Published : 29 Jul 2017 12:06 PM
Last Updated : 29 Jul 2017 12:06 PM
வே
ங்கைப் புலிகளைக் கணக்கெடுக்கும் பணியை மத்திய அரசு கைவிட்டு விஞ்ஞானிகளிடமும் ஆய்வாளர்களிடமும் அந்தப் பணியை ஒப்படைக்க வேண்டுமென்று இந்தியாவின் முன்னணிப் புலிப் பாதுகாவலர் உல்லாஸ் காரந்த் வலியுறுத்துகிறார். புலிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கு தானியங்கி ஒளிப்படக் கருவிகளை முதலில் பயன்படுத்தியவர் இவர். பல அரசு அமைப்புகளில் அங்கம் வகித்திருந்தாலும், காட்டுயிர்ப் பாதுகாப்பு தொடர்பான அரசின் பல்வேறு கொள்கைகள் தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்து வருபவர்.
குத்துமதிப்பாக இந்தியாவில் மூன்றாயிரம் புலிகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவற்றில் உள்ள பெண் புலிகளில் ஆயிரம் கருவுற்றுக் குட்டிபோடும் சக்தியுடன் திகழ்பவை. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சராசரியாக இனப்பெருக்கம் செய்து மூன்று குட்டிகளை இவை ஈன முடியும்.
அப்படியாக ஓர் ஆண்டுக்கு 750 முதல் 1000 புலிகள் புதிதாகச் சேர்கின்றன. இதுதான் நிலைத்த எண்ணிக்கையென்றால், இறக்கும் புலிகளின் எண்ணிக்கையும் மதிப்பிடப்பட வேண்டும். நாம் புலிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும்போது, அவற்றின் எண்ணிக்கைக் குறைவை மட்டுமே அறிகிறோம்.
பல புலிகள் இறக்கின்றன. அத்துடன் அவை எப்படி இறந்தன என்பது நமக்குத் தெரியாது. இந்த மரணங்கள் கள்ள வேட்டைக்காரர்களால் நடத்தப்பட்டதா பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள்ளேயே கொல்லப்பட்டதா என்பது கவனத்துக்குரியது. துல்லியமான பல்வேறு நடைமுறைகளைப் பயன்படுத்தி இதைக் கண்காணிக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக அரசு அதிகாரிகள் இப்படிச் செய்வதில்லை.
புலிகளின் எண்ணிக்கை உயர்வது குறித்து, தற்போதைக்கு அரசு வட்டாரங்களிலாவது உற்சாக உணர்வு நிலவுகிறது. சமீபத்திய அரசுக் கணக்கெடுப்பில் 2,226 புலிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் உலகின் மொத்தப் புலித்தொகையான 3,890-ல் 60 சதவீதம் இந்தியாவில் இருப்பதாக அர்த்தமாகிறது.
இந்த உற்சாகத்துக்கு ஏதாவது அடிப்படை இருக்கிறதா? 1970-ல் ‘புரொஜக்ட் டைகர்’ திட்டத்தைத் தொடங்கியபோது, இரண்டாயிரம் புலிகள் இந்தியாவில் இருந்திருக்க வேண்டும். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாயிரம் புலிகள் இருக்கின்றன. நிச்சயமாக மற்ற நாடுகளைவிட மோசமற்ற ஒரு எண்ணிக்கைதான். அதனாலேயே நாம் பெரிதாகச் சாதித்துவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்ள முடியாது.
உங்களது மதிப்பீட்டின்படி இது பிரமாதமான தொகையில்லை என்று சொல்கிறீர்கள்? அப்படியென்றால் நம்மிடம் இருந்திருக்க வேண்டிய புலிகளின் எண்ணிக்கை என்ன?
இந்தியாவில் புலிகள் வாழ்வதற்கான காட்டுப் பகுதி மூன்று லட்சம் சதுர கிலோமீட்டர். ஆனால், அந்தப் பரப்பளவில் 10 சதவீதம்தான் புலிகளை இயற்கையாகவே வாழவைப்பதற்குப் பொருத்தமானது. காட்டின் சூழல் பெருமளவு மேம்பட வேண்டியிருக்கிறது.
2022-க்குள் புலிகள் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்கும் திட்டத்தை அரசு கடந்த ஆண்டு அறிவித்திருக்கிறதே.
இதெல்லாம் நடைமுறைக்குச் சற்றும் பொருந்தாத அறிவிப்பு. 30 வருடங்களில் இரட்டிப்பாக ஆக்க முடியாததை, ஐந்து வருடங்களில் எப்படி எட்ட முடியும்? இதெல்லாம் காரியத்துக்கு உதவாது. நாம் அந்த இலக்கை எட்டுவதற்குப் பாதுகாக்கப்பட்ட சரணாலயங்களின் வலைப்பின்னல் பரப்பளவை அதிகரிக்க வேண்டியது அவசியம். புலிகளே இல்லாத காட்டுப் பகுதிகளைப் புலிக் காப்பகங்களாக அறிவிப்பதால் மட்டும் புலிகளை எப்படிக் காப்பாற்ற முடியும்? பல புலிக் காப்பகங்களில் புலிகளே இல்லை. தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் என்பது வெறும் அதிகாரிகள் நிறைந்த அமைப்பாக மாறிவிட்டதாகத் தோன்றுகிறது.
மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் புலிகளின் பாதுகாப்புக்காக நிறைய நிதி ஒதுக்கி உண்மையான முயற்சிகளை நாம் எடுத்திருக்கிறோம். பண வசதியே இல்லாமல் இருந்த காலகட்டமான 1970-80-களில் இதைச் சாதித்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழல் பெரிதும் மேம்பட்டிருக்கிறது. கிராமப்புற வருவாய் அதிகரித்துள்ளது. வேட்டையாடுபவர்கள் முன்பைப் போல் தீவிரமாக இல்லை.
புலிகள், மற்ற வனவிலங்குகளின் பாதுகாப்புக்குக் கள்ள வேட்டை இன்னும் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறதா?
சட்ட நடவடிக்கைகள் ஓரளவு பயனைத் தந்திருப்பதால்தான், இத்தனை புலிகளாவது எஞ்சி இருக்கின்றன. ஆனால், இந்தச் செயல்திறனும் எல்லா இடங்களிலும் பரவலாகவில்லை. வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை காடுகளில் சட்டமென்பது செயல்படவேயில்லை. இதற்குச் சமூகரீதியானதும் கலாச்சாரரீதியானதுமான சில காரணிகள் உள்ளன. புலிக் காப்பகங்ளுக்கு மேலும் மேலும் பணத்தை ஒதுக்குவதை விட்டுவிட்டு, மேற்சொன்ன காரணிகளில் கவனத்தைச் செலுத்து வேண்டும்.
காசிரங்கா போன்ற இடங்களில், ஏகே-47 துப்பாக்கிகளுடன் வேட்டையாடிகள் வருகிறார்கள். மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், வனத்துறை அதிகாரிகளுக்குத் துப்பாக்கி வைத்திருக்கவே அதிகாரம் இல்லை. வெறும் லத்தியை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள்? முன்பைப் போல வேட்டைகள் பரவலாக இல்லாவிட்டாலும், கிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை 1980-களின் சூழ்நிலையே இன்றும் இருக்கிறது.
இந்தப் பிராந்தியங்களில் அரசு காவல் நடவடிக்கையை மேற்கொள்ளத் தவறிவிட்டதாகச் சொல்லலாமா?
அத்துடன் கலாச்சார நடைமுறைகளும் காரணமாக உள்ளன. அங்குள்ள மக்களில் பெரும்பான்மையினர் வேட்டையாடுகின்றனர். அத்துடன் வன மேலாண்மை அமைப்புகளிடம் கட்டுப்படுத்தும் அதிகாரமும் இல்லை. நாகலாந்தில், அரசு அதிகாரிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவே போராளிகள் குழுவினருக்குப் பாதுகாப்புப் பணம் அளிக்க வேண்டும். அப்படியான சமூகச் சூழலில், வனவிலங்குகளின் பாதுகாப்புக்கு எப்படி முன்னுரிமை தரமுடியும்? அவர்களிடம் சட்டரீதியான அதிகாரம் இருக்கலாம். ஆனால், அதைச் செயல்படுத்த முடியாது.
புலிகள் பாதுகாப்புக்காக அதிகம் பணம் செலவழிக்கப்படுவதாக நினைக்கிறீர்களா? சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகளுக்கு அதிகக் கவனம் கொடுக்கப்படுவதில்லையா?
சிறுத்தைகள், புலிகளைவிடச் சிறியவை. அவை புலிகளைவிட அதிக பரப்பளவு நிலத்தில் பரவியுள்ளன. புலிகளுக்கு மிக அதிகமாகப் பணம் செலவிடப்படுகிறது என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஆனால், நிச்சயமாக மற்ற உயிரினங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கவனம் குறைவாகவே இருக்கிறது. ஓநாய்களும் கானமயில்களும் இதற்கு எடுத்துக்காட்டு. அவை புலிகளுடன் தங்கள் வாழிடத்தைப் பகிந்துகொள்ளாததுதான் இதற்குக் காரணம்.
வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக உருவாகும் அழுத்தங்களால் மீண்டும் பழைய நாட்களைப் போன்று ஆயிரம் புலிகளுக்குக் குறைவான எண்ணிக்கைக்கு வீழ்ச்சியடைவதற்குச் சாத்தியமுண்டா? இல்லை அந்தக் காலத்தை நாம் கடந்து விட்டோமா?
என்னைப் பொறுத்தவரை அந்தப் பழைய காலத்தைக் கடந்துவிட்டோம். 1950-களில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நான் வளர்ந்த சூழ்நிலையில் புலிகள் அனைத்தும் இல்லாமலாகிவிட்டன. அப்போதைய சூழ்நிலைகள் அழுத்தம் நிறைந்தவை. அப்போது ஒரு ஆளுக்கு நாள் கூலி மூன்று ரூபாய்தான்.
புரதச்சத்துள்ள உணவு கிடைக்காத நிலை இருந்தது. இறைச்சித் தேவைக்காக மக்கள் வேட்டையாடினார்கள். விறகுக்காக மரம் வெட்டுதலும் அதிகமாக இருந்தது. தற்போது அப்படியான சூழல் முழுமையாக மாறிவிட்டது. நிலத்தைச் சார்ந்த மக்களின் எண்ணிக்கை முழுமையாகக் குறைந்துவிட்டது. கூலி அதிகமாகியுள்ளது.
இறைச்சிக்கான ஆதாரங்களும் அதிகரித்துள்ளன. சிக்கன் கிடைக்கும்போது, அதிக தொலைவு நடந்து புனுகுப்பூனையை வேட்டையாடுவதற்கு அவசியமில்லாமல் போகிறது. இன்று கென்-பெட்வா திட்டத்தைப் போல வளர்ச்சி அழுத்தங்கள் இருக்கின்றன. ஆனால், மேம்பாடு என்பது காட்டுயிர்களின் மீதான அழுத்தங்களையும் குறைத்துள்ளது.
உலகிலேயே நாம்தான் பத்தாவது பெரிய பொருளாதாரமாகத் திகழ்கிறோம். அறிவியல் வளர்ச்சியைப் பொறுத்தவரை உயர்ந்த நிலையிலிருக்கிறோம். அப்படிப்பட்ட பின்னணியில் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் புலிகளாவது நம்மிடம் இருந்திருக்க வேண்டும். மூன்றாயிரத்தை வைத்துக்கொண்டு நம்மை நாமே தட்டிக்கொடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
அந்த இலக்கை எட்டுவதற்கு எது பெரிய தடையாக இருக்கிறது?
மேம்பட்ட அறிவியலைப் பயன்படுத்திக் காட்டுயிர்களைப் பாதுகாப்பதில் அரசு மந்தமாக உள்ளது. தானியங்கி ஒளிப்படக்கருவிகளைப் பயன்படுத்திப் புலிகளை எண்ணும் தொழில்நுட்பத்தை 1993-ல் நான் கண்டறிந்தேன். ஆனால், இப்போதுதான் அது நடைமுறைக்கு வந்துள்ளது. அதற்குப் பிரதமர் தலைமையில் ஒரு ஆணையம் போட்டு, பழைய கணக்கிடுதல் முறையை அதிகாரிகள் கைவிடவேண்டும் என்று உத்தரவிட வேண்டியிருந்தது. (புலிகளின் பாதச்சுவடுகளை வைத்து கணக்கிடும் முறைதான் பின்பற்றப்பட்டு வந்தது). ஆனால், புதிய முறையும் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. அவர்கள் ஒப்பிட வாய்ப்பற்ற தரவு அட்டவணைகளிலிருந்து விவரங்களைச் சேர்க்கிறார்கள். கணக்கெடுக்கும் வேலையிலிருந்து அரசு வெளியேற வேண்டும். விஞ்ஞானிகள், ஆய்வு நிறுவனங்களின் கைகளில் அதை ஒப்படைக்க வேண்டும்.
முக்கியமான தடங்கல் என்னவென்றால், தரவுகளை அணுகுவதற்குப் போதுமான அளவு வசதியில்லை. இதற்கு ஒயில்டுலைப் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா (மத்திய வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்பு) போன்ற அமைப்புகள், ஒரு டஜன் விஞ்ஞானிகளுக்கு நம்ப முடியாத அளவுக்குப் பணத்தைக் கொடுத்துள்ளன. நான் நிர்வாகக் குழுவில் இருந்தபோது இத்தகவலை அறிந்துகொண்டேன். கானமயில்கள் முதல் புலிகள்வரை அத்தனை ஆராய்ச்சிகளிலும் ஏகாதிபத்தியம் செய்ததில்தான் இது முடிந்தது. சரியான எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
இருப்பினும், நேஷனல் சென்டர் பார் பயலாஜிகல் சயின்சஸ், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயன்ஸ் (ஐ.ஐ.எஸ்.சி.) போன்ற புகழ்பெற்ற அமைப்புகள் ஆய்வுக்காகக் காட்டுக்குள் செல்வதற்குக்கூட அனுமதி பெறுவதில் சிரமங்கள் உள்ளன. சமீபத்தில் இறந்த அரணை ஒன்றைச் சேகரித்ததற்காக ஐ.ஐ.எஸ்.சி.யைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். எனக்கு மட்டுமல்ல, காட்டுயிர் ஆய்வுக்குப் பொதுவாகவே தடைகள் இங்கே அதிகம்.
தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT