Published : 29 Jun 2019 12:33 PM
Last Updated : 29 Jun 2019 12:33 PM

ஞெகிழி பூதம் 22: ஞெகிழி இல்லாத வீடு சாத்தியமா?

‘நாயகன்’ படத்தில் கமலிடம் அவருடைய பேரன் கேட்கும் “நீங்கள் நல்லவரா? கெட்டவரா?” என்ற கேள்வியை நம்மிடம் யாராவது கேட்டால் என்ன சொல்வோம்? ‘தெரியலையேப்பா’ என்பதற்கு பதிலாக, “நான் எந்தத் தவறும் செய்வதில்லையே” என்றுதான் அடித்துச் சொல்வோம்.

அதேபோல, ஞெகிழிப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு பலரும் “ஆமாம், நான் துணிப் பையை மட்டுமே பயன்படுத்துகிறேன்” என்ற பதிலையே சொல்லுவார்கள். ஆனால், அது மட்டும் போதுமா?

பழைய கதைதான், அன்றாட வாழ்க்கை முறையில் காது குடையும் பஞ்சுக்குச்சி முதல் காலில் போடும் செருப்புவரை ஞெகிழி நீக்கமற நிறைந்துள்ளது. நாம் பயன்படுத்தும் ஞெகிழிப் பைகள் மட்டுமல்ல, நாம் தூக்கிப் போடும் ஒவ்வொரு ஞெகிழிப் பொருளும், நமக்கு நாமே தயார் செய்துகொள்ளும் அணுகுண்டின் ஒரு பகுதிதான். அப்படி இருக்கும்போது நம் வீட்டை ஞெகிழி இல்லாத வீடாக மாற்ற முடியுமா?

முடியும். அதற்கு உறுதியான நம்பிக்கையும் சூழலியல் மீது பற்றும், அடுத்த தலைமுறையினர் மீது அபரிமிதமான அன்பும் முக்கியத் தேவை. இத்துடன் மனமாற்றமும் பொருள் மாற்றங்களும் இருந்தாலே போதும், நம் வீட்டில் ஞெகிழிப் பொருள்களின் பயன்பாடு பெருமளவு குறைவதை கண்கூடாகப் பார்க்கலாம்.

மன மாற்றம்

நமது வீட்டில் எதைப் பார்த்து பெருமை கொள்கிறோம்? தீபாவளிப் பண்டிகைக்காக தள்ளுபடியில் அள்ளி வாங்கிய வீட்டு பயன்பாட்டுப் பொருள்களைப் பார்த்தா? சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒன்றுக்கு இன்னொன்று இலவசம் என்று பொதியப்பட்டு, நம் வீட்டுக்குள் திணிக்கப்படும் நுகர்வு பொருள்களைப் பார்த்தா? இவற்றில் எத்தனை பொருள்கள் உங்களுடைய தினசரி வாழ்க்கைக்கு மிகவும் தேவையான பொருள்களாக இருக்கின்றன?

கட்டாயத் தேவைக்கு அப்பாற்பட்ட எல்லா பொருள்களும் ஆடம்பரம்தான். நம் ஆசையைத் தூண்டி, நம் தலையிலும் வீட்டிக்குள்ளும் அவை திணிக்கப்படுகின்றன. ஆடம்பரம் என்பது ஒருவித மனநிலை, ஆனால் அது கடக்க முடியாதது அல்ல.

நிறைவு எனும் மனநிலையைத் தேடுவதே பூவுலகைக் காப்பாற்ற முதன்மைத் தேவை. நிறைவான வாழ்க்கையை வாழ, உங்களுக்கு இப்போது உள்ள பொருள்களில் பாதிகூடத் தேவைப்படாது. தேவையற்றவற்றை இன்றே களைந்துவிடுங்கள். தேவையைச் சுருக்குதல் (Minimalism) எனும் கோட்பாட்டை கைகொள்ளத் தொடங்குங்கள். வாழ்க்கையின் அதிவேகத்தை, சற்றே மிதவேகம் ஆக்குங்கள்.

பொருள் மாற்றம்

வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஞெகிழிப் பொருள்களை எப்படிக் குறைப்பது என்பதைப் பார்ப்போம். முதலில் நம் உடைகள்:

அதிநவீன உடைகள்: அதிவேகமாக மாறும் உடை நாகரிகத்துடன் நாமும் இணைந்து இருக்கவேண்டுமென நினைத்தால், மாதம் ஒரு பீரோ ஆடையாவது வாங்கியாக வேண்டும். பெரும்பாலான ஆடைகளில் பாலியஸ்டர் போன்ற செயற்கை இழைகளே இருக்கும்.

ஆக, பீரோ பீரோவாக துணி என்ற பெயரில் ஞெகிழி நூல்களை வாங்கி வைத்துள்ளோம். அதன் காலம் இருக்கும்வரை அவற்றைப் பயன்படுத்திவிட்டு காயலாங்கடையில் கொடுத்து, பதிலுக்கு அலுமினியப் பாத்திரத்தை வாங்கிக்கொள்ளுங்கள். புதிதாக ஒரு உடை வாங்கியாக வேண்டும் என்று நினைத்தால், அது பருத்தி ஆடையாகவே இருக்கட்டும்.

திரைச் சீலை, மிதியடி: அணியும் துணிக்கு அடுத்தபடியாக திரைச்சீலை, பாய், மெத்தை விரிப்பு, போர்வை, செருப்பு, மிதியடி போன்றவை அதிகம் செயற்கை இழைகளால் ஆனவை. புதிதாக ஏதேனும் வாங்கவேண்டுமென்றால் அது பருத்தி, தாவர நார் போன்ற இயற்கைப் பொருள்களால் ஆனவையாக இருக்கிறதா என்று பாருங்கள்.

கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்

தொடர்புக்கு: krishnan@theyellowbag.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x