Published : 26 Aug 2017 11:06 AM
Last Updated : 26 Aug 2017 11:06 AM
சரியாய்த்தான் எழுதினான்
மாணவன்
‘பாழாறு’!
- என்று யாழன் ஆதியின் கவிதை ஒன்று உண்டு. பாலாறுக்கும் அடையாறு என்று அழைக்கப்படும் எனக்குமிடையே ஓர் ஒற்றுமை உண்டு. நான் செல்லும் வழிகளில், நகரை நிர்மாணித்து வாழ்ந்துவரும் மக்கள் தங்கள் வீடு, தொழிற்சாலைக் கழிவுகளை எல்லாம் எனக்குள் விடாமலிருந்தால், நான் பாலாறைப் போலக் காய்ந்துதான் கிடந்திருப்பேனே தவிர, இன்றைக்கு நீங்கள் பார்ப்பதுபோல சாக்கடையாக ஓடிக்கொண்டிருக்க மாட்டேன்.
வண்டலூருக்கும் செம்பரம்பாக்கத்துக்கும் இடையில் உள்ள மணிமங்கலம் எனும் இடத்தில்தான் நான் பிறக்கிறேன். உண்மையில் எனது பெயர் அடையாறு கிடையாது. ஆங்கிலேயர்கள் சென்னைக்கு வந்தபோது, எனக்கு இட்ட பெயர் செங்கல்பட்டு ஆறு. மக்கள் நினைப்பதுபோல நான் எப்போதும் கடலில் சென்று கலப்பதில்லை. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தைப்போல, செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழிந்தால் மட்டுமே என்னுள் நீர் பாய்ந்து ஓடும். அந்தக் காலங்களில் மட்டுமே நான் கடலில் சென்று கலக்கிறேன்.
வரலாற்றில் ஓடுகிறேன்
நான் செல்லும் வழியின் கரைகளில் குறிப்பிடத்தகுந்த விஷயங்கள் நிறைய நிகழ்ந்திருக்கின்றன. அன்று, சாளுக்கியர்களின் ஆட்சி மகாராஷ்டிரம், கர்நாடகம் என்று விரிந்திருந்தது. அடுத்ததாக அவர்கள் காஞ்சியைக் கைக்கொள்ள நினைத்தனர். அதற்காக அவர்கள் பல்லவர்களுடன் போரிட்டனர். அந்தப் போர், எனது பிறப்பிடமான மணிமங்கலத்தில்தான் நடந்தது.
‘நவீன சென்னையின் நிறுவனர்’ என்று அழைக்கப்படுகிற ஃபிரான்சிஸ் டேவும், கிழக்கிந்திய கம்பெனியின் முதல் முகவரான ஆண்ட்ரூ கோகனும் இணைந்து 1640-ம் ஆண்டில் ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார்கள். அந்தக் கோட்டையை 1746-ம் ஆண்டில் பிரெஞ்சுக்காரர்கள் வசப்படுத்த நினைத்தபோது, ஆங்கிலேயர்கள் எதிர்த்துப் போரிட்டனர். இறுதியில் பிரெஞ்சுக்காரர்களே வென்றனர். இந்தப் போர், அடையாற்றின் கரையில் நிகழ்ந்ததால் ‘அடையாறு யுத்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு வரலாற்றின் வழியே நான் வழிந்து ஓடியிருக்கிறேன்.
சமயம் வளர்த்திருக்கிறேன்
‘ஆறில்லாத ஊருக்கு அழகு பாழ்’, ‘கோயில் இல்லாத ஊரில் வாழ வேண்டாம்’ என இரண்டு வழக்குமொழிகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த இரண்டு பழமொழிகளையும் நிஜமாக்குவதுபோல, நமது மக்களுக்காக பல ஆன்மிகத் தலங்களும் என் கரையில் தோன்றின.
கிறிஸ்தவத்தைப் பரப்ப வந்த ‘சந்தேக தாமஸ்’ என்று அழைக்கப்படும் புனித தோமா, உயிர் நீத்த மலையான புனித தோமையர் மலை என் கரையில்தான் உள்ளது. அதேபோல சாந்தோம் தேவாலயமும் நான் செல்லும் வழியில்தான் வீற்றிருக்கிறது. விமான நிலையம் அருகே உள்ள திருநீர்மலைக் கோயிலும் என் கரையில்தான் தோன்றியிருக்கிறது. இப்படி சர்வ சமயங்களையும் வளர்த்து வந்திருக்கிறேன். என் கரையில் உள்ள தியசாஃபிகல் சொசைட்டி, சென்னையின் முக்கிய அடையாளங்களில் உலகப் புகழ்பெற்றது.
கரையில் வாழ்ந்த பிரபலங்கள்
அதேபோல இந்த மாநகரத்தின் பக்கங்களை அலங்கரித்த பல மனிதர்கள் என் கரையில் பிறந்து, வாழ்ந்து, மடிந்திருக்கிறார்கள். இங்குதான் ‘கிண்டர்கார்டன்’ என்கிற விளையாட்டுவழி கல்வி முறையை உருவாக்கிய மரியா மாண்டிசோரி வாழ்ந்தார். நமது தேசிய கீதமான ‘ஜன கன மன’வுக்கு இசையமைத்த மார்கரெட் கசின்ஸ் அம்மையார் இங்குதான் வாழ்ந்து, உயிர் நீத்தார்.
எம்.ஜி.ஆருக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும் என்ன சம்பந்தம்? இருவரும் ‘பாரத ரத்னா’ விருது பெற்றவர்களும்கூட. அவர்கள் இருவரும் ‘மீரா’ படத்தில் நடித்துள்ளனர். ஒரே படத்தில் இரண்டு பாரத ரத்னா விருது பெற்றவர்கள் நடித்த படம், ‘மீரா’வுக்கு முன்பும் இல்லை. பின்பும் இல்லை. அதைத் தாண்டி அவர்களுக்கிடையே இருக்கும் முக்கியமான சம்பந்தம், அவர்கள் இருவரும் என் கரைகளில் வாழ்ந்தார்கள் என்பது!
எனக்கும் நினைவுகள் உண்டு!
இப்படிப் பல பெருமைகள் கொண்ட என்னை நாவலாசிரியரும், வரலாற்றாசிரியருமான வெங்கடேஷ் ராமகிருஷ்ணன், கலாச்சார வரைபடமாக ஆவணப்படுத்தி இருக்கிறார்.
“இன்றைக்கு, அடையாறைச் சுத்தப்படுத்துகிறோம், கூவத்தைச் சுத்தப்படுத்துகிறோம் என்று கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது அரசு. அது சரியாகச் செலவிடப்படுகிறதா என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், இவ்வளவு செலவு செய்வது பயனில்லை என்பதுதான் உண்மை. ஆற்றில் பயன்பாட்டுக்கான நீரை எப்படிச் சேமிப்பது என்பதுதான் பிரச்சினை.
ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பிலும் செப்டிக் டேங்க் கட்ட வேண்டும். உங்கள் வீட்டுக் கழிவை உங்கள் வீட்டு செப்டிக் டேங்கிலேயே சேமிக்கும்போது, அதை ஆற்றில் விடுவதற்கான அவசியம் ஏற்படாது. அப்போது, நீர் சுத்தமாகிவிடும். அதைவிட்டுவிட்டு கழிவை அகற்றுகிறேன், ஆற்றை மடைமாற்றுகிறேன் என்று சொல்வதெல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை. காலங்காலமாக எந்த வழியில் நீர் ஓடுகிறதோ அப்படித்தான் இனியும் ஓடும். ஏனென்றால் நீருக்கும் நினைவுகள் உண்டு!” என்கிறார் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்.
இதை சென்னை மக்கள் உணராததால், நான் இன்றைக்குப் பாழடைந்து கிடக்கிறேன். கையறு நிலையில் இருக்கும் என் கதையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்!
நெருக்கம் அதிகரித்தால் நதி மீளும்
டச்சு நாட்டின் நிஜ்மேகன் நகரத்தில் உள்ளது வால் நதி. சுவிட்சர்லாந்தில் உருவாகி, ஜெர்மனி வழியாக நெதர்லாந்து சென்று, அங்கிருந்து டச்சு நாட்டுக்குள் நுழைந்து நிஜ்மேகன் நகரத்தில் வளைந்து, வடக்குக் கடலை அடைகிறது. நிஜ்மேகனில் வளையும்போது, அந்தப் பகுதி மிகவும் குறுகலாக இருப்பதால், அங்கு அவ்வப்போது வெள்ளம் ஏற்படும். இதனால், வால் நதிக்கு இணையாக, ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு இன்னொரு ஓடையை டச்சு அரசு உருவாக்கியது.
இப்படி உருவாக்குவதில், அவர்களுக்குத் தொழில்நுட்ப ரீதியாக எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால், மக்களை அந்தப் புதிய ஓடையைப் பயன்படுத்தச் செய்வதுதான் பெரும் சவாலாக இருந்தது. எனவே நீச்சல், நீர் விளையாட்டுக்கள், உணவு விடுதிகள், இலக்கியத் திருவிழாக்கள் நடத்துதல் என்று அந்தப் புதிய ஓடையில் நிறைய விஷயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றால் கவரப்பட்ட மக்கள், இன்று அந்த ஓடையைத் தங்களுடையதாக நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு நதி இப்படித்தான் பாதுகாக்கப்படும். இது குறித்து, சூழலியல் இதழாளர் கோபிகிருஷ்ண வாரியார், தன் கட்டுரை ஒன்றில் இப்படி எழுதியிருக்கிறார்:
“2015-ம் ஆண்டு அடையாறில் வெள்ளம் ஏற்பட்டது இயற்கையால் அல்ல. முறையாகத் திட்டமிடாத வளர்ச்சிப் பணிகளால்தான். வால் நதியை டச்சு மக்கள் கொண்டாடுவதுபோல, அடையாறை மக்கள் கொண்டாடவில்லை. ஒரு நதியுடன் மக்கள் தங்கள் பொழுதுகளைச் செலவழிக்கும்போதுதான், நதிக்கும் மனிதர்களுக்குமான உறவு வலுப்படுகிறது. அது இரண்டு பக்கமும் நன்மை பயக்கும்.
துரதிர்ஷ்டவசமாக நம் மக்கள் நதியின் ஓரத்தில் தங்களின் பொழுதுகளைக் கடத்த விரும்பவில்லை. மெரினா, எலியட்ஸ் போன்ற கடற்கரையோரங்களில் கழிக்கிறார்கள். அங்கு பூங்கா, உணவு விடுதிகள், விளையாடுவதற்கான இடங்கள் என்று நிறைய வசதிகள் உள்ளன. இதுபோன்ற மக்கள் பயன்பாட்டுக்கான பொதுவெளியை (பப்ளிக் ஸ்பேசஸ்) ஏரி, நதி போன்றவற்றின் அருகில் ஏற்படுத்தத் தவறிவிட்டோம். இதனால்தான், நீர் இருக்கும்போது அவற்றைப் போற்றும் நாம், அவை காய்ந்து கிடக்கும்போது கைவிட்டுவிடுகிறோம். ஆற்றைச் சுத்தப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் அவசியம்தான். ஆனால், அதே அளவுக்கு அவசியம் இதுபோன்ற பொதுவெளிகள்.
நதிக்கரைகளில் கலைப் படைப்புகள் வைப்பது, அருங்காட்சியகங்கள் அமைப்பது, தெருவோர உணவுக் கடைகளை ஊக்குவிப்பது, பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்துவது போன்றவற்றை அறிமுகப்படுத்தினால், அங்கு மக்கள் வந்துகொண்டே இருப்பார்கள். மக்களுக்கும் நதிக்குமான உறவு உருவாகும். பிறகு, மக்கள் அந்த நதிகளைக் காப்பாற்றத் தொடங்குவார்கள்”.
நீர்நிலைகளின் ஓரத்தில் உள்ள பொதுவெளிகளால், மனிதர்களின் எதிர்மறைச் சிந்தனைகள் நேர்மறைச் சிந்தனைகளாக மாறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT