Published : 13 Jul 2019 11:44 AM
Last Updated : 13 Jul 2019 11:44 AM
சு.அருண் பிரசாத்
“பருவநிலைப் பேரழிவுதான் மனிதகுலம் இன்றைக்கு எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய வாழ்வாதாரச் சிக்கல். அச்சு, காட்சி, வானொலி என அனைத்து ஊடகங்களிலும் இதைக் குறித்த செய்திகளே மையம் கொண்டிருக்க வேண்டும். ஆனால், நிச்சயமற்ற எதிர்காலத்தை வைத்துக்கொண்டு மற்ற விஷயங்களைப் பற்றி நாம் வளவளவென பேசிக்கொண்டிருக்கிறோம்”
- இதைச் சொன்னது உலகின் மிகப் பெரிய அறிவியலாளரோ இலக்கியவாதியோ அல்ல. பருவநிலைப் பேரழிவுக்கு எதிரான தன் போராட்டங்களால் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ஸ்வீடன் பள்ளி மாணவி கிரெட்டா தன்பர்க் (16) தான் இதை கவனப்படுத்தியவர்.
என்ன பிரச்சினை?
18, 19-ம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த தொழிற்புரட்சி, மனிதகுலத்தின் அடுத்தகட்ட நகர்வாகக் கருதப்பட்டது. ஏகாதிபத்தியத்தின் மூலம் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை காலனிகளாகக் கொண்டு அந்த நாடுகளின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளில் தொழில்மயமும் நகர்மயமும் அதீத வேகத்தில் நிகழ்ந்தன.
கரிப்பொருட்களை மையமாகக் கொண்ட முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படையில் மேற்கத்திய நாடுகள் இந்தப் போக்கை நடைமுறைப்படுத்தின. போக்குவரத்து, தொழிற்சாலை என எல்லா நவீன வசதிகளுக்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற புதைபடிவ எரிபொருளின் பயன்பாடே அடிப்படையாக இருந்தது.
புவியில் மனிதகுலம் தோன்றியதில் இருந்து தொழிற்புரட்சிக்கு முந்தைய காலம்வரை வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு 300 பி.பி.எம் ஆகவும் புவியின் சராசரி வெப்பநிலை குறிப்பிட்ட அளவிலேயும் தொடர்ந்துவந்தது. தொழிற்புரட்சியின் விளைவாக புதைபடிவ எரிபொருட்களின் தொடர் பயன்பாடும் அதனால் வெளியேறிய கரியமில வாயுவும், புவியின் சூழலியலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கின.
கரிப்பொருள் பொருளாதாரத்தின் கட்டுப்பாடற்ற செயல்பாடுகளால் 2019 மே மாதத்தில் வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு 415 பி.பி.எம்எனும் புதிய உச்சத்தைத் தொட்டது. பருவநிலை மாற்றத்தின் மிக மோசமான விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறோம் என்று பருவநிலை அறிவியலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து புவி வெப்பமாதல், பனிப்பாறை உருகுதல், கடல் நீர்மட்ட உயர்வு, கடும் வறட்சி, திடீர் வெள்ளம், அடிக்கடி புயல்கள் உருவாதல் என எளிதில் கணிக்க முடியாத இயற்கை நிகழ்வுகள் (vulnerable events) தீவிரமடையும் என்றாலும், இதை நாம் வாசித்துக்கொண்டிருக்கும் இந்த நொடியில் கார்பன் சார்ந்த நம்முடைய பயன்பாடுகளை முற்றிலும் நிறுத்தினாலும்கூட, புவியோ-மக்களோ மீளமுடியாத நிலை ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
கவனிக்கத் தவறினோம்
மனிதச் செயல்பாடுகளின் விளைவாக வளிமண்டலத்தில் கரியமில வாயு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், புவியின் சராசரி வெப்பநிலை உயரும் என்று பருவநிலைப் பேரழிவு குறித்த முதல் அறிவியல்பூர்வமான ஆய்வை ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாந்தே அரேனியஸ் 1896-ல் வெளியிட்டார்.
ஆனால், அதற்குப் பிறகும்கூட உலகம் பெரிதாக விழித்துக்கொள்ளவில்லை. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் மனிதத் தாக்கத்தால் பருவநிலை மாற்றமடைந்து வருகிறது என்று பருவநிலைப் பேரழிவு குறித்த தீவிரம் ஓரளவு உணரப்பட்டது. பருவநிலைப் பேரழிவின் போக்குகள், தாக்கங்கள் என இது குறித்த ஆய்வுகளை ஐ.நா.-வின் உறுப்பாகிய IPCC அமைப்பு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த அமைப்பு வெளியிட்ட சிறப்பு அறிக்கையில், புவியின் சராசரி வெப்பநிலையை தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்ததைவிட அதிகபட்சமாக 1.5 டிகிரி செல்சியஸ் அளவில் வைத்திருக்க வேண்டும், இல்லையென்றால் கட்டுப்படுத்த முடியாத அழிவை மனித குலம் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.
மாணவர் போராட்டங்கள்
இன்றைக்கு பருவநிலைப் பேரழிவு உலகின் மிகப்பெரிய விவாதமாக உருவெடுத்துள்ளது. அரசியலில், தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. உலகம் முழுக்க வகுப்புகளைப் புறக்கணித்து, பருவநிலைப் பேரழிவுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டி ஆட்சியாளர்களை வலியுறுத்தும் பள்ளி மாணவர்களின் போராட்டங்கள் தொடர்ச்சியாகியுள்ளன.
மற்றொரு புறம், பருவநிலைப் பேரழிவு என்ற ஒன்றே நிகழவில்லை; மனிதர்களால் எப்படி இயற்கையை மாற்ற முடியும்; முற்றிலும் பொய்யான தகவல்களைப் பரப்பி மக்களை பீதியடையச் செய்யக் கூடாது என்று ஒரு தரப்பு அரசியல்வாதிகள், அறிவியலாளர்கள், தொழில்நிறுவனச் சார்பாளர்கள் காலநிலைப் பேரழிவு குறித்து மறுத்து பேசி வருகின்றனர். பருவநிலைப் பேரழிவைத் தொடர்ந்து மறுதலித்து வரும் அரசியல்வாதிகளில் முதன்மையானவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
மனிதவழிப் பேரழிவும் இலக்கியமும்
புவியியல், சுற்றுச்சூழல், பருவநிலை என அனைத்திலும் மனிதனை மையப்படுத்தி, மனிதனுடைய செயல்பாடுகள் அவற்றில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கும் இந்தக் காலகட்டம் ‘மனிதவழிப் பேரழிவுக் காலம்’ (anthropocence) என்று நவீன அறிவியலாளர்களால் அழைக்கப்படுகிறது.
பருவநிலைப் பேரழிவு குறித்த தகவல்கள் அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்தவையாக நம் அன்றாட வாழ்விலிருந்து விலகி இருப்பதைப் போலத் தோன்றலாம்; எளிதில் உணர முடியாத, எங்கோ, எப்போதோ பிற்காலத்தில் நிகழப் போவதைப் போன்ற எண்ணத்தைத் தரும் பருவநிலைப் பேரழிவு, உண்மையில் நம் கண் முன்னே நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகப்பெரிய தாக்கம் செலுத்தும் நடப்பு நிகழ்வுகள் குறித்த பதிவும் விசாரணையும் அந்த காலகட்டத்து கலை இலக்கியவாதிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. கலை இலக்கிய உலகம் அந்நிகழ்வுகளின் காரண, காரியங்கள் மற்றும் விளைவுகளை சகல பரிமாணங்களிலும் அணுகி, அதைப் பற்றிய ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தும் செயல்பாட்டில் ஈடுபடும். அதுபோல, மனிதவழிப் பேரழிவுக் காலத்தில் அதன் தாக்கம் குறித்து கலை இலக்கிய உலகம் எத்தகைய பதிவுகளை இதுவரை உருவாக்கி இருக்கிறது என்பது விவாதத்துக்குரியது.
இலக்கியங்களில் பேசப்படுகிறதா?
அறிவியல் புனைவு என்ற பிரிவின் கீழ் எழுதப்படும் புனைவுகளுள் பெரும்பான்மையானவை அதீதக் கற்பனை உலகு (utopia) அல்லது கடுந்துயர் கற்பனை உலகில் (dystopia) நிகழ்வதைப் போன்று கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அதன் துணைப் பிரிவான பருவநிலைப் புனைவு (Climate fiction) பருவநிலைப் பேரழிவை மையப்படுத்தி எதிர்காலத்தில் நகரங்களும் மக்களும் பேரளவில் அழிவதைப் போன்ற கடுந்துயர் கற்பனை உலகைக் கட்டமைக்கின்றன.
இயல்பாகவே புனைவு நம்முடைய விருப்பங்கள், கற்பனையைக் கட்டமைக்கிறது. மனிதர்கள் தம்முடைய எதிர்காலத்தை சிறப்பாக்கிக் கொள்வதற்காகவே இன்றைய நேரத்தை பணமாக-சொத்தாக மாற்றிக்கொள்ள உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கண் முன்னே நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மாபெரும் பேரழிவைப் பற்றி உணராமல்-பேசாமல், எப்படி எதிர்காலத்தை மட்டும் கட்டமைக்க முடியும்?
தார்மிகக் கடமை
கலை இலக்கிய உலகில் காலநிலைப் பேரழிவு பற்றிய பதிவுகளின் தேவை குறித்து வலியுறுத்தும் இந்திய-ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ், “பருவநிலைப் பேரழிவு என்பது அரசியல், பொருளாதாரம் சார்ந்த பிரச்சினையல்ல; அது நம் பண்பாட்டின் பிரச்சினை, கலைஞர்களின் கற்பனைத் திறன் சார்ந்த பிரச்சினை. மனித வாழ்வின் இருப்பையே அச்சுறுத்தும் விளைவுகளைக் கொண்டிருக்கும் இதைப் பற்றி பேச வேண்டிய தார்மிகக் கடமை எழுத்தாளர்களுக்கு இருக்கிறது” என்கிறார்.
அந்நிய நாடுகளில் குடியேறும் சிக்கல்கள் ஏற்கெனவே தீவிரமடைந்திருக்கும் காலகட்டம் இது. எப்படியாவது வேறொரு நாட்டில் குடியேறிவிட வேண்டுமென்ற முயற்சியில் அகதிகளும் அவர்தம் குழந்தைகளும் அவல மரணத்தைச் சந்திக்கும் காட்சிகளை நாள்தோறும் பார்க்கிறோம்.
இந்நிலையில், பருவநிலைப் பேரழிவால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், கடல் நீர்மட்ட உயர்வால் பருவநிலை அகதிகளாக பேரளவில் மாறும் சூழல் ஏற்படும். “அந்நிய நாட்டு மக்களுக்குப் புகலிடம் அளிக்கும் விவகாரம் மேற்கத்திய அரசியலை தலைகீழாக மாற்றியுள்ளது. மேற்கத்திய நாடுகள் அகதிகளை வரவேற்கத் தயாராக இல்லை.
இந்த உலகைக் குறித்த நம்முடைய மரபார்ந்த சிந்தனையை இந்தப் பிரச்சினை புரட்டிப் போட்டுள்ளது. முற்றிலும் புதிய யுகத்தில் நாம் வாழ்கிறோம். இது எங்கே போய் முடியும் என்பதைப் பற்றிய சிறிய அறிதல்கூட, இப்போது நமக்கு இல்லை” என்று காலநிலைப் பேரழிவின் விளைவுகள் குறித்து அமிதவ் குறிப்பிடுகிறார்.
பருவநிலைப் பேரழிவும் தமிழிலக்கியமும்
நம்முடைய அன்றாட வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்ட பருவநிலைப் பேரழிவு பற்றி எழுதப்பட்ட நாவல்கள் குறித்துக் கூறும்போது, “அன்றாட வாழ்வின் தீவிரத்தை அவை பேசவில்லை” என்கிறார் அமிதவ். சுதந்திரம் என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் கருத்தாக்கத்தின் மையத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தியாக வேண்டும். நம்முடைய எதிர்கால வாழ்க்கையைக் கற்பனை செய்வது குறித்த மாற்று வழிகள் பற்றி யோசிக்க வேண்டும் என்றும் அமிதவ் வலியுறுத்துகிறார்.
இந்நிலையில் தமிழிலக்கியம் பருவநிலைப் பேரழிவை எப்படி எதிர்கொண்டிருக்கிறது என்று பார்த்தால், பெரும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. சூழலியல் விழிப்புணர்வு பரவலாகத் தொடங்கிய பிறகு, அது குறித்து எழுதப்பட்ட புனைவுகள் தமிழில் சொற்பமாகவே இருக்கின்றன.
இந்நிலையில், சமகாலத்தின் மிகப்பெரிய சிக்கல் குறித்து தமிழிலக்கிய உலகில் சிறு சலனம்கூடத் தென்படாதது, தமிழ் எழுத்தாளர்களுக்கு உண்மையில் இந்தத் துறை சார்ந்த அறிமுகமும் புரிதலும் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. சமகாலச் சூழலியல் பிரச்சினைகளைப் பற்றி தமிழ் இலக்கிய உலகம் பிரதிபலிக்காத விதமே, இக்கேள்வி எழ அடிப்படைக் காரணமாகிறது.
எங்கே இருக்கிறது தமிழ் இலக்கியம்?
சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முதன்மை ஆளுமைகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும், தீவிர இலக்கிய வாசகர் வட்டத்தைக் கொண்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் கவன எல்லைக்குள் மேற்கண்ட அம்சங்கள் எட்டி பார்த்திருக்குமா என்பதுகூடச் சந்தேகம்தான்.
விவாதத்தை ஏற்படுத்தக்கூடிய சில சூழலியல் படைப்புகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சூழலியல் இலக்கிய, எழுத்து முயற்சிகளை தீவிர இலக்கியவாதிகள் கவனப்படுத்தாமல் புறக்கணிப்பதையும் பார்க்க முடிகிறது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, சென்னைப் பெருவெள்ளம், நதிநீர் பிரச்சினை என சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமடைந்திருக்கும் தமிழக சூழலியல் பிரச்சினைகளுக்கு தமிழிலக்கிய உலகம் என்ன முகம் கொடுத்திருக்கிறது? இந்தத் தீவிர வாழ்வாதாரப் பிரச்சினைகளின் போதெல்லாம் தமிழ் இலக்கிய உலகின் முகங்கள் இலக்கியத்திலும் களத்திலும் என்னவிதமாகச் செயலாற்றினார்கள் எனக் கேள்விகள் முடியாது நீள்கின்றன.
அமிதவ் கோஷ்: பேரழிவு காலத்தின் இலக்கியம்! உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் அமிதவ் கோஷ், இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதைப் பெற்ற இளம் எழுத்தாளர், முதல் ஆங்கில எழுத்தாளர். அவருடைய முதல் நாவல், ‘தி சர்கிள் ஆஃப் ரீசன்’ 1986-ல் வெளியானது. ‘தி ஷேடோ லைன்ஸ்’, ‘தி கிளாஸ் பேலஸ்’, இந்தியா – சீனா இடையே கிழக்கிந்தியக் கம்பெனி மேற்கொண்ட ஓபியம் வர்த்தகத்தை அடிப்படையாகக்கொண்டு எழுத்தப்பட்ட ஐபிஸ் டிரைலாஜி வரிசை நாவல்களும் பரவலாகக் கவனம் பெற்றவை. ‘மனித குலத்தின் இருப்பை அச்சுறுத்தும் காலநிலைப் பேரழிவு குறித்துப் பேச எழுத்தாளர்கள் தவறிவிட்டார்கள்; கலை இலக்கிய உலகம் இதைப் பற்றி பேச வேண்டியது அவசியம்’ என்று ‘தி கிரேட் டிரேஞ்ச்மெண்ட்’ நூலில் அமிதவ் பேசியிருந்தது விவாதத்தை உருவாக்கியது. தொடர்ந்து காலநிலை மாற்றம், அதன் விளைவுகள், இடப்பெயர்வு உள்ளிட்ட சமகாலத் தீவிரப் பிரச்சினைகளை தன்னுடைய சமீபத்திய நாவலான ‘கன் ஐலண்ட்’-ல் அமிதவ் பேசியிருக்கிறார். |
கட்டுரையாளர்
தொடர்புக்கு:
arunprasath.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT