிகள் கொண்டு சென்ற பாலிதீன் பைகளை அகற்றி, அதற்குப் பதிலாக மஞ்சப்பை வழங்கப்பட்டது. மேலும் வனத்துறை சார்பாக ராமேசுவரம் - தனுஷ்கோடி நெடுஞ்சாலையில் நிரந்தர சோதனைச் சாவடிகளை அமைத்து பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியிலும் வனத்துறையினர் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தனர்.

கடுமையான சட்டம் மூலமும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக்கை பயன்படுத்தாதவாறு கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே பிளாஸ்டிக்கால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் ஆபத்தை தவிர்க்க முடியும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x