Last Updated : 26 Aug, 2017 11:07 AM

 

Published : 26 Aug 2017 11:07 AM
Last Updated : 26 Aug 2017 11:07 AM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 47: பண்ணையை ஒருங்கமைத்தல்

நிலமானது மண்ணால் செறிந்து கிடக்கிறது. விசும்பு நிலத்தை ஏந்திக் கொண்டுள்ளது. விசும்பு தக்க வைத்துக்கொண்டிருக்கின்ற காற்றும், காற்றால் அசைக்கப்படும் தீயும், தீயுடன் முரண்படும் நீரும் ஆக இந்த ஐம்பெரும் பூதங்கள் இயங்குகின்றன என்று புறநானூற்றுப் பாடல் கூறுகிறது இப்படி:

மண் திணிந்த நிலனும்

நிலன் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித்தலைஇய தீயும்

தீ முரணிய நீரும் (புறம்:2)

பண்ணை வடிவமைப்பில் நாம் கவனிக்க வேண்டிய அடிப்படைகளில் ஐம்பூத அமைப்பும், ஆற்றல்களும் முக்கியமாகின்றன. குறிப்பாக நிலத்தின் ஏற்ற இறக்கங்கள் அதாவது சாய்வும், சமதள அமைப்பும் கவனங்கொள்ள வேண்டியது.

அடுத்ததாக விசும்பு எனப்படும் ஆகாயத்தில் இருந்து கிடைக்கின்ற கதிர்கள் கவனங்கொள்ள வேண்டியவை. இவை பற்றி ருடால்ஃப் சுடெய்னெர் என்ற ஆஸ்திரிய அறிஞர் ஐந்திரம் (பஞ்சாங்கம்) ஒன்றை உருவாக்கியுள்ளார். அடுத்ததாகக் காற்றின் இயக்கத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். ஆடி மாதத்தில் வீசும் விரைந்த காற்றும் மாசி பங்குனி மாதங்களில் காணப்படும் மந்தமான வேகங்கொண்ட காற்றையும் புரிந்துகொண்டு பண்ணை வடிவமைக்க வேண்டும். இது தவிர திடீரென ஏற்படும் வளி மண்டல் அழுத்தங்களால் ஏற்படும் புயல் போன்ற காற்றின் தன்மைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக கதிரவனின் வெப்பம் அல்லது வெயிலின் போக்கு. ஞாயிறு வடசெலவாகவும் (உத்திரயாணம்) தென்செலவாகவும் (தட்சிணாயாணம்) பூமியின் சுழற்சியால் இடம் மாறும். அதாவது ஞாயிறு தெற்கு நோக்கி நகர்ந்து (ஞாயிறு நகர்வதில்லை, பூமிதான் நகரும்) செல்லும் பயணத்தை தென்செலவு என்பர். இது ஜூலை மாதம் 17-ல் தொடங்கி, ஜனவரி மாதம் 13-ல் முடியும். இதேபோல வடசெலவு ஞாயிறு வடதிசை நோக்கி நகரும் நிகழ்வு, ஜனவரி 14-ல் (தைத்திருநாள்) தொடங்கி ஜூலை 16-ல் முடியும். ஆண்டுக்கு ஒரு முறை இந்த இரு நிகழ்வுகளும் நடக்கும். இதனால் ஏற்படும் வெயில், நிழல் மாற்றங்கள் நமது பண்ணையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.

அடுத்ததாக ஒவ்வொரு நாளும் விடியலில் தொடங்கி அந்தி வரைக்கும் வெயிலின் தாக்கம் மணிக்கு மணி மாறுபடும். அதுமட்டுமல்லாது காலையில் கிழக்கு நோக்கும்போது ஏற்படும் வெயிலின் தாக்கமும் பிற்பகலில் மேற்கு நோக்கும்போது ஏற்படும் தாக்கமும் வேறுபடும். ஆக திசைகளும் பண்ணை வடிவமைப்பின் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.

பண்ணையின் ஐம்பூத ஆற்றல்களில் நீரின் பங்கும் இன்றியமையாதது. மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கும், அதனால் பண்ணைக்கும் ஏற்படும் மாற்றங்களும் வடிவமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கும். எனவே நீர், நிலம், காற்று, வெயில், வானிலை முதலிய காரணிகள் நமது பண்ணையில் எந்த இடத்தில் எப்படி அமைக்க வேண்டும் என்பதை உறுதி செய்கின்றன.

முதலில் நிலத்தை எடுத்துக்கொள்வோம். உயரமான அமைப்பு அல்லது சாய்வு இருக்கும்போது அங்கு நமது தண்ணீர்த் தொட்டியை அமைத்தால் புவியீர்ப்பு விசையாலேயே நீரை அடிப்பகுதிக்கு மின்சாரமின்றிக் கொண்டு வர முடியும். பள்ளமான பகுதிகளில் குளங்களை அமைத்து நீரைச் சேமிக்க முடியும்.

வேனில் காலத்தில் வரும் வெப்பக்காற்றும், கார்காலத்தில் வரும் குளிர்காற்றும், கடலோரங்களில் இருந்து வரும் உப்புக் காற்றும் பண்ணைப் பயிர்களையும், உயிர்களையும் பாதிக்கச் செய்யும். எனவே நாம் காற்றுத் தடுப்பான்களாக சில மரங்களையும், புதர்களையும் பண்ணையின் ஓரங்களில் அமைக்க வேண்டும். காற்றுத் தடுப்புகளாக சவுக்கு மரங்கள், கற்றாழை வகைகள், கள்ளி வகைப் பயிர்கள் பயன்படும்.

வெயிலைப் பொறுத்த அளவில் நம்மைப்போன்ற தெற்குலகப் பகுதி மக்களுக்கு வடமேற்காகக் கோடை வெயில் கிடைக்கும். வடக்குலக நாடுகளுக்கு தென்மேற்காகக் கிடைக்கும். குளிர் காலத்தில் அப்படியே மாறி வெயிலின் தாக்கம் இருக்கும். நாம் இப்போது இலையுதிர் மரங்களை வீட்டைச் சுற்றி அமைப்போமேயானால் கோடையில் அவை இலைக்குடை பிடித்து நம்மைக் குளிர்விக்கும். கார்காலத்தில் இலை உதிர்த்து வெது வெதுப்பை நமக்குக் கிடைக்கச் செய்யும். அப்படியானால் எந்த மாதத்தில் எந்த மரங்கள் இலைகளை உதிர்க்கின்றன என்று நமக்குத் தெரிய வேண்டும்.

அடுத்ததாகப் பண்ணைக்குள் வரும் நீரின் வரத்தும் போக்கும் பற்றிப் பார்ப்போம்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x