Published : 30 Apr 2022 04:39 AM
Last Updated : 30 Apr 2022 04:39 AM
புதுடெல்லி: வனப்பகுதிகளில் யானைகள் செல்லும் பாதைகளில் ரயில் தண்டவாளங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதனால் ரயில்களில் அடிபட்டு யானைகள் தொடர்ந்து இறக்கின்றன. இதை தடுக்க, யானைகள் உள்ள பகுதிகளில் தண்டவாளங்கள் அருகே தேனீக்கள் ரீங்காரமிடும் ஒலியை வெளியிடும் கருவிகளை ரயில்வே பொருத்தியது. தேனீக்கள் ஒலி யானைகளுக்கு பிடிக்காது என்பதால் நாட்டின் பல பகுதிகளில் ‘பிளான் பீ’ என்ற பெயரில் இத்திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.
இதன் மூலம் அந்தக் கருவிகள் 600 மீட்டர் தூரம் வரை கேட்கும் அளவில் தேனீக்களின் ரீங்கார ஒலியை தொடர்ந்து எழுப்பும். அதை கேட்கும் யானைகள் தண்டவாளப் பகுதிக்கு வராமல் விலகிச் செல்லும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், இத்திட் டத்தை செயல்படுத்தியும் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து இதுவரை 48 யானைகள் ரயில்களில் அடிபட்டு இறந்துள்ளன.
கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து இதுவரை ரயில்கள் மோதி 48 யானைகள், 188 மற்ற விலங்குகள் இறந்துள்ளன. அதிகபட்சமாக தென்கிழக்கு மத்திய மண்டலத்தில் 72 விலங்குகள் இறந்துள்ளன. பிலாஸ்பூரை தலைமையிடமாக கொண்ட இந்த மண்டலத்தில், பிலாஸ்பூர், நாக்பூர், ராய்ப்பூர் ஆகிய பிரிவுகள் அடங்கி உள்ளன. எனினும், இந்த மண்டலத்தில் ஒரு யானை கூட ரயில் மோதி இறக்கவில்லை.
வடகிழக்கு பிரான்டியர் ரயில்வேயில் ரயில்கள் மோதி யானைகள் அதிகமாக இறந்துள்ளன. 2019-ல் 4, 2020-ல் 6, 2021-ல் 5 மற்றும் 2022-ம் ஆண்டில் இதுவரை 2 என மொத்தம் 17 யானைகள் இறந்துள்ளன என்று புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரயில்களில் யானைகள் அடிபட்டு இறப்பதை தடுக்க, வனத்துறையினருடன் இணைந்து யானைகள் நடமாட்டத்தை கண் காணிக்கும் பணியையும் ரயில்வே மேற்கொண்டது. அத்துடன் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் ரயில்களின் வேகமும் குறைக்கப்பட்டுள்ளது. தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனினும், யானைகள் இறப்பை குறைக்க முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT