Published : 24 Jun 2017 12:08 PM
Last Updated : 24 Jun 2017 12:08 PM

37 ஆயிரம் உழவர்களை மாற்றிய நெல் திருவிழா

தேசிய நெல் திருவிழா, இதுவரை 37 ஆயிரம் உழவர்களை இயற்கை வேளாண்மையை நோக்கித் திருப்பியுள்ளது. அவர்கள் மூலமாகப் பாரம்பரிய விதை நெல் வகைகளைக் காப்பாற்றியும் உள்ளது.

வழக்கமாக ஆதிரெங்கத்தில் நடைபெறும் தேசிய நெல் திருவிழா, உழவர்கள் எளிதில் வந்து செல்ல வசதியாகத் திருத்துறைப்பூண்டி நகரிலேயே கடந்த வாரம் நடைபெற்றது. உழவர்கள், மாணவர்கள், இயற்கையை நேசிக்கும் இளைஞர்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள் என அரங்கத்திலும் அரங்கத்துக்கு வெளியிலும் நிரம்பி வழிந்தனர். ரசாயன உரங்களின் கலப்பில்லாமல் விவசாயத் தொழிலைச் செய்து வருகிற சாதனை உழவர்களின் சங்கமமாகவே நிகழ்ச்சி திகழ்ந்தது.

வறட்சி கண்டு அஞ்ச வேண்டாம்

நெல் திருவிழா ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன்:

வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைப் பாதிப்புகள் இல்லாத காலத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் ஒட்டுரக நெல்லைச் சாகுபடி செய்ய ரூ. 24 ஆயிரம் செலவு செய்து 36 மூட்டை (1,800 கிலோ) மட்டுமே மகசூல் கிடைக்கிறது. இதை விற்றால் செலவு போக 6 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆனால், பாரம்பரிய நெல் ரகங்களில் அதிக விளைச்சல் தரக்கூடிய தூயமல்லி, கிச்சலிச் சம்பா,கருடன் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, சேலம் சன்னா போன்ற ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்யலாம். இதில் செலவு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம். இவை சராசரியாக 20 மூட்டை விளையும். வெள்ளம்,வறட்சியைத் தாங்கி வளரும். ரூ. 30 ஆயிரத்துக்கு நெல்லை விற்றாலும் ரூ. 20 ஆயிரம் லாபம் ஈட்டலாம்.

மேலும் மதிப்புக்கூட்டி நெல்லை விற்கும்போது லாபம் இரண்டு மடங்காகும். அது உழவர்களின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது. இந்த விவரங்கள் உழவர்களிடத்தில் பரவிவருகிற அதேநேரத்தில், மக்களும் சாப்பிடும் உணவில் ரசாயனம் கலக்காமல் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர். தமிழக அரசும் ஆத்மா திட்டத்தின் கீழ் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உழவர்களை இயற்கை வேளாண்மைத் திட்டத்தில் பங்கெடுக்கச் செய்துள்ளது.

அரசு இயற்கை உழவர் விழா

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருவாரூர் வரதராஜன்:

வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய நெல், பாரம்பரிய ரகங்களில் மட்டுமே உள்ளது. இந்த ஆண்டு வறட்சியால் உயிரிழந்த உழவர்களில் ஒருவர்கூடப் பாரம்பரிய வேளாண் முறையைப் பின்பற்றியவர் அல்ல. இந்த நெல் திருவிழாவின் 11 ஆண்டு காலப் பயணத்தில் தமிழகம் முழுவதும் 37 ஆயிரம் உழவர்கள் பாரம்பரிய வேளாண்மையை நோக்கித் திரும்பியுள்ளனர். பல மாவட்டங்களில் தற்போது நடைபெற்றுவரும் நெல் திருவிழாக்களின் தாய்த் திருவிழாவாக இந்த விழா நடத்தப்படுகிறது. கேரளா, புதுச்சேரி உள்பட அண்டை மாநில அரசுகளே பாரம்பரிய வேளாண்மையை மேற்கொள்ள வேண்டும் என அம்மாநில உழவர்களிடம் பிரச்சாரம் செய்கிற அளவு விழிப்புணர்வு பரவலாகியுள்ளது.

இயற்கை முறைக்கு மாறுவது எப்படி?

கதிராமங்கலம் இயற்கை உழவர் ஸ்ரீராம்:

ஆண்டாண்டு காலமாக ரசாயன உரங்களைப் பயன்படுத்திய விளைநிலங்களை உடனடியாகப் பாரம்பரிய வேளாண்மைக்கு மாற்றுவதற்கு வழிமுறை உண்டு.

முதலில் களைகளைத் தரிசு வயல்களில் முளைக்கச் செய்ய வேண்டும். களைகள் முளைக்காத வயல்களில் பசுந்தாள் உரம், தக்கைப்பூண்டு போன்றவற்றை வளர்க்க வேண்டும். பின்னர் தண்ணீர் பாய்ச்சி களைகளை மடக்கி உழ வேண்டும். பின்னர் குப்பை உரம், சாணிப்பாலை வயலில் கரைத்துவிட்டு நொதிக்கச் செய்ய வேண்டும். சாகுபடிப் பணி தொடங்கும் முன் இதுபோன்று மண் வளத்தைப் பெருக்கிய பின்னர், இயற்கை முறைச் சாகுபடியை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

நான் 63 ஏக்கர் சாகுபடி செய்கிறேன். முற்றிலும் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதில்லை. இவ்வாறு விளைவிக்கிற அரிசிக்கு நல்ல வரவேற்புள்ளது. நெல்லை அப்படியே விற்றுவிடாமல் மதிப்புக்கூட்டல் செய்து விற்பனை செய்தால் நல்ல லாபத்தை ஈட்டலாம்.

நம்மாழ்வார் கனவை மெய்பித்த விழா

• 2007-ம் ஆண்டு 50 உழவர்களுடன் ஆதிரெங்கத்தில் முதல் நெல் திருவிழா தொடங்கியது. அந்த வகையில் இந்த ஆண்டு நெல் திருவிழா 11-வது ஆண்டு. தற்போது தேசிய நெல் திருவிழாவாக வளர்ந்துள்ளது.

• இந்தத் திருவிழா மூலம் இதுவரை 169 நெல் ரகங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்தும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. 30 வகை பாரம்பரிய அரிசி ரகங்களும் விற்பனைக்குக் கிடைத்தன.

• இந்த ஆண்டு தேசிய நெல் திருவிழாவில் 5 ஆயிரத்து 574 பேர் பாரம்பரிய விதை நெல்லைப் பெற்றுச் சென்றுள்ளனர்.

• கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பாரம்பரிய விதை நெல்லில் 74 சதவீத உழவர்கள் தாங்கள் பெற்றுச் சென்ற விதை நெல்லை விளைவித்து மீண்டும் மறுசுழற்சிக்கு திருப்பித் தந்துள்ளனர்.

• விழா நடைபெற்ற இரண்டு நாட்களும் கம்மங்கூழ், பாரம்பரிய அரிசியை பயன்படுத்தி சமைக்கப்பட்ட உணவே வழங்கப்பட்டது. நெருப்பை பயன்படுத்தாத சமையலை ருசிக்க ஏராளமானோர் ஆர்வம் காட்டினர்.

• நம்மாழ்வார் எப்படியெல்லாம் நடத்த நினைத்தாரோ அந்த திசையை நோக்கி நெல் திருவிழா செல்கிறது என நம்மாழ்வாரோடு பணியாற்றிய உழவர்கள் பலர் விழா குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தன்னம்பிக்கை நாயகன்

ரசாயன உரங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டவர் நெல் ஜெயராமன். அந்தப் பிரச்சாரம் மூலம் இயற்கை வேளாண் முறையால் 169 பாரம்பரிய விதை நெல்களை மீட்டெடுக்க உத்வேகமாக இருந்தவரும் இவர்தான். தற்போது புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளார். "நஞ்சில்லா உணவுத் தேடல்தான் தன்னை மீண்டுவரச் செய்துள்ளது. மற்ற உழவர்களையும் இயற்கை வேளாண்மைக்கு மாற்றும் முயற்சியைத் தொடருவேன்" எனத் தன்னை நலம் விசாரித்தவர்களிடம் உறுதிகூறிய ஜெயராமனை, சக உழவர்கள் 'தன்னம்பிக்கை நாயகன்' எனப் பாராட்டினர்.

வெள்ளை அரிசி மோகமும் பிளாஸ்டிக் அரிசியும்

தமிழக இல்லத்தரசிகளிடையே பிளாஸ்டிக் அரிசி இன்றைக்குப் பெரிய விவாதமாகியுள்ளது. நம்மிடையே நிலவும் வெள்ளை அரிசி மோகம்தான் இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம். கேரளத்தை சேர்ந்த நெல் ஆராய்ச்சியாளரான ஸ்ரீதர் இது குறித்து விளக்கினார்:

வெள்ளை அரிசிதான் தரமானது என்ற மோகம் என்றைக்குத் தொடங்கியதோ, அன்றைக்கே நோய் பாதிப்பு அதிகரித்துவிட்டது. இது தமிழகத்தில் அதிகமாகவுள்ளது.

நெல்லை அறைக்கும்போது கிடைக்கும் அரிசியில் ஒட்டிக்கொண்டிருக்கும் தவிட்டில்தான் சத்துகள் நிறைந்துள்ளன. தவிடு ஒட்டியிருந்தால் அரிசி வெண்மையாக இருக்காது. அதற்காக அரிசியை பாலிஷ் போட்டு பட்டை தீட்டி சாப்பிடத் தொடங்கினர். இயல்பாகவே வெண்மை நிறம் கொண்ட கர்நாடகப் பொன்னி அரிசியையே பாலீஷ் போட்டால்தான் விற்க முடியும் என்ற நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். அந்த அளவுக்கு வெள்ளை அரிசி மோகம் தமிழகத்தைப் பிடித்தாட்டுகிறது.

தவிடு நீக்கப்படாத அரிசியில் 60-க்கும் மேற்பட்ட மூலிகைத் தன்மைகள் உள்ளன. அரிசியை முற்றிலும் பாலீஸ் போட்டு வெள்ளை அரிசியாக சமைப்பதால், அதில் கார்போஹைட்ரேட் (மாவு) சத்து மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள கனிமச்சத்து, வைட்டமின்கள் அனைத்தும் தவிட்டோடு போய் விடுகின்றன. அரிசியைத் தீட்டும்போது கிடைக்கிற தவிட்டைதான் பிஸ்கட் கம்பெனிகள், தனியார் ஊட்டச்சத்து பான தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்தி காசாக்குகின்றனர். இந்த உண்மையை உணர்ந்து, வெள்ளை அரிசி மோகத்தை தூக்கி எறிந்தால் பிளாஸ்டிக் அரிசி அச்சத்தையும் விரட்டியடிக்கலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x