Last Updated : 06 Jul, 2019 10:42 AM

 

Published : 06 Jul 2019 10:42 AM
Last Updated : 06 Jul 2019 10:42 AM

ஈச்சங் கள் இப்படியும் செய்யுமா?

‘ஈச்சங் கள் கனவு' என்ற தலைப்பில் காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப. ஜெகநாதன் இந்து தமிழ் நாளிதழின் உயிர் மூச்சு ஜூன் 15 இணைப்பிதழில் எழுதிய பதிவைப் படித்தேன். அது குறித்து எனக்கும் சிலது சொல்ல வேண்டுமென்று - பேனாக் குறுகுறுப்பு - வந்தது.

நாங்கள் மாலை நேர நடைப் பயிற்சியின்போது உட்கார்ந்து பேச - ‘தாப்பு'போல ஒரு இடம் வைத்திருந்தோம். அங்கே நானும் கணவதியும் உட்கார்ந்ததும், நாலு பேர் வந்து உட்காருவார்கள். பேச்சு காடு சுற்றி, மலை சுற்றி அமையும். சிலர் மட்டும் 'மண்போல' பேசாமல் இருந்துவிட்டு எழுந்து போய் விடுவார்கள்.

இளம் சாணி நிறம்

அன்று புதிதாக வாய் திறந்தது, பணி ஓய்வுபெற்ற ஒரு பேராசிரியர் கட்டை ரெட்டியார் (பட்டப்பெயர். எங்களுக்கு மட்டுமே தெரியக்கூடியது). அவர் சொன்னார்:

"நீங்க சொன்னதுபோல அது பனங்கல்கண்டு இல்லை. அது ஈச்சங்கல்கண்டு."

“அப்படியா, மெய்யான பனங் கல்கண்டு எப்படி இருக்கும்?”

ரெட்டியார்: “நிஜக் கல்கண்டு போல வெள்ளை நிறமாக இல்லாமல், ‘லைட் பிரவுன்' நிறத்தில் இருக்கும்" என்றார்.

‘பிரவுன்’ நிறத்தை எங்கள் பக்கத்தில் சாணிக் கலர் என்பார்கள். ‘இளம் சாணிக் கலர்’ என்று சொன்னால் சிரிப்புதான் வரும் (வரட்டுமே). மொழியைக் கற்றுக்கொள்ளும்போது நமக்கும் குழந்தை வயசுதான். ‘மழலைச் சொல்' இவ்வளவு தூரம் வந்தது, ஈச்சங் கள் பற்றியும் பேச்சு வராமல் இருக்குமா?

ஈச்சம் பால்

ஈச்சங் கள் என்று சொல்லவதைவிட ஈச்சம் பால் என்று சொல்வதுதான் பொருத்தம்.

தாய்ப்பாலை அமிர்தப்பால் என்று ஏன் சொல்லுகிறோம்? தாய்ப்பால், சாதி மதம் கடந்து குழந்தை மருத்துவத்துக்குத் தெருவை விட்டு தெரு வந்து,

‘ஒரு சங்குப் பால் வேணும்' என்று கேட்டவுடன், அவர்கள் வீட்டுச் சங்கில் பீய்ச்சி எடுத்துவந்து கேட்டவர்கள் கொண்டு வந்த சங்கில் விடுவார்கள். உயர்ந்த தானம்.

தாய்ப்பால் உண்டு வளர்ந்த குழந்தைகள் பலசாலியாகத் திகழ்வார்கள். ஈச்சம் பால் தொடர்ந்து உண்டு வந்தவன் ஆண்மை கூடிய பலசாலி ஆவான்.

உயிரைக் காப்பாற்றணும்

ரெட்டியார் அவர்களுக்குப் பெரிய அளவில் ஈச்சந்தோப்பு இருந்தது. பத்து நாட்களுக்கு ஒரு முறை ஈச்சந்தோப்பின் மரமேறியிடம் பணம் வாங்கப் போவார். அங்கே ஒருவர் பெட்டிக் கடை வைத்திருந்தார். அதுவே பலகாரக் கடையாகவும் இருந்தது.

தகவல்களைப் பெற முதலில் அந்தப் பெட்டிக் கடைகாரரிடம் ரெட்டியார் போவார். அந்தக் கடை தரைப் புழுதியில் ஒருவன் அநாதையாக விழுந்து கிடப்பதைக் காட்டி "யாரப்பா இந்த ஆள்?" என்று ரெட்டியார் விசாரித்தார்.

"ரெண்டு நாளாக உங்களைப் பார்க்க காத்துக் கிடக்காம்" என்றார்.

"எழுப்பு, எழுப்பு" என்றார் ரெட்டியார்.

எழுந்த வேகத்தில் அவன் அவருடைய கால்களில் விழுந்து கும்பிட்டான். "முதலாளிகளே! உங்களை நம்பித்தாம் வந்திருக்கேம். காசநோய் வந்து,

உடம்பைக் கந்தலாக்கீட்டது. குணமாக்க முடியாது. ஒரு மண்டலம் ஈச்சம்பால் கிடைச்சா - ஒரு மரத்துப்பால் - தொயந்து குடி. எந்திரிச்சிருவேன்னு சொன்னாங்க. நீங்கதாம் என்னோட உயிரெக் காப்பாத்தணும்" என்று திரும்பவும் கும்பிட்டான்.

பேராச்சரியம்

இதுக்குள்ள மரமேறியும் அந்த இடத்துக்கு வந்திருந்தார். அவர் சிரித்த முகமாய் சேப்பு நிறத்தில் இருந்தார்.

ரெட்டியார் ஒரு உத்தரவு போலச் சொன்னார். "ஒரு மரத்துப் பாலைக் கொடு." கடைக்காரரிடம், "இவம் கேக்கிற பலகாரத்தைக் கொடு", என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்.

அடுத்த பத்தாம் நாள் அவரால் போக முடியலை. மத்தியில் ஒருநாள் போனார். பேராச்சரியம் காத்திருந்தது. குப்பையாகக் கிடந்த தோப்பின் தரை சுத்தமாகப் பெருக்கி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது!

"யாரு செஞ்சது இதையெல்லாம்?" என்று கேட்டார்.

"வேற யாரு செய்வா; நீங்க சொன்ன அந்த ஈச்சம்பால்காரர் தாம்" என்றார் பெட்டிக் கடைக்காரர். "எங்க காணம் அவனை?" என்று விசாரித்தால், "அந்தா தெரியிற வேப்பமரத்து நிழல்லே படுத்துத் தூங்கிக்கிட்டிருப்பாம்" என்றார்கள்.

"எழுப்ப வேண்டாம் இப்போ" என்று சொல்லிவிட்டார். "அவனுக்கு உடம்பு எப்படியிருக்கு?" என்று கேட்டார்.

“நண்டு கொழுத்தா செலவுல இருக்காதாம்! இப்போ அவம் திரிய ஆரம்பிச்சிட்டாம். உருப்பட்டுப் போனாம்" என்றார்கள்.

ஈச்சம் பால் கீர்த்தி

அடுத்த தடவை ரெட்டியார் அவனைப் பார்த்ததும் ரொம்பச் சந்தோசம் ஆயிட்டது. “நல்லா இரு; நல்லா இரு” என்று வாழ்த்திவிட்டுப் போனார்.

அதற்கடுத்த வட்டம் அவர் வந்தபோதுதான், அவன் செய்த 'கீர்த்தி' இப்படி என்று தெரிந்தது.

"ஈச்சம்பால் இப்படியும் செய்யுமா?" என்று ரெட்டியார் வியந்தார்.

"அந்த மரமேறியின் குமரிப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓடிவிட்டான்" என்றார் கடைக்காரர்.

கட்டுரையாளர்,

தமிழின் மூத்த எழுத்தாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x